Ad Code

Responsive Advertisement

நேரடி மானிய திட்டத்தில் இணையாதவர்கள் 21 லட்சம் பேர்: இனி அனைவருக்கும் சந்தை விலையில் காஸ் வினியோகம்

தமிழகத்தில், நேரடி மானிய காஸ் திட்டத்தின் கீழ், 1.31 கோடி வாடிக்கையாளர் இணைந்து உள்ளனர்; 21 லட்சம் பேர், இதுவரை இணையாமல் உள்ளனர்; இனி, அனைத்து வாடிக்கையாளருக்கும், சந்தை விலையில், காஸ் சிலிண்டர் விற்பனை செய்யப்படும். 


மத்திய அரசு, சமையல் காஸ் சிலிண்டர் முறைகேட்டை தடுக்க, கடந்த ஜனவரி முதல், 'மாற்றி அமைக்கப்பட்ட சமையல் காஸ் சிலிண்டர் நேரடி மானியம்' என்ற திட்டத்தை அறிமுகம் செய்தது; இந்த திட்டத்தில் இணைய, நேற்று தான் கடைசி நாள்.


திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:


* வாடிக்கையாளர், சந்தை விலையில் சிலிண்டர் வாங்க வேண்டும். அதற்கான மானியத் தொகையை, எண்ணெய் நிறுவனங்கள், அவரின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கும். 

* திட்டத்தில் இணைந்த வாடிக்கையாளருக்கு, முன்வைப்புத் தொகை, 568 ரூபாய் வழங்கப்படுகிறது; சிலிண்டர் வாங்கும் போது, அதற்கான மானியத் தொகை வழங்கப்படுகிறது. 


தமிழகத்தில்... :


* பொதுத் துறையை சேர்ந்த, ஐ.ஓ.சி., பாரத், இந்துஸ்தான் எண்ணெய் நிறுவனங்களுக்கு, 1.52 கோடி, காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர் உள்ளனர். 
* நேற்று வரை, 1.31 கோடி பேர், திட்டத்தில் இணைந்து உள்ளனர்; 21 லட்சம் பேர் இணையாமல் உள்ளனர். 
* திட்டத்தில் இணைந்தவர்களின் வங்கிக் கணக்கில், முன்வைப்புத் தொகை மற்றும் மானியம் என, இதுவரை, 700 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டு உள்ளது. 
* ஜனவரி முதல் நேற்று வரை, இத்திட்டத்தில் இணையாத வாடிக்கையாளருக்கு, மானிய விலையில், சிலிண்டர் வினியோகம் செய்யப்பட்டது. 
* இன்று முதல், ஜூன் 30ம் தேதி வரை, இத்திட்டத்தில் இணையாத வாடிக்கையாளருக்கு, சந்தை விலையில் சிலிண்டர் வினியோகம் செய்யப்படும்; அவர்களுக்கு உரிய மானியத் தொகை, எண்ணெய் நிறுவனங்களிடம் இருக்கும். அவர்கள், அடுத்த மூன்று மாதங்களுக்குள், திட்டத்தில் இணைந்து விட்டால், எண்ணெய் நிறுவனங்களிடம் இருக்கும் மானியத் தொகை, சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். 
* ஜூலை முதல், இத்திட்டத்தில் வாடிக்கையாளர், எந்த தேதியில் இணைகிறாரோ, அந்த தேதியில் இருந்து தான், மானியம் வழங்கப்படும். 

இதுகுறித்து, எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்த திட்டத்தில் இணையும் வாடிக்கையாளருக்கு, மானியம் குறித்த விவரம், அவர்களின் மொபைல் போனுக்கு, எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தெரிவிக்கப்படுகிறது. ஜூன் மாதத்திற்குள், அனைத்து வாடிக்கையாளரும் திட்டத்தில் இணைந்து, முன்வைப்பு, மானியத் தொகையை, சிக்கல் இல்லாமல் பெறலாம். இவ்வாறு, அவர் கூறினார்.


அலைக்கழிப்பு:


நேரடி மானிய திட்டத்தில் இணைவதற்காக, காஸ் சிலிண்டர் பெயர் மாற்றம், முகவரி மாற்றம், பிழை திருத்தம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள, மக்கள், தகுந்த ஆவணங்களுடன், காஸ் ஏஜன்சிக்கு செல்கின்றனர். ஆனால், அங்குள்ள ஊழியர்கள், அவர்களிடம், 'ஆவணங்கள் சரியில்லை' எனக் கூறி, பண வசூல் செய்வதுடன் அலைக்கழிக்கின்றனர். இதுகுறித்து, எண்ணெய் நிறுவன அதிகாரிகளிடம், எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement