Ad Code

Responsive Advertisement

எட்டாம் வகுப்பில் பேரிடர் மேலாண்மைப் பாடம் அறிமுகம்

தமிழகத்தில் எட்டாம் வகுப்பில் மூன்றாம் பருவத்துக்கான சமூக அறிவியல் பாடத்தில் பேரிடர் மேலாண்மைப் பாடம் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் என, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் தெரிவித்தது. இதுதொடர்பாக அந்த நிறுவனம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

மாணவர்களுக்கு கல்வியோடு சுகாதாரம், பாதுகாப்பு, முதலுதவி போன்றவற்றில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பேரிடர் காலங்களில் உயிர் காப்பதற்கு முக்கியமான பேரிடர் மேலாண்மை குறித்து விழிப்புணர்வும் மாணவர்களுக்குத் தேவை என்பதை உணர்ந்து 7,9,10 ஆகிய வகுப்புகளுக்கு சமூக அறிவியல் பாடங்களில் பேரிடர் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

 2015-16-ஆம் கல்வியாண்டில் 8-ஆம் வகுப்பு மூன்றாம் பருவத்துக்கான சமூக அறிவியல் பாடத்திலும் இது இணைக்கப்பட உள்ளது. அனைத்து ஆசிரியர்களுக்கும் பேரிடர் மேலாண்மை குறித்த பயிற்சி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவன கல்வியாளர்களுக்கும், அனைத்து வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்களுக்கும், தொடக்கக் கல்வி பட்டயப் பயிற்சி மாணவர்கள், அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கும் இந்தப் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இது தொடர்பான 2 நாள் பயிற்சியை பள்ளிக் கல்வி அமைச்சர் கே.சி. வீரமணி சென்னையில் புதன்கிழமை தொடக்கிவைத்தார். அப்போது, பயிற்சிக் கையேட்டையும் அவர் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வி செயலாளர் டி.சபிதா, அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி, தமிழ்நாட்டுப் பாடநூல் - கல்வியியல் பணிகள் கழக மேலாண் இயக்குநர் மைதிலி ராஜேந்திரன், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவன இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement