Ad Code

Responsive Advertisement

தமிழகத்தை வளமிக்க முன்னோடி மாநிலமாக்குவோம்

தமிழகத்தை வளமிக்க முன்னோடி மாநிலமாக உருவாக்க உறுதியேற்போம் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். நாட்டின் சுதந்திர தினத்தை ஒட்டி, வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:

ஆங்கிலேய ஆதிக்கத்தில் இருந்து தாய்த் திருநாட்டை மீட்டு, நாட்டு மக்களும் அவர்தம் வருங்காலச் சந்ததியினரும் சுதந்திரக் காற்றை சுவாசித்திட, தங்கள் இன்னுயிரை துச்சமென மதித்து, நாட்டு விடுதலைக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள் சுதந்திரப் போராட்டத் தியாகிகள்.

அவர்களுடைய உயிர்த் தியாகத்தையும், நாட்டுப்பற்றையும், தியாக உணர்வையும் போற்றி நினைவுகூரும் நன்னாள் சுதந்திரத் திருநாளாகும்.

இந்தியத் திருநாட்டின் சுதந்திரத்துக்காக உயிர்த் தியாகம் செய்த சுதந்திரப் போராட்ட தியாகிகளைப் போற்றும் வகையில் எனது தலைமையிலான அரசு, தியாகிகளுக்கு வழங்கி வரும் ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கியுள்ளது. ஓய்வூதியத்தை ரூ.9 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாகவும், குடும்ப ஓய்வூதியத்தை ரூ.5 ஆயிரமாகவும், வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், வ.உ.சி., ரகுநாதசேதுபதி ஆகியோரது வழித்தோன்றல்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாதாந்திர சிறப்பு ஓய்வூதியத்தை ரூ.4,500 ஆகவும் உயர்த்தி வழங்கி வருகிறது.

மணிமண்டபங்கள் திறப்பு: சுதந்திரப் போராட்ட வீரர்களின் அளப்பரிய தியாகங்களை வருங்காலச் சந்ததியினர் அறிந்து போற்றிடும் வகையில் பல்வேறு தியாகிகளின் மணிமண்டபங்களை அமைத்து எனது தலைமையிலான அரசு சிறப்பு செய்து வருகிறது.

கடந்த 2014-ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டம், சூரக்குளத்தில் அமைக்கப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார் நினைவு மண்டபத்தையும், வீரத்தாய் குயிலி நினைவுச் சின்னத்தையும், இந்த ஆண்டில் விருதுநகரில் அமைக்கப்பட்ட தியாகி சங்கரலிங்கனார் மணிமண்டபத்தையும், தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபத்தையும் திறந்து வைத்தேன்.

தமிழகத்தை வளமிக்க மாநிலமாக... நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற ஒற்றுமை உணர்வுடன், நம் முன்னோர்கள் போராடிப் பெற்ற சுதந்திரத்தை பேணிக் காத்து, இந்தியத் திருநாட்டை வல்லரசாக்கவும், தமிழகத்தை வளமிக்க முன்னோடி மாநிலமாக உருவாக்கவும் உறுதியேற்போம்.

அனைத்துத் தரப்பு மக்களும் ஜாதி, மத, மொழி, இன வேறுபாடுகளைக் களைந்து ஒற்றுமையுடன் வாழ்ந்திடவும் உறுதி கொள்வோம் என்று தனது வாழ்த்துச் செய்தியில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement