Ad Code

Responsive Advertisement

சிறப்புத் திட்டங்களால் சாமானியர்களைக் கவர்ந்த அரசு

ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள அதிமுக அரசு, தனது சிறப்புத் திட்டங்களால் சாமானிய மக்களைக் கவர்ந்து வருகிறது. மலிவு விலை உணவகங்கள், குறைந்த விலையில் குடிநீர், அனைவருக்குமான விரிவுபடுத்தப்பட்ட மருத்துவக் காப்பீடு, பசுமை வீடுகள் என ஒரு தனிமனிதனுக்கான அனைத்துத் தேவைகளையும் இந்தச் சிறப்புத் திட்டங்கள் பூர்த்தி செய்து வருகின்றன.


 நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஆட்சியைத் தொடங்கியவுடனேயே அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்த திட்டங்களைச் செயல்படுத்தத் தொடங்கி விட்டதாகத் தெரிவிக்கின்றனர், அந்தக் கட்சியின் நிர்வாகிகள்.
 தமிழகத்தில் கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் அந்த ஆண்டு மே 13-ஆம் தேதி வெளியாகின. இதைத் தொடர்ந்து, ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவை அதே ஆண்டு மே 16-ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டது. இதற்கான நிகழ்ச்சி, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெற்றது.
 பதவியேற்றுக் கொண்ட தினத்திலேயே, தேர்தல் அறிக்கையில் தெரிவித்த ஏழு முக்கிய அறிவிப்புகளைச் செயல்படுத்தும் வகையில் அதற்கான கோப்புகளில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்டார். ரேஷன் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 கிலோ அரிசியை இலவசமாக வழங்குவது, ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு 4 கிராம் தங்கம் உள்ளிட்ட ஏழு திட்டங்களைச் செயல்படுத்த அரசு உத்தரவு வெளியானது.
 இந்த உத்தரவைத் தொடர்ந்து, அடுத்த மாதமே 20 கிலோ இலவச அரிசி வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
 தேர்தல் அறிக்கை திட்டங்கள்: பேரவைத் தேர்தலின் போது, 20 முக்கிய திட்டங்களைச் செயல்படுத்துவதாக உறுதியளித்து தேர்தல் களம் கண்டது அதிமுக. தற்போது நான்கு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், பெரும்பாலான திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்து மக்களுக்கு பயன் அளித்துக் கொண்டிருக்கின்றன.
 அவற்றில் குறிப்பாக, பள்ளி- கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, பள்ளிகளிலேயே ஜாதிச் சான்று, கேபிள் தொலைக்காட்சி அரசுடைமை, விலையில்லாத மின்விசிறி, கிரைண்டர், மிக்ஸி, கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ. 2,500 ஆக உயர்த்தியது என முக்கிய திட்டங்களைக் குறிப்பிடலாம்.
 இவை தவிர்த்து, அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா உப்பு உள்ளிட்ட புதிய திட்டங்களும் இப்போது மக்களைக் கவர்ந்து வருகின்றன.
 காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிடச் செய்தது உள்பட நதிநீர் பிரச்னைகளிலும் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு சிறப்புக் கவனம் செலுத்தி வந்துள்ளது.
 மொத்தத்தில் இந்த நான்கு ஆண்டுகளில் அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட திட்டங்களைத் தாண்டியும் பல முன்னோடித் திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
 இடர்ப்பாடுகளைக் களைந்து ஐந்தாம் ஆண்டு: கடந்த ஆண்டின் பிற்பகுதியில் அதிமுகவுக்கும், அதன் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கும் ஏற்பட்ட இடர்ப்பாடுகள் அனைத்தும் இப்போது விலகியுள்ளன. இது கட்சித் தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.
 எம்.ஜி.ஆர். உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவிக்க ஜெயலலிதா வெள்ளிக்கிழமை வந்த போது கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகளிடம் இந்த உற்சாகத்தைக் காண முடிந்தது. இந்த உற்சாகத்துடனேயே ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவை சனிக்கிழமை காலை 11 மணிக்கு அமையவிருக்கிறது. 
 ஜெயலலிதாவுடன் சேர்த்து மொத்தம் 29 பேர் பதவியேற்க உள்ளனர். இந்த சிறப்புமிக்க நிகழ்ச்சியைக் காண தமிழகம் முழுவதுமிருந்து அதிமுக தொண்டர்களும், பொது மக்களும் பதவியேற்பு நிகழ்வு நடைபெறவுள்ள சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் வெள்ளிக்கிழமை மாலை முதலே குவிந்தனர். 
 ஜெயலலிதாவின் சீரிய தலைமை, தொண்டர்களின் கட்டுக்கடங்காத உற்சாகம் ஆகியவற்றுடன் அதிமுகவின் ஐந்தாம் ஆண்டு ஆட்சி இனிதே தொடங்குகிறது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement