Ad Code

Responsive Advertisement

தேர்ச்சி பெற்றும் மேல்நிலைக் கல்வி மறுப்பு: 50 சதவீத மாணவர் எதிர்காலம் கேள்விக்குறி

பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வின் வாயிலாக, தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அந்தந்த பள்ளிகளில், மேல்நிலைக்கல்வியில் சேர அனுமதி மறுக்கப்படுவதால், 50 சதவீத மாணவர்களின் உயர்கல்வி கனவு கேள்விக்குறியாகியுள்ளது.

கடந்த வாரம் பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகளை அரசு தேர்வுத்துறை வெளியிட்டது. தொடர்ந்து, இம்மாணவர்கள், அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்று, வேலைவாய்ப்பு பதிவுப் பணிகளை அந்தந்த பள்ளிகளில் மேற்கொண்டு வருகின்றனர்.ஆனால், பெரும்பாலான தனியார், அரசு பள்ளிகளில் தேர்வில் தோல்வியடைந்து, பின் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு இடம் அளிக்க மறுத்துவிடுவதால் பெற்றோர் அலைக்கழிப்புக்கு ஆளாகின்றனர். இக்கல்வியாண்டில், அதிகப்படியான எண்ணிக்கையில் மாணவர்கள், 400க்கும் மேல் மதிப்பெண்களை பெற்றதால், குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, கலைப் பிரிவில் இடம் என்பதே குதிரைக்கொம்பாகவே இருந்தது.

இந்நிலையில், தேர்வில் தோல்வியடைந்து பள்ளியின் தேர்ச்சி விகிதத்தை குறைத்த மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க நிர்வாகங்கள் தயக்கம் காண்பித்து வருகின்றன. மிகவும் குறைந்த அளவிலான பள்ளிகளில், தொழில்கல்வி பாடப்பிரிவு செயல்படுவதால், அப்பிரிவில் சில மாணவர்கள் சேர்கின்றனர்.பிளஸ்2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் மீண்டும் தேர்வெழுதி கல்லுாரிகளில் சேர்வது எளிது. ஆனால், பத்தாம் வகுப்பில் தோல்வியடையும் மாணவர்கள் பின் தேர்ச்சி பெற்று, அதே பள்ளியிலோ, வேறு பள்ளிகளிலோ பிளஸ்1 வகுப்பில் சேர்வது மிகவும் கடினம். பிளஸ்2 பொதுத்தேர்வில், 100 சதவீத தேர்ச்சி விகிதம் பெற வேண்டும் என்ற நோக்கில், இம்மாணவர்கள் பள்ளிகளில் சேர்க்கப்படுவில்லை.

பொதுத்தேர்வுகளில் தோல்வியடைந்து தேர்ச்சி பெறுபவர்களில், 10 சதவீதம் பேர் மீண்டும் அரசு மற்றும் சில தனியார் பள்ளிகளில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்; 40 சதவீதம் பேர் கட்டாயத்தின் பேரில், தனித்தேர்வர்களாக கல்வியை தொடர்கின்றனர்; மீதமுள்ள, 50 சதவீதத்தினர் படிப்பை பாதியில் நிறுத்தி விடுவதாக, கல்வியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

'குழந்தை தொழிலாளராக மாறும் அவலம்':


கல்வியாளர் பாரதி கூறுகையில், ''பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில், தோல்வியடைந்து சிறப்பு துணைத்தேர்வுகளின் வாயிலாக தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு கல்வியை தொடர பெரும்பாலும் வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது. இதில், 50 சதவீதத்தினர் உயர்கல்வியை தொடர முடியாமல், குழந்தை தொழிலாளர்களாக்கப்படுகின்றனர். மாணவிகள் சிலர், இளம் வயதில் திருமணம் போன்ற பிரச்னைகளில் மாட்டிக்கொண்டு எதிர்காலத்தை இழக்கின்றனர். எனவே, முதன்மை கல்வி அதிகாரி சிறப்புக்குழு அமைத்து, ஒவ்வொரு பள்ளியிலும் தோல்வியடைந்த மாணவர்களின் தற்போது நிலைப்பாடு என்ன என்பது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும். இதனால், பல மாணவர்களின் எதிர்காலம் காக்கப்படும்,'' என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement