Ad Code

Responsive Advertisement

சென்னை முழுவதும் பள்ளி செல்லா குழந்தைகள்... : இன்று துவங்கி இரண்டு மாதங்கள் நடத்த ஏற்பாடு - பொதுமக்களும் தகவல் தரலாம்!

சென்னையில், பள்ளி செல்லா குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு இன்று துவங்கி, இரண்டு மாதங்களுக்கு நடைபெறும். இதில், குழந்தைகளை பணியில் ஈடுபடுத்துவோர் மீது, போலீஸ் புகார் அளிக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.ஒவ்வொரு கல்வியாண்டு துவங்கும் போதும், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், மாவட்ட வாரியாக பள்ளி செல்லா குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படும்.

சென்னையில், இவ்வாறு நடத்தப்படும் கணக்கெடுப்பில், ஒவ்வொரு ஆண்டும், 1,000 முதல் 2,000 குழந்தைகள் வரை அடையாளம் காணப்பட்டு, மாநகராட்சி மற்றும் அரசு பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர்.


சென்னையில், தற்போது தினக்கூலி பணிகளுக்காக வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து அதிகம் பேர் வருவதும், மாதம் ஒரு இடம் என வேலை தேடி அவர்கள் இடம் பெயர்வதும் வாடிக்கையாக உள்ளது. அவர்களின் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதில்லை. இதுபோன்று இடம் பெயர்வோர், அதிகமாக இருப்பதும், குழந்தைகளை பணியில் ஈடுபடுத்துவதும், சென்னையில் அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது.

80 பேர் பணியில்...

இதனால் இந்த முறை, பள்ளி செல்லா குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பை, கோடை விடுமுறைக்கு முன்பே துவங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் அந்த கணக்கெடுப்பு துவங்கப்படுகிறது. அனைவருக்கும் கல்வி இயக்க பணியாளர்கள், 80 பேர் முதற்கட்டமாக இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் காலை, 8:00 முதல், பிற்பகல், 2:00 மணி வரையும், மாலை 4:00 முதல், 6:00 மணி வரையும், வீடு, வீடாக சென்று, பள்ளி செல்லா குழந்தைகள் உள்ளனரா என்று ஆய்வு மேற்கொள்வர்.

அப்போது பள்ளி செல்லும் வயதில் உள்ள குழந்தைகளை யாராவது பணியில் ஈடுபடுத்துவது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட கடைக்காரர் அல்லது தொழிற்சாலை உரிமையாளர்கள் மீதும், பெற்றோர் மீதும், உடனடியாக காவல் துறையில் புகார் அளிக்க, உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பணியை கள ஆய்வில் ஈடுபடும் ஊழியர்களே மேற்கொள்வர். கணக்கெடுப்பில் அடையாளம் காணப்படும் குழந்தைகள், அவர்களின் பெற்றோர் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கவும், வேலைக்காக இடம் பெயர்ந்தாலும், அவர்களை அந்தந்த பகுதியில் உள்ள பள்ளிகளில் மாற்றம் செய்து படிக்க வைக்கவும், ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.

வடமாநிலத்தோருக்கு...

இதுகுறித்து, அனைவருக்கும் கல்வி இயக்க அதிகாரி ஒருவர், கூறிய தாவது:

அனைவருக்கும் கல்வி இயக்கம், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு ஆணையம், சமூக நலத்துறை, தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து, இந்த கணக்கெடுப்பு நடைபெறும்.

கடந்த கல்வியாண்டில், பாதியில் பள்ளியில் இருந்து நின்ற குழந்தைகளின் பட்டியல் எடுக்கப்பட்டுள்ளன. அவர்களின் முகவரிக்கு சென்று விசாரித்து, அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் மாநகராட்சி மற்றும் அரசு பள்ளிகளில் சேர்க்கை குறைந்து வருவதால், இந்த முறை, இந்த புதிய முயற்சி எடுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு, அந்த அதிகாரி கூறினார்.

வடமாநில பள்ளி செல்லா குழந்தைகள் அடையாளம் காணப்பட்ட பின், அவர்கள் தாய்மொழியிலேயே, கல்வி அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக அந்தந்த மாநில மொழி புத்தகங்களை கேட்டு, மாநில கல்வி துறைகளுக்கு கடிதங்கள் எழுதப்பட உள்ளன.

பொதுமக்களும் தகவல் தரலாம்!

சென்னையில் கட்டட பணி, தொழிற்சாலைகள் உள்ள இடங்கள், குடிசை பகுதிகளில், ஆறு முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகள், பள்ளிக்கு செல்லாமல் இருப்பது தெரியவந்தால், அனைவருக்கும் கல்வி இயக்க சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளரை, 97888 -58507 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement