Ad Code

Responsive Advertisement

பிச்சையெடுக்கும் குழந்தைகளை மீட்க தமிழகம் முழுவதும் சோதனை: உயர் நீதிமன்றத்தில் காவல்துறை உறுதி

தமிழகம் முழுவதும் பிச்சையெடுக்கும் குழந்தைகள், சட்டத்தை மீறி பணியில் அமர்த்தப்படும் குழந்தைகளை மீட்க தொடர் சோதனைகள் நடத்தப்படும் என உயர் நீதிமன்றத்தில் காவல்துறை உறுதி அளித்துள்ளது.
சென்னையில் பிராட்வே பகுதியில் தெரு வோரம் தூங்கிய 2 குழந்தைகள் கடந்த ஆண்டு கடத்தப்பட்டன.
இந்த குழந்தை களை கண்டுபிடித்து ஆஜர்படுத்தக்கோரி எக்ஸ்னோரா அமைப்பைச் சேர்ந்த நிர்மல் உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, வி.பாரதிதாசன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தென் சென்னை கூடுதல் காவல் ஆணையர் கே.சங்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி நிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: உயர் நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த ஏப்ரல் 20-ம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் குழந்தைகளை மீட்பது தொடர்பாக கூட்டம் நடைபெற்றது. அதில், போலீஸ் உயர் அதிகாரிகள், குழந்தைகள் நல குழும உறுப்பினர்கள், சமூக பாதுகாப்புத்துறை அதிகாரி, தன்னார்வ அமைப்பினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர், 47 குழுக்கள் அமைக்கப்பட்டு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது 94 குழந்தைகள் மீட்கப்பட்டனர். அதில், 21 குழந்தைகளின் பெற்றோர் அடையாளம் காணப்பட்டனர். மீதமுள்ளவர்கள் குழந்தைகள் நல குழுமத்தின் உத்தரவுப்படி சிறார் இல்லங்களில் தங்க வைக்கப்பட்டனர். மேலும், சிறார் நீதி சட்டப்பிரிவு 76-ன் கீழ் 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டது.

இதேபோல கோவை மாநகர ஆணையர் தாக்கல் செய்த அறிக்கையில்,”கோவையில் நடத்தப்பட்ட சோதனையில் 91 குழந்தைகள் மீட்கப்பட்டனர்” என தெரிவிக்கப்பட்டது.போலீஸாரின் இந்த நடவடிக்கைக்கு நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர்.பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தர வில் கூறியிருப்பதாவது: சட்டத்தை மீறி குழந்தைகளை பணியில் அமர்த்தப்படும் குழந்தைகள், பிச்சையெடுக்கும் குழந்தைகள் மீட்கப்பட்டு அவர்களுக்கு மறுவாழ்வு கிடைப்பதை தமிழக டிஜிபி உறுதி செய்வார் என நாங்கள் நம்புகிறோம்.

அடுத்த விசாரணை தேதியின்போது மற்ற குழந்தைகளும் மீட்கப்பட்டு மாவட்ட குழந்தைகள் நல குழுமம் முன்பு ஆஜர்படுத்தப்படுவார்கள் என நாங்கள் நம்புகிறோம். எனவே, இதுதொடர்பாக நிலை அறிக்கையை மாவட்ட குழந்தைகள் நல குழுமம் வரும் ஜூன் 9-ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் உத்தரவிட்டனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement