Ad Code

Responsive Advertisement

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு: இணையதளப் பதிவில் புதிய முறைகள்; தேர்வாணையம் வெளியிட்டது

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளை எழுதும் விண்ணப்பதாரர்களுக்கு புதிய முறைகளை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, தேர்வாணையம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும் நிரந்தரப் பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனைச் செய்யாதவர்கள் உடனே அதனை மேற்கொள்ள வேண்டும். இந்த நிரந்தரப் பதிவைத் தொடர்ந்து, பயனாளர் குறியீடு, கடவுச்சொல் ஆகியன கிடைக்கப் பெறும்.

இதன் மூலம், விண்ணப்பதாரர்கள் தங்களது தன் விவரப் பக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம். இந்தப் பக்கத்தில் உள்ள விவரங்களை தேவைப்படும் போது மாற்றவும், கூடுதல் விவரங்களை பதிவு செய்யவும் முடியும். 

சலுகை பெற்ற விவரங்கள்: ஒவ்வொரு தேர்வின் போதும், விண்ணப்பத்தின் விவரங்களை தன் விவரப் பக்கத்தில் விண்ணப்பதாரர்கள் தெரிந்து கொள்ளலாம். தேர்வுக்காகச் செலுத்திய கட்டண விவரங்களையும் அறிந்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் தங்களது அடையாளத்துக்காக பள்ளி இறுதிச் சான்றிதழின் பதிவெண், தேர்ச்சி பெற்ற மாதம், ஆண்டு ஆகியவற்றை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.

தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது கடவுச் சொல்லை மறந்து விட்டால் தேர்வாணைய அலுவலகத்தை தொடர்பு கொள்ளத் தேவையில்லை. அவர்களே கடவுச் சொல்லை மீட்டு எடுக்கலாம். விண்ணப்பிக்கும் பதவிக்குத் தேவைப்படும் அனைத்துச் சான்றிதழ்களையும் தேர்வாணையம் கேட்கும் போது அவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இதனால், விண்ணப்பதாரர்கள், சான்றிதழ் சரிபார்ப்புக்கு நேரில் அழைக்கப்படுவது தவிர்க்கப்படும். சான்றிதழ்களில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால், அந்த விண்ணப்பதாரர்கள் மட்டும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு நேரில் அழைக்கப்படுவர். பதிவேற்றம் செய்யப்படும் சான்றிதழ்கள் தெளிவில்லாமல் இருந்தால் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பம் எந்தவித அறிவிப்பும் இன்றி நிராகரிக்கப்படும்.

நிரந்தரப் பதிவு, இணையவழி விண்ணப்பத்துக்கு விண்ணப்பிக்கும் முறை குறித்த விவரங்கள்  www.tnpsc.gov.in, www.tnpscexams.net  ஆகிய இணையதளங்களில் அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை 1800 425 1002 என்ற கட்டணமில்லாத தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று தேர்வாணைய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement