Ad Code

Responsive Advertisement

முதல்வராக ஜெயலலிதா இன்று பதவியேற்பு

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தமிழக முதல்வராக சனிக்கிழமை (மே 23) பதவியேற்கிறார். முதல்வராக ஜெயலலிதாவும், அமைச்சர்களாக 28 பேரும் பதவியேற்கும் நிகழ்வு, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் சனிக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறும் என்று ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



வனத் துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், இலாகா இல்லாத அமைச்சராக இருந்த செந்தூர் பாண்டியன் ஆகிய இரண்டு பேர், அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். 28 பேர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்க உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் ஏற்கெனவே வகித்த துறைகளே ஒதுக்கப்பட்டுள்ளன.
 வனத் துறை அமைச்சர் பொறுப்பு, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சரான எடப்பாடி கே.பழனிச்சாமியிடம் கூடுதல் பொறுப்பாக அளிக்கப்பட்டுள்ளது.
 முதல்வர் ஜெயலலிதா, 28 அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணத்தையும், ரகசியக் காப்பு உறுதிமொழியையும் சனிக்கிழமை நடைபெறும் பதவியேற்பு நிகழ்ச்சியில், ஆளுநர் ரோசய்யா செய்து வைப்பார். இந்தப் பதவியேற்பு நிகழ்ச்சிக்காக, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கிலும், அதன் வளாகத்திலும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
 எம்எல்ஏக்கள் கூட்டம்: முன்னதாக, சட்டப் பேரவை ஆளும் கட்சித் தலைவராக ஜெயலலிதாவைத் தேர்ந்தெடுப்பதற்கான அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு நடைபெற்றது. சுமார் 5 நிமிடங்களில் இந்தக் கூட்டம் முடிந்தது.
 சட்டப் பேரவை ஆளும் கட்சித் தலைவராக (முதல்வராக) ஜெயலலிதாவைத் தேர்ந்தெடுப்பதற்கான தீர்மானத்தை கட்சியின் பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் வாசித்தார். அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்ற எம்எல்ஏக்கள் கூட்டத்தில், ஆளும் கட்சித் தலைவராக ஜெயலலிதா ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 எம்எல்ஏக்கள் கூட்டத்தைத் தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி கே. பழனிச்சாமி உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஜெயலலிதாவின் இல்லமான போயஸ் தோட்டம் சென்றனர். பின்னர், அங்கிருந்து ஆளுநர் மாளிகைக்குச் சென்ற அவர்கள், ஜெயலலிதாவை ஆளும் கட்சித் தலைவராகத் தேர்வு செய்ததற்கான கடிதத்தை ஆளுநர் கே.ரோசய்யாவிடம் அளித்தனர்.
 மேலும், முதல்வராகப் பொறுப்பு வகித்த ஓ.பன்னீர்செல்வம் தனது ராஜிநாமா கடிதத்தையும் ஆளுநரிடம் கொடுத்தார். ராஜிநாமா கடிதத்தை ஏற்றுக்கொண்ட ஆளுநர் ரோசய்யா, புதிய அமைச்சரவையை அமைக்குமாறும், அமைச்சர்கள் பட்டியலை அளிக்குமாறும் ஜெயலலிதாவுக்கு அழைப்பு விடுத்தார்.
 ஆளுநருடன் சந்திப்பு: ஆளுநர் கே.ரோசய்யாவின் அழைப்பைத் தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தனது இல்லத்தில் இருந்து பிற்பகல் ஒரு மணியளவில் ஆளுநர் மாளிகைக்குப் புறப்பட்டார். 217 நாள்களுக்குப் பிறகு ஜெயலலிதாவை நேரில் சந்தித்த கட்சித் தொண்டர்கள் வழிநெடுகிலும் அவரை வரவேற்று மகிழ்ந்தனர்.
 பிற்பகல் 2 மணிக்கு ஆளுநர் மாளிகைக்குச் சென்றார் ஜெயலலிதா. ஆளுநர் கே.ரோசய்யாவுக்கு மலர்க்கொத்து வழங்கினார். பதிலுக்கு ஆளுநரும் மலர்க்கொத்து அளித்து வரவேற்புத் தெரிவித்தார். அப்போது, புதிய அமைச்சரவைப் பட்டியலை ஆளுநரிடம் ஜெயலலிதா அளித்தார். இந்தச் சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நீடித்தது.
 ஆளுநருடனான சந்திப்புக்குப் பிறகு, சென்னை அண்ணா சாலை ஸ்பென்சர் சந்திப்பு அருகிலுள்ள எம்ஜிஆர் சிலை, அண்ணா சிலை, ஜெமினி மேம்பாலம் அருகிலுள்ள பெரியார் சிலை ஆகிய சிலைகளுக்கு மலர்தூவி ஜெயலலிதா மரியாதை செலுத்தினார். 
 ஆளுநர் மாளிகையில் இருந்து அண்ணா சாலை செல்லும் வழிநெடுகிலும் சாலை ஓரங்களில் நின்றிருந்த அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த வரவேற்பை அவர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார்.
 மூன்று இடங்களிலும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள், கட்சி நிர்வாகிகள் பகுதி பகுதியாகப் பிரிந்து நின்றிருந்தனர். பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்திய பிறகு அவர் போயஸ் தோட்ட இல்லத்துக்குச் சென்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement