Ad Code

Responsive Advertisement

பள்ளி ஆசிரியரின் இடமாறுதல்; குழந்தைகளை அனுப்ப பெற்றோர் மறுப்பு!

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள விளங்குளத்தூரில், பள்ளி ஆசிரியரின் இடமாறுதலை கண்டித்து, 8 நாட்களாக குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுத்து வருகின்றனர். அந்த குழந்தைகளுக்கு கிராம இளைஞர்கள் கோயில் மரத்தடியில் பாடம் நடத்துகின்றனர்.

விளங்குளத்தூர் அரசு துவக்கப் பள்ளியில் தமிழ் வழி மற்றும் ஆங்கில வழியில் பாடங்கள் கற்பிக்கப்படுகிறது. இங்கு 94 மாணவர்கள் படிக்கின்றனர். ஒரு தலைமை ஆசிரியர் உட்பட 3 ஆசிரியர்களும் பணியில் உள்ளனர். இதில் ஒரு ஆசிரியர் இடமாறுதல் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக வேறு பள்ளியில் இருந்து ஒரு ஆசிரியர் தற்காலிகமாக பணியில் உள்ளார். இப்பள்ளிக்கு நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்கும் வரை, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோர் போராட்ம் நடத்தி வருகின்றனர்.

அவர்களது குழந்தைகளுக்கு வி.சுப்பிரமணியபுரத்தில் உள்ள கோயில் மரத்தடியில், கிராம இளைஞர்கள் பாடம் சொல்லி கொடுத்து வருகிறார்கள். இதனால் மாணவர்கள் இன்றி பள்ளி வகுப்பறைகள் வெறிச்சோடி கிடக்கிறது. 

இதுகுறித்து அப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராஜலட்சுமி கூறுகையில், முதுகுளத்தூரில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்பாமல், அரசு பள்ளியில் ஆங்கில வழி கல்வி பயிலலாம் என, உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் உறுதியளித்ததால், மாணவர்கள் ஆரம்ப கல்விக்காக வெளியூர்களுக்கு செல்லக்கூடாது என கிராம மக்கள் தீர்மானம் நிறைவேற்றி இருந்தனர். ஆனால், தற்போது ஆசிரியர் பற்றாக் குறையால் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் கடந்த 8 நாட்களாக பெற்றோர்கள் போராட்டம் நடத்தி வருகிறோம், என்றார்.

கிராம தலைவர் ராஜேந்திரன் கூறுகையில்,நிரந்தர பணி யிடத்தில் ஆசிரியரை நியமிக்காமல், கல்வித்துறை அதிகாரிகளின் மெத்தனம் காட்டுவதால், இனி வரும் காலங்களில் அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை குறையும் அபாயம் உள்ளது. நிரந்தர பணியிடத்தில் ஆசிரியரை நியமிக்கக்கோரி, கலெக்டரிடம் முறையீடு செய்தும் நடவடிக்கை இல்லை, என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement