Ad Code

Responsive Advertisement

ஆசிரியர்களிடம் சந்தேகம் கேட்க மாணவர்கள் தயங்கக்கூடாது

ஆசிரியர்களிடம் சந்தேகம் கேட்க மாணவர்கள் தயக்கமோ, அச்சமோ படக் கூடாது என, கடலோர காவல்படை கூடுதல் இயக்குநர் சைலேந்திரபாபு தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டம், வளையப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி பொன்விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எஸ்.கோபிதாஸ் தலைமை வகித்தார். பள்ளித் தலைமையாசிரியர் சுப்பிரமணி வரவேற்றார்.

காலை நடைபெற்ற நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி பங்கேற்று, பொன்விழா நினைவு வளைவு, திருவள்ளுவர், பாரதியார் சிலைகளைத் திறந்துவைத்தார். மேலும்,
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 பொதுத் தேர்வில் முதல் மூன்று மதிப்பெண்களைப் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகளை வழங்கினார்.
மாலையில் நடைபெற்ற விழாவில் கடலோர காவல்படை கூடுதல் இயக்குநர் சைலேந்திரபாபு பங்கேற்று, கணினி ஆய்வகத்தைத் திறந்து வைத்துப் பேசியது:

மாணவர்கள் இலக்கு நிர்ணயம் செய்து படிக்க வேண்டும். அதிகாலையில் படிக்க வேண்டும், படித்த பாடங்களை எழுதிப் பார்க்க வேண்டும். ஆசிரியரிடம் சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்வதில் மாணவர்கள் அச்சப்படக் கூடாது.

பெற்றோர் படும் சிரமங்களில் சிறிதளவு கூட குழந்தைகளுக்கு சிரமம் இல்லை. தேர்வுகளில் தோல்வியடைவது, படித்துவிட்டு வேலையில்லாமல் இருப்பதைவிட, நன்றாகப் படிப்பதில் சிரமமில்லை என்பதை மாணவர்கள் உணர்ந்து, தேர்வுகளில் சிறந்த மதிப்பெண் பெற வேண்டும் என்றார்.

ஆர்எம்எஸ்ஏ இணை இயக்குநர் குமார், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஆர். செந்தில்குமார், கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் தாமரை, மாவட்டக் கல்வி அலுவலர் ஞானஜோதி, பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர் மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவில் பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழா ஏற்பாடுகளை பொன்விழாக் குழுத் தலைவர், ஊராட்சி மன்றத் தலைவர் ஆனந்தகுமார், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் - ஆசிரியர் கழகத்தினர் செய்தனர். உதவித் தலைமையாசிரியர்
நடராஜன் நன்றி கூறினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement