Ad Code

Responsive Advertisement

தமிழகத்தில் அங்கீகாரமற்ற 4,000 நர்சரி பள்ளிகள்: கமிட்டி அமைத்து விசாரிக்க கல்வித் துறை தீவிரம்

தமிழகத்திலுள்ள, 4,000க்கும் மேற்பட்ட அங்கீகாரம் இல்லாத மெட்ரிக் மற்றும் நர்சரி பள்ளிகளை, ஒழுங்குமுறைப்படுத்துவது தொடர்பாக, குழு அமைக்க பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. 

தமிழக பள்ளிக் கல்வித் துறை கட்டுப்பாட்டில், 9,600 பள்ளிகள் உள்ளன. இதில், 5,900 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள்; 41 ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள். மற்றவை மெட்ரிக் உயர்நிலை, மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள். இது தவிர, தொடக்கப் பள்ளி இயக்குனர் கட்டுப்பாட்டில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு தொடக்கப் பள்ளிகள், தனியார் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் இயங்குகின்றன. அதேநேரம், 4,000க்கும் மேற்பட்ட நர்சரி, பிரைமரி மற்றும் மெட்ரிக் பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமல் இயங்குகின்றன. இந்தப் பள்ளிகள் குறித்த சரியான கணக்கு, பள்ளிக் கல்வித் துறை வசம் இல்லாத அளவுக்கு, மூலைக்கு மூலை, 'ப்ளே ஸ்கூல்' மற்றும் நர்சரி பள்ளிகள் இயங்கி வருகின்றன.

இப்பள்ளிகள், மாணவ, மாணவியருக்கான எந்த பாதுகாப்பு விதிமுறைகளையும் பின்பற்றாமல், காற்றோட்டமான இட வசதி, தேவையான வகுப்பறை, கழிப்பறை வசதி, பாதுகாப்பு முன்னேற்பாடு மற்றும் அவசர வழி போன்ற  வசதிகள் இன்றி செயல்படுகின்றன.

அங்கீகாரம் பெற, 
* பள்ளி இடம் சொந்தமாகவோ அல்லது 30 ஆண்டுகள் குத்தகை அல்லது வாடகை ஒப்பந்தத்துடன் இருக்க வேண்டும்.
* சுகாதாரம், தீயணைப்புத் துறை, உள்ளாட்சி போன்றவற்றில் இருந்து, பாதுகாப்பு சான்றிதழ் பெற வேண்டும். 
* அரசின் வழிகாட்டுதல் படி, தேவையான அளவுக்கு ஒரே இடத்தில் நிலப்பரப்பு மற்றும் தரமான, கான்கிரீட் கட்டடங்கள் இருக்க வேண்டும்.
* அங்கீகாரம், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, கல்வித் துறை ஆய்வாளர்களால் நேரடி ஆய்வு நடத்தி புதுப்பிக்கப்படும்.
ஆனால், அங்கீகாரம் இல்லாத பிரைமரி பள்ளிகளின் மாற்றுச் சான்றிதழ்கள் ஏற்றுக்

கொள்ளப்பட்டு, மாணவர்கள், மற்ற பள்ளிகளில், இடைநிலை வகுப்பில் சேர்க்கப்படுகின்றனர். தேர்வுகளுக்கும் அனுமதி தரப்படுகிறது. அதனால், விதிமுறைகளைப் பற்றி கவலைப்படாமல், இந்தப் பள்ளிகள் தொடர்ந்து மாணவர் சேர்க்கை நடத்தி, கட்டண வசூல் வேட்டை நடத்துகின்றன. இந்நிலையில், அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில், கும்பகோணம் பள்ளி தீ விபத்து போல, அசம்பாவிதம் நடந்து விடக் கூடாது என, பள்ளிக் கல்வித் துறை, முன்னெச்சரிக்கையாக ஆலோசித்து வருகிறது. மோசமான பள்ளிகளை மூட, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வி அதிகாரிகள் கூறியதாவது:அங்கீகாரம் இல்லாத பள்ளிகளின் பட்டியல் தயாரித்து, அவற்றை தனித்தனியாக ஆய்வு நடத்த, முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஓரளவுக்கு இட வசதி மற்றும் பாதுகாப்பு கொண்ட பள்ளிகளின் பட்டியல், தனியாகத் தயாரிக்கப்படுகிறது. இப்பள்ளிகளின் அங்கீகாரம் குறித்து முடிவு செய்ய, குழு அமைக்கப்படும். இந்த குழு, பள்ளிகளை ஆய்வு செய்து, மூடுவதா அல்லது அங்கீகாரம் வழங்குவதா என்பதை முடிவு செய்யும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர். 
- நமது நிருபர் -

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement