Ad Code

Responsive Advertisement

NHIS CARD வினியோகத்தில் குளறுபடி! மொத்தமா இருக்கு பிரிச்சுட்டு போங்க!

கோவையிலுள்ள அரசு அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு வினியோகிப்பதற்காக, சென்னையில் அச்சிட்டு அனுப்பிவைத்த, அரசு காப்பீட்டுத்திட்ட அட்டைகள் துறை வாரியாகவோ, வரிசையாகவோ இல்லாமல் மொத்தமாக பண்டல் செய்யப்பட்டிருந்தன. இவற்றைப் பிரித்து துறை வாரியாக வினியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசின் கீழ் பணிபுரியும், அதிகாரிகள் முதல் கடைநிலை பணியாளர்கள் வரை, அனைவரும் மருத்துவ அறுவை சிகிச்சை செய்து கொள்ள அரசின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.


இத்திட்டம் தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது.கடந்த நான்கு ஆண்டுகளில், 'ஸ்டார் ெஹல்த்' நிறுவனம் காப்பீட்டு வசதிகளை வழங்கி வந்தது. இந்த ஆண்டு, 'யுனைட்டெட் இந்தியா இன்சூரன்ஸ்' நிறுவனம் காப்பீட்டு வசதியை வழங்குகிறது.

கோவை மாவட்டத்தில், 80 அரசு மற்றும் அரசுத்துறையை சேர்ந்த, 919 அலுவலகங்கள் உள்ளன. இதில், 33 ஆயிரத்து, 890 பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.இவர்களுக்கு வரும் நான்காண்டுகளுக்கு, 'யுனைட்டெட் இந்தியா இன்சூரன்ஸ்' நிறுவனம் காப்பீட்டு வசதியை வழங்கியுள்ளது. அதிக பட்சம், நான்கு லட்சம் ரூபாய் வரையிலான தொகைக்கு, மருத்துவ அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம். இதற்காக ஒவ்வொரு அரசு ஊழியரின் மாதாச் சம்பளத்திலிருந்து, மாதந்தோறும், 180 ரூபாய் பிடித்தம் செய்யப்படுகிறது.ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறையும், அரசு காப்பீட்டுத்திட்டம், அரசுப்பணியாளர்களுக்கு புதுப்பிக்கப்படும். 

இதற்கென்று விண்ணப்பங்கள், வழங்கப்பட்டு, அவற்றை பூர்த்தி செய்து அரசுப்பணியாளர்கள் அந்தந்த துறை தலைவரிடம் சமர்பிப்பர்.அப்படி புதுப்பிக்கப்பட்ட மருத்துவ காப்பீட்டுத்திட்ட அட்டைகள், சென்னையிலிருந்து, பண்டல் பண்டல்களாக அட்டை பெட்டியில், 'பேக்கிங்' செய்து, கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள, மாவட்ட கருவூலத்துக்கு நேற்று வந்தன. அவை துறை வாரியாக இல்லாமல், ஒரு துறையோடு மற்றொரு துறையினரின் அட்டைகளும் கலந்திருந்திருந்தன. பண்டலைப் பிரித்துப் பார்த்ததும், கருவூலப் பணியாளர்கள் மூர்ச்சையடைந்தனர்.துறை வாரியாக அட்டைகளை பிரித்தெடுப்பது பிரம்மப்பிரயத்தனம் என்பதால், வெவ்வேறு அரசுத்துறைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு, துறை வாரியாக மாவட்ட கருவூலத்துக்கு வரவழைக்கப்பட்டனர். 

அவர்கள் அனைத்து பண்டல்களையும் பிரித்து, ஒவ்வொரு அட்டையாக பார்த்து தங்களது துறையைச் சேர்ந்தவர்களின் அட்டைகளை பிரித்தெடுத்தனர். பின் அவற்றை, வரிசைப்படி அடுக்கி, ரப்பர் பேன்டை கொண்டு கட்டி, அதன் மேல் வெள்ளைத்தாளில் துறைப்பெயரையும், பிரிவையும் எழுதி அடையாளப்படுத்தினர்.

இது குறித்து மாவட்ட கருவூல அலுவலர் பொறுப்பு நடராஜன் கூறியதாவது:மாவட்ட கருவூலம், 'ஸ்கேன்' செய்து கொடுத்த தகவலின் அடிப்படையில், காப்பீட்டு திட்ட அட்டைகளை 'யுனைட்டெட் இந்தியா இன்சூரன்ஸ்' நிறுவனம் அச்சடித்து, பண்டல் பண்டல்களாக அட்டை பெட்டியில் 'பேக்கிங்' செய்து மாவட்ட கருவூலத்துக்கு அனுப்பி வைத்தது.அட்டைகள் வரிசைப்படி முறையாக பண்டல் செய்யப்படாமல் மொத்தமாக இருந்தன. இதை பெரிய தவறாக எடுத்துக்கொள்ளக்கூடாது. மாவட்ட கருவூலப்பணியாளர்கள், அரசின் வெவ்வேறு துறை சார்ந்த பணியாளர்களைக் கொண்டு, அட்டைகளை துறைவாரியாகப் பிரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.இரண்டொரு நாட்களில் துறை வாரியாக பிரித்துவிடுவர். அதன் பின் ஒவ்வொரு துறை பொறுப்பாளர்களையும் அழைத்து, காப்பீட்டு திட்ட அட்டைகளை வினியோகம் செய்து விடுவோம். இதனால் எந்த பிரச்னையும் இல்லை. வழக்கமான பணியோடு சேர்த்து கூடுதலாக இப்பணியை மேற்கொள்ளவேண்டியுள்ளது; அவ்வளவுதான். இதை எல்லாம் பெரிய குறையாகவோ, பிரச்னையாகவோ எடுத்துக்கொள்ளக்கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.

புலம்பும் பணியாளர்கள்!33 ஆயிரம் அட்டைகளையும் பார்த்து, அதில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள ஒவ்வொரு பெயரையும் படித்துப்பார்த்து, துறையை அறிந்து பிரிக்க வேண்டும். அதற்கு ஆங்கில அறிவு கட்டாயம். கருவூலத்தில் தற்போது அட்டையை பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் பணியாளர்களில் பெரும்பாலானவர்கள், ஐம்பது வயதை கடந்தவர்கள்; அலுவலக உதவியாளர்கள். இவர்களால் அட்டையை பிரித்தெடுக்க முடியவில்லை. 'ஆங்கிலத்திலுள்ள எழுத்தை படிக்க முடியவில்லை என்றும்; இது தங்களுடைய வேலை இல்லை என்றும்' புலம்பித் தவிக்கின்றனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement