Ad Code

Responsive Advertisement

1947 ஆக., 15 நள்ளிரவு ஏன்: இன்று 69வது சுதந்திர தினம்

1947 ஆக.,15 நள்ளிரவில்சுதந்திரம் பெற்றது. ஏன் இந்த தேதி என்பதற்கு பின் சுவாரஸ்யமான பின்னணி உள்ளது. இந்திய சுதந்திர போராட்டம் 1940க்கு பின் தீவிரமானது. இதே நேரத்தில் இரண்டாம் உலகப்போரும் ஏற்பட்டது. போரின் காரணமாக ஆங்கிலேய அரசின் கஜானா வெகுவாக கரைந்திருந்தது. சொந்த நாட்டையே(இங்கிலாந்து) நிர்வகிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. 

1945 பிரிட்டன் பொதுத்தேர்தலில் தொழிலாளர் கட்சிஆட்சியைப் பிடித்ததது. இதற்கு முக்கிய காரணம், தனது தேர்தல் வாக்குறுதியில் இந்தியா உள்ளிட்ட காலனி நாடுகளுக்கு சுதந்திரம் வழங்கப்படும் என தெரிவித்திருந்தது. இத்தகைய காரணங்களால் 1948 ஜூன் மாதத்துக்குள் இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்க ஆங்கிலேய அரசு முடிவெடுத்தது.

இந்நிலையில் 1947 பிப்., 10ல் இந்தியாவின் கடைசி வைஸ்ராயாக மவுண்ட் பேட்டன் பொறுப்பேற்றார். உடனடியாக இவர் நேரு, ஜின்னா உள்ளிட்ட தலைவர்களிடம் தொடர் பேச்சுகள் நடத்தினார். இது சுமூகமாக முடியவில்லை. காரணம், ஜின்னா தனிநாடு கோரிக்கையில் பிடிவாதமாக இருந்தார். நாட்டில் மக்களிடையே பதட்டமான சூழல் உருவானது. இதை மவுண்ட்பேட்டன் எதிர்பார்க்கவில்லை. இதனால் முன்னதாகவே சுதந்திரம் வழங்க வேண்டிய கட்டாயத்தை அவருக்கு ஏற்படுத்தியது. 

இது தொடர்பாக 1947 ஜூன் 3ல் நடந்த கூட்டத்தில் முன்கூட்டியே சுதந்திரம் மற்றும் நாட்டைப் பிரிப்பது பற்றி முடிவு செய்யப்பட்டது. இதன் காரணமாக இது 'ஜூன் 3 மவுண்ட்பேட்டன் திட்டம்' என அழைக்கப்பட்டது. ஆகஸ்ட் 15: மவுண்ட்பேட்டனுக்கு, ஆகஸ்ட் 15 தனிப்பட்ட முறையில் விருப்பமான தேதி. ஏனெனில் இரண்டாம் உலகப் போரின் முடிவில் 1945 ஆக.,15ல் தான் ஜப்பானிய வீரர்கள், இவரிடம் (அப்போது ஆங்கிலேயர்களின் கிழக்கு ஆசிய கமாண்டராக இருந்தார்) சரணடைந்தனர். இதனால் இந்த தேதியில் இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கவிரும்பினார். 

நள்ளிரவு:

இந்தியாவுக்கு ஆக., 15ல் சுதந்திரம் என அறிவிக்கப்பட்டவுடன் ஜோதிடர்கள் அன்றைய நாள் சரியில்லை, இரண்டு நாட்கள் கழித்து கொடுக்கலாம் என இந்திய தலைவர்களுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் ஆக., 15 என்பதில் மவுண்ட் பேட்டன் உறுதியாக இருந்தார். இந்த சூழ்நிலையில் தான் ஆங்கிலேயர் கணக்குப்படி நள்ளிரவு 12 மணி என்பது புதிய நாள். இந்தியர்களுக்கு அதிகாலை 5 மணி தான் புதிய நாள். இதனால் ஆகஸ்ட் 15 நள்ளிரவே இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது.

எப்படி இருக்கும்:

வளர்ந்த இந்தியாவில் நகர்ப்புற - கிராமப்புற வித்தியாசம் குறைவாக இருக்கும். மின்சாரம், குடிநீர் அனைவருக்கும் கிடைக்கும். விவசாயம் - தொழில்துறை - சேவைத்துறை இணைந்து செயல்படும். கல்விக்கு முக்கியத்துவம் இருக்கும். ஆய்வாளர்கள், முதலீட்டாளர்கள், விஞ்ஞானிகளுக்கு ஏற்ற நாடாக இருக்கும். அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, பெண்கள் - குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்கள் ஒழிந்திருக்கும். சமுதாயத்தில் அனைவருக்கும், அனைத்து வசதிகளும் கிடைக்கும். அனைவரும் வாழ விரும்பும் அழகிய தேசமாக இருக்கும். இப்படிப்பட்ட ஒரு வளர்ந்த வல்லரசு நாடாக நிச்சயம் மாறும் என அப்துல் கலாம் கனவு கண்டார்.

முதல் அமைச்சரவை:

1947ல் சுதந்திரம் பெற்றவுடன் 14 பேர் கொண்ட முதல் அமைச்சரவை பதவியேற்றது. நேரு பிரதமராகவும், வல்லபாய் படேல் உள்துறை அமைச்சராகவும் பதவியேற்றனர். இதைத்தொடர்ந்து ராஜேந்திர பிரசாத் (உணவு, விவசாயம்), மவுலானா அபுல் கலாம் ஆசாத் (கல்வி), ஜான் மாதாய் (ரயில்வே), சர்தார் பால்தேவ் சிங் (பாதுகாப்பு), ஜெகஜீவன் ராம் (தொழிலாளர் நலன்), சி.எச்.பாபா (வணிகம்), ரபி அகமது கித்வாய் (தொலைத்தொடர்பு), ராஜ்குமாரி அமித் கவுர் (சுகாதாரம்), அம்பேத்கர் (சட்டம்), சண்முகம் ஷெட்டி (நிதி), ஷியம்பிரகாஷ் முகர்ஜி (தொழில்துறை), காட்கில் (எரிசக்தி, சுரங்கம்) ஆகியோர் பதவியேற்றனர்.

சொன்னதைச் செய்த மோடி:

செங்கோட்டையில் சுதந்திர தின உரை நிகழ்த்தும் பிரதமர்கள் குண்டு துளைக்காத மேடையில் பேசுவது வழக்கம். ஆனால் மோடி இதை செய்யவில்லை. சாதாரணமாக உரையாற்றினார்.'அனைவருக்கும் எனது சுதந்திர தினவாழ்த்துக்கள்.நான் பிரதான் மந்திரியாக (பிரதமராக) பேசவில்லை. பிரதான் சேவகனாக (முதல் சேவகன்) பேசுகிறேன்' என உரையை தொடங்கினார்.

பிரதமர் மோடி மிகுந்ததேசப்பக்தி கொண்டவர்.'பாரத் மாதா கி ஜெ' , 'ஜெய்ஹிந்த்' 'வந்தே மாதரம்' என முழக்கமிடும் இவரது பேச்சு தேசிய உணர்வை எழுப்பும்.2014 சுதந்திர தின விழாவில் நரேந்திர மோடி, பிரதமராக முதன் முதலாக தேசியக் கொடி ஏற்றி எழுச்சியுரை ஆற்றினார். அதில் பல்வேறு திட்டங்களை அறிவித்து, அதனைஓராண்டுக்குள் தனது அரசு செய்யும் என்றார். அதில்பல்வேறு திட்டங்களை செய்தும் காட்டியுள்ளார். 

* ஜன் தான் யோஜனா எனப்படும் 'அனைவருக்கும் வங்கி கணக்கு திட்டம்' அறிவித்தார். திட்ட தொடக்க நாளிலேயே 1.5 கோடி வங்கிக்கணக்குகள் தொடங்கப்பட்டு கின்னஸ் சாதனையிலும் இடம்பெற்றது. 2015 ஜூலை 22ன் படி, 17 கோடி வங்கிக் கணக்குகள்காப்பீடு வசதியுடன்தொடங்கப்பட்டுள்ளன. 

* திட்டக்குழு கலைக்கப்பட்டு புதிய அமைப்பு அமைக்கப்படும் என்றார். அதன்படி 'நிதி ஆயோக்' எனும் அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.

* உலகின் உற்பத்தி தளமாக இந்தியா மாற வேண்டும்; பல்வேறு தொழில்நுட்பங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க வேண்டும்; அதற்கான திறமை நம்மிடம் உள்ளது. இதற்காக 'மேக் இன் இந்தியா' திட்டத்தை அறிவித்தார். அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளுக்குச் சென்று இத்திட்டத்தை பிரபலபடுத்தினார். 

* இவர் அறிவித்த 'துாய்மை இந்தியா' மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. பெரும்பாலான மக்கள் தாமாகவே இப்பணியில் ஈடுபட்டனர். 

* ' ஒவ்வொரு எம்.பி.,யும் கிராமங்களை தத்தெடுக்கும்' திட்டத்தை அறிவித்தார்.இதன் மூலம் அந்த கிராமம் தன்னிறைவு பெறும் என்றார். இன்று பெரும்பாலானஎம்.பி., க்கள் கிராமங்களை தத்தெடுத்துள்ளனர். இந்தாண்டும் இதுபோன்ற பல திட்டங்களை பிரதமர் மோடியிடம் இருந்து மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஜெயிக்க வைத்த வார்த்தை:

நாட்டு மக்களிடை.ேய இந்த ஒற்றை வார்த்தை, தேசிய உணர்வைதட்டி எழுப்பியது.அது தான் 'ஜெய்ஹிந்த்' என்ற முழக்கம். சுதந்திர போராட்டத்தின் போது இந்த வார்த்தையை உச்சரிக்கும் போது, மக்களின் சுதந்திர தாகம் அதிகரித்தது. தற்போதும் இன்றைய இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் இந்த வார்த்தை அதே உத்வேகத்தை அளிக்கிறது. இதனை முதன் முதலில் இந்த தேசத்துக்கு உரக்க கூறியவர் நேதாஜி என அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ். இவர் 1941ம் ஆண்டு நவ., 2ம் தேதி ஜெர்மனியில் 'சுதந்திர இந்தியா மையம்' என்ற அமைப்பை தொடங்கினார். 

அதன் துவக்க விழாவில் தான் நேதாஜி, தேசிய உணர்வை தட்டி எழுப்பும் 'ஜெய்ஹிந்த்' (வெல்க இந்தியா) என்ற கோஷத்தை முழங்கினார். அப்போது முதல் இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகளில் வாழும் அனைத்து இந்தியர்களிடமும் இது வாழ்த்தாக ஒலித்தது. நாட்டின் முதல் பிரதமராக பதவியேற்ற நேரு, முதல் சுதந்திர உரையை 'ஜெய்ஹிந்த்' என்று கரம் உயர்த்தி கூறி முடித்தார். நேதாஜியும், நேருவும் இருவேறு நிலைகளில் நின்று போராடியவர்கள். ஆனால், இருவரது நோக்கமும் (நாடு விடுதலை) ஒன்று தான். 'ஜெய்ஹிந்த்' என்ற முழக்கம் நேதாஜியால் உருவாக்கப்பட்டது. சுதந்திர இந்தியாவில் நேரு அதனை ஆர்வமுடன் அரங்கேற்றினார்.

அன்னிய மண்ணில் வானொலி:

சுதந்திர போராட்ட காலத்தில் மக்களிடம் கருத்துக்களை கொண்டு செல்ல எவ்வித தொலைத்தொடர்பு வசதிகளும் கிடையாது. அப்படியே இருந்தாலும் அது ஆங்கிலேய அரசுக்கு சாதகமான செய்திகளைத் தான் வெளியிட வேண்டும். ஆதரவாக கருத்துகளை வெளியிட்டால் ஆங்கிலேயர் அதனை அழித்து விடுவார்கள். அந்தளவுக்கு ஆங்கிலேயர்களின் ஒடுக்குமுறை இருந்தது. இந்நிலையில் இரண்டாம் உலகப்போர் (1941) நடந்து கொண்டிருந்த நேரத்தில் நேதாஜி, ஜெர்மனியில் இருந்து கொண்டே, மக்கள் மனதில் சுதந்திர உணர்வை தட்டி எழுப்புவதற்காக வானொலி நிலையத்தை தொடங்கினார். 'ஆசாத் ஹிந்த் வானொலி' 'ஆசாத் முஸ்லிம் வானொலி', 'தேசிய காங்கிரஸ் வானொலி' என்ற மூன்று வானொலி நிலையங்களை தொடங்கினார். 

முதல் இரண்டும் இந்தியில் செய்திகளையும், அவரது பேச்சுகளையும் ஒலிபரப்பியது. இவை இந்திய மக்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது.மூன்றாவது வானொலி ஆங்கிலத்தில்ஒலிபரப்பியது.இது வெளிநாட்டிலிருந்த புரட்சி இயக்கத்தினருக்கு, குறிப்பாக ஜப்பானில் தங்கி விடுதலை இயக்கத்தை நடத்தி வந்த ராஷ்பிகாரி போசுக்கு பெரிதும் பயன்பட்டது. பின் ஜெர்மனியை விட்டு நேதாஜி புறப்பட்ட பின், சிங்கப்பூர் மற்றும் பர்மாவிலும் இந்த வானொலி செயல்பட்டது.

எது உண்மையான சுதந்திரம்:

சுதந்திர இந்தியாவில் வாழ்கிறோம் என பெருமைப்பட்டுக் கொண்டு இருக்கிறோம். ஆனால் சுதந்திரத்தின் பலன் அனைத்து தரப்பு மக்களையும் சென்று அடைந்து விட்டதா, என்ற கேள்விக்கு நம்மிடம் பதிலில்லை. பணபலம், அதிகாரம் இருப்பவர்களுக்கு தான் சமுதாயத்தில் அங்கீகாரம், மரியாதை கிடைக்கிறது. சாமானிய மக்களுக்கு சுதந்திரத்தினால் என்ன பலன் ஏற்பட்டுள்ளது. உலகின் பெரிய ஜனநாயக நாடு என்று கூறிக் கொள்கிறோம். 

இன்னும் நாட்டில் வறுமை ஒழிந்த பாடில்லை. சுகாதார வசதிகள் மோசமாக உள்ளன. கல்வியில் பின்தங்கியே இருக்கிறோம். மதசார்பற்ற நாடு என்கிறோம். ஆனால் இங்கு தான் ஜாதி, மதத்தை வைத்து அரசியல் செய்கின்றனர்.நாட்டில் பெண்களுக்கு சுதந்திரமும், பாதுகாப்பும் இல்லை. இன்னும் ஆணாதிக்க சமூகமே செயல்பட்டு வருகிறது. இது போன்ற சமூக பிரச்னைகளுக்கு தீர்வு கண்டால் மட்டுமே உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்க முடியும்.சுகாதாரத் துறையை பொறுத்தளவில் இந்தியா பின்தங்கியே உள்ளது. மருந்து தயாரிப்பில் இன்னும் மற்ற நாடுகளையே நம்பியிருக்க வேண்டியுள்ளது. எரிபொருளை 82 சதவீதம் இறக்குமதி செய்கிறோம். இதற்கும் மாற்றுவழிகளை கண்டுபிடிக்க வேண்டியது அவசியமாகிறது. இந்தியாவின் வர்த்தகத்துக்கு தேவையான பொருட்களையும் 50 சதவீதத்துக்கும் அதிகமாக இறக்குமதி செய்கிறோம். நமக்கு தேவையான பொருட்களை நாமே தயாரிக்கும் போது தான் நாட்டின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.

வெளிநாட்டு ஆயுதங்கள்:

இந்தியாவில் பாதுகாப்பு துறைக்கு தேவையான ஆயுதங்கள் வெளிநாடுகளிடம் இருந்து அதிகம் வாங்கப்படுகின்றன. சுதந்திரம் பெற்று இவ்வளவு ஆண்டுகளாகியும் தேவையான ஆயுதங்களை நம்மால் தயாரிக்க முடியவில்லை. இறக்குமதி செய்வதால் திருப்தியடையும் நாம், சுதந்திரம் பெற்றதால் என்ன பலன் இருக்கிறது.பிற்போக்குத்தனமான தொழிலாளர் சட்டங்கள், தொலைநோக்கற்ற கொள்கைகளையே கடைபிடித்து வருகிறோம். இந்தியாவில் உள்ள பி.பி.ஓ.,க்களால் அமெரிக்கா வருமானம் குவிக்கிறது. இந்தியாவுக்கு கிடைக்கும் பலன் குறைவு தான். இந்தியாவில் பணம் படைத்தவர்களுக்கு மட்டும் தான் நல்ல கல்வி கிடைக்கிறது. ஏழை மாணவர்களுக்கு கல்வி என்பது இன்று வரை கேள்விக்குறியாகத்தான் உள்ளது.

எப்போது சரிசெய்ய போகிறோம்: இந்தியாவில் உள்ள 125 கோடி மக்களை ஊழல் என்ற அரக்கன் பிணைக்கைதியாக பிடித்து வைத்துள்ளான். ஊழலை ஒழித்தாலே நாட்டின் பல்வேறு பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.

சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம்:

சுதந்திரத்தை பெரும்பாலானோர் தவறாக புரிந்து கொள்கின்றனர். குப்பையை தெருவில் வீசி அசுத்தம் செய்வது, பொது இடங்களில் துப்புவது, என அதீத 'சுதந்திரமாக' செயல்பட்டு நாட்டுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறோம். இஷ்டத்திற்கு மரங்களை வெட்டி இயற்கை வளத்தை கெடுக்கிறோம். வீட்டுக்கு ஒரு மரம் வளர்த்து சுதந்திர நாளை சிறப்பாக கொண்டாடுவோம்.

அறியப்படாத தலைவர்:தோண்டோ கேசவ் கார்வே :

அடிமைநாட்டுக்கும், ஜனநாயக நாட்டுக்கும் இருக்கும் வித்தியாசத்தை தியாகிகளின் வாழ்க்கை வரலாறுகளில் மட்டுமே அறிய முடியும். சுதந்திரம் வாங்கிக் கொடுத்த தியாகிகள் பலரை மறந்து விட்டோம். அவர்களை மறந்து விட்டால் அனுபவிக்கும் சுதந்திரத்தின் பலனில் அர்த்தம் இருக்காது. அப்படி ஒரு அறியப்படாத தலைவர் தான் தோண்டோ கேசவ் கார்வே.

இவர் பெண் உரிமைக்காக போராடியவராகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும் அறியப்படுபவர். மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டத்திலுள்ள முருட் எனும் கிராமத்தில் 1858, ஏப்.18ல் பிறந்தார். தந்தை கேசவ் பாபுண்ணா கார்வே. பள்ளிப்படிப்பின் போதே, 14வது வயதில் எட்டு வயது ராதாபாய் என்பவரை மணந்தார். 1891ம் ஆண்டு ராதாபாய் மரணமடைந்தார். இவர்களுக்கு ரகுநாத் கார்வே எனும் மகன் பிறந்தார். இவரும் சமூக சீர்திருத்தத்தில் ஈடுபட்டார்.தோண்டோ கேசவ் கார்வே, மும்பையில் உள்ள எல்பின்ஸ்டன் கல்லுõரியில் கணிதப் பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக போராடினார். பெண் கல்வி, விதவைத் திருமணம், பெண் அடிமை ஒழிப்பு ஆகியவற்றுக்காக வாழ்நாள் முழுவதையும் செலவிட்டார்.முதல் மனைவி ராதாபாய் இறந்த பிறகு, கோதுபாய் எனும் விதவையை இரண்டாவது திருமணம் செய்தார். ஈஸ்வர சந்திர வித்யாசாகர், ஹெர்பர்ட் ஸ்பென்சர் ஆகியோரை முன்னோடிகளாக கொண்டு பெண் உரிமைக்காக பாடுபட்டார்.புனேயில் உள்ள பெர்குசன் கல்லூரியில், 23 ஆண்டுகள் கணித விரிவுரையாளராக பணியாற்றினார். சமூக சீர்திருத்தப்பணிகளுக்காக, 1958ம் ஆண்டு கேசவ் கார்வேயின் 100வது வயதில் 'பாரத ரத்னா' விருது வழங்கப்பட்டது.104 வயது வரை வாழ்ந்த இவர், 1962, நவ.9ம் தேதி புனேயில் மறைந்தார். இவரது நினைவைப் போற்றும் வகையில் மும்பையில் உள்ள குயின்ஸ் சாலைக்கு 'மகரிஷி கார்வே சாலை' எனப் பெயரிடப்பட்டது.

காந்தியின் 'நுாறாவது ஆண்டு':

தென்னாப்ரிக்காவில் இருந்து 1915ல் இந்தியா திரும்பினார் மகாத்மா காந்தி. இதன் பின்னர் தான் இந்திய சுதந்திரப் பேராட்டம் வீறு கொண்டு எழுந்தது. இந்த 2015, காந்தி இந்தியா திரும்பியதன் நுாறாவது ஆண்டு. தென்னாப்ரிக்காவில் காந்தி இருந்த போது அங்கு ஆங்கிலேயர்களின் நிறவெறி அதிகமாக இருந்தது. வெள்ளையர் அல்லாத காரணத்தால், காந்தியடிகளும் பலமுறைபாதிக்கப்பட்டார்.அங்குள்ள இந்தியர்களையும், கறுப்பின மக்களையும் ஒன்றினணத்து 'சத்யாகிரகம்' எனும் அறவழிப் போராட்டம் மூலம் அம்மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இதையடுத்து இந்தியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற ஆங்கிலேய அரசு முன்வந்தது. 

இந்தியா திரும்புதல் :

1915 ஜன., 9ம் தேதி, மும்பை துறைமுகத்தில் வந்திறங்கினார். நாடு முழுவதும் ஆங்கிலேயர்களை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருந்தனர். இதைக்கண்ட காந்தி, புனே சென்று கோகலேயை சந்தித்தார். அவரது ஆலோசனைப்படி, காந்தி இந்தியா முழுவதும் பயணம் செய்தார். எங்கு சென்றாலும் ரயிலின் மூன்றாம் வகுப்பில் சென்ற அவர், மக்களோடு மக்களாக இயங்கி அவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டார். பின் காங்., கட்சியில் சேர்ந்து சுதந்திரப் போராட்டத்தில் தன்னையும்ஈடுபடுத்திக் கொண்டார். 1920ல் காங்., கட்சியின்தலைவராகவும் இருந்தார்.ரவீந்திரநாத் தாகூர், நேரு, ஜின்னா, வல்லபாய் படேல் உள்ளிட்ட பல தலைவர்களுடன் இணைந்து சுதந்திர போராட்டத்தை நடத்தினார். சத்யாகிரகம், ஒத்துழையாமை இயக்கம், தண்டி யாத்திரை, வெள்ளையனே வெளியேறு போன்ற அறப் போராட்டங்களின் மூலம் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடினார்.

Post a Comment

1 Comments

 1. எல்லோருக்கும் வணக்கம்,

  நான், நல்ல வேலை புகழ் ஒரு தனியார் கடன் கடன் பெர்ரி வெள்ளை இருக்கிறேன்
  நீங்கள் ஒரு மரியாதைக்குரிய நிறுவனம் இருந்து அவசர கடன் வேண்டும் என்றால் இன்று விண்ணப்பிக்க,
  பிறகு நல்ல நிலைமைகள் மற்றும் தொழில் உறவுகள் உங்களுக்கு
  நாங்கள் வங்கிகள் கடன் வழங்கலாம் என எங்களை தொடர்பு கொள்ள வேண்டும்
  மலிவு வட்டி 3% விகிதம் மற்றும் நமக்கு உங்கள் வேலை
  ஒரு நல்ல அனுபவம் இருக்கும். நீங்கள் ஆர்வமாக இருந்தால், தொடர்பு
  எங்களுக்கு மின்னஞ்சல் மூலம்: Perrywhitefirms@outlook.com அல்லது
  +2348136145452

  ReplyDelete

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..

நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை

Ad Code

Responsive Advertisement