Ad Code

Responsive Advertisement

வீடுகளுக்கு மானிய விலையில் நான்கு 'எல்.இ.டி., பல்பு'

வீடுகளுக்கு, 10 ரூபாய் விலையில், 'எல்.இ.டி., பல்பு' வழங்க, மின் வாரிய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். மத்திய மின் துறை அமைச்சகம், விளக்கு மூலம் மின்சாரம் சேமிக்கும் திட்டத்தை, 2009ல் அறிமுகம் செய்தது. இத்திட்டத்தின் கீழ், வீட்டு மின் இணைப்புக்கு, குறைந்த திறன் குண்டு பல்புக்கு பதில், அதிக திறன் கொண்ட, 'காம்பக்ட் புளோரசன்ட்' என்ற 'சி.எப்.எல்., பல்பு', 15 ரூபாய் என்ற விலையில் வழங்கப்பட்டது. 

தமிழகத்தில், கடலுார் மாவட்டம், சிதம்பரத்தில், 2010ல், 1,500 வீடுகளுக்கு, 'சி.எப்.எல்., பல்பு'கள் வழங்கப்பட்டன. பின், மின் வாரியம் சார்பில், இலவச மின் இணைப்பு உள்ள, குடிசை வீடுகளுக்கு, ஒரு சி.எப்.எல்.,பல்பு இலவசமாக வழங்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி, மானிய விலையில், 'லைட் எமிடிடிங் டயாட்ஸ் - எல்.இ.டி.,' பல்பு வழங்கும் திட்டத்தை கடந்த ஜன., மாதம், டில்லியில் துவக்கி வைத்தார். அதன்படி, வெளிச்சந்தையில், 500 ரூபாய் - 750 ரூபாய்க்கு விற்கும், 'எல்.இ.டி., பல்பு', 130 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. மின் நுகர்வோர், 10 ரூபாய் முன் பணம் செலுத்தி, 'எல்.இ.டி., பல்பை' பெற்றுக் கொள்ளலாம். பின், மின் கட்டணம் செலுத்தும் போது, 12 தவணைகளில், 120 ரூபாயை செலுத்தலாம்.

மத்திய அரசு, ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கும் பகுதிகளில், மானிய விலையில், 'எல்.இ.டி., பல்பு' வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்த மாநில அரசுகளை அறிவுறுத்தி உள்ளது. அதன்படி, தமிழகத்தில், சென்னை, கோவை உள்ளிட்ட, 25க்கும் மேற்பட்ட நகரங்களில், 10 ரூபாய் விலையில், 'எல்.இ.டி., பல்பு' வழங்க, மின் வாரிய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். 
இதுகுறித்து, எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:சாதாரண குண்டு பல்பு, 60 வாட்ஸ்; சி.எப்.எல்., 15 வாட்ஸ்; எல்.இ.டி., ஏழு வாட்ஸ் ஆகியவற்றின் மூலம் ஒரே வெளிச்சம் தான் கிடைக்கும்.மின் நுகர்வோரிடம், 10 ரூபாய் மட்டும் பெற்றுக் கொண்டு, 'எல்.இ.டி., பல்பு' வழங்கலாமா அல்லது மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ள, 130 ரூபாய்க்கு, 12 தவணைகளில் வழங்கலாமா என்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும், மானிய விலையில், ஒருவருக்கு, நான்கு எல்.இ.டி., பல்பு வழங்கும் திட்டத்தை, சட்டசபை மானிய கோரிக்கையில், அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார். இவ்வாறு, அவர் கூறினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement