Ad Code

Responsive Advertisement

5 மாவட்டங்களில் புதிய அரசு ஐ.டி.ஐ - முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

நடப்பு ஆண்டில் தஞ்சை, புதுகை, விருதுநகர், பெரம்பலூர், விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களில் 1000 மாணவர்கள் தொழிற் பயிற்சி பெறும் வகையில் விடுதியுடன் கூடிய அரசு ஐடிஐ- க்கள் (Industrial Training Institutes) தொடங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.இது தொடர்பாக பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவிக்கும்போது, 

"தமிழகத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏழை, எளிய குடும்பங்களைச் சார்ந்த மாணவ, மாணவியர்களின் நலனுக்காகவும், தொழிற் திறன் பெற்ற, மனித வளத்தை உருவாக்குவதற்காகவும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிற் பயிற்சி நிலையங்கள் அரசால் தொடங்கப்பட்டு, செயல்பட்டு வருகின்றன.தமிழகத்தில் தற்போது 77 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இத்தொழிற் பயிற்சி நிலையங்கள் மூலம் 45 பொறியியல் மற்றும் 20 பொறியியல் அல்லாத தொழிற் பிரிவுகளில் 28,259 மாணாக்கர்களுக்குபயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த நான்கு ஆண்டுகளில் 3,000 மாணவர்கள் தொழிற்பயிற்சி பெறும் வகையில் விடுதி வசதியுடன் கூடிய 15 புதிய அரசு தொழிற் பயிற்சி நிலையங்களைத் தொடங்கிட உத்தரவிடப்பட்டது. அதன்படி 15 தொழிற்பயிற்சி நிலையங்கள் துவங்கப்பட்டுள்ளன.அண்மையில் வெளியான இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பால் அதாவது ASSOCHAM-ஆல் தொழில் வளர்ச்சி குறித்து மேற்கொள்ளப்பட்ட மாநிலங்களுக்கு இடையேயான ஒப்பு நோக்கு ஆய்வின்படி, தமிழ்நாடு முதல் இடத்தினைப் பெற்று, வளர்ச்சிப் பாதையில் உள்ளது. தொழிற்துறை உற்பத்தியிலும் மற்றும் வேலை வாய்ப்பு உருவாக்குவதிலும் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.


இதனால் திறன் பயிற்சி பெற்றவர்கள் அதிக அளவில் தேவைப்படுகின்றனர்.தொழிற் பயிற்சி நிலையங்களில் சேர்ந்து கல்வி பயில விழையும் மாணாக்கர்களின் ஆர்வத்தை நிறைவு செய்யவும், தமிழ்நாட்டில் திறன் மிகுந்த தொழிலாளர்களின் தேவையினை ஈடு செய்யவும், இத்தகைய பயிற்சி மையங்கள் அரசின் சார்பில் கூடுதலாக தொடங்கப்பட வேண்டியதன் அவசியத்தை, கருத்தில் கொண்டு, நடப்பாண்டில் தஞ்சாவூர் மாவட்டம் - ஒரத்தநாடு, புதுக்கோட்டை மாவட்டம் - விராலிமலை, விருதுநகர் மாவட்டம் - சாத்தூர், பெரம்பலூர் மாவட்டம் - ஆலத்தூர் மற்றும் விழுப்புரம் மாவட்டம் - திண்டிவனம் ஆகிய ஐந்து இடங்களில் 1,000 மாணவர்கள் தொழிற் பயிற்சி பெறும் வகையில் விடுதியுடன் கூடிய புதிய அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள் 45 கோடியே 97 கோடி ரூபாய் செலவில் தொடங்கப்படும்.அரசின் இந்த நடவடிக்கைகள் மூலம் வருங்காலத்தில் தொழிற் திறன் வாய்ந்த மனிதவளம் அதிகரிப்பதற்கு வழிவகை ஏற்படுவது மட்டுமல்லாமல் தொழில் உற்பத்தியைப் பெருக்குவதற்கும் வழிவகை ஏற்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார். 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement