Ad Code

Responsive Advertisement

புது அரசு மருத்துவ கல்லூரியில் எம்.சி.ஐ., குழு ஆய்வு: வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை?

அரசு ஓமந்தூரார் தோட்டத்தில், புதிய மருத்துவ கல்லூரி பணிகள் முடிந்து செயல்பாட்டுக்கு தயாராக உள்ளது. இந்திய மருத்துவ கவுன்சிலான எம்.சி.ஐ.,யின் குழு, திடீர் ஆய்வு நடத்தியது. முறையான அனுமதி பெற்று, திட்டமிட்டபடி, வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை துவங்கும் என தெரிகிறது.

சென்னை, ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில், கடந்த, தி.மு.க., ஆட்சியின் போது, பிரம்மாண்டமாக, புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், இந்த கட்டடம், அரசு பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றப்பட்டு, 2014 பிப்., 22 முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு, 'எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு, 100 மாணவர்களை சேர்க்கும் வகையில், புதிய மருத்துவக்கல்லூரி துவக்கப்படும்' என, அரசு அறிவித்தது. 200 கோடி ரூபாயில், ஏழு அடுக்கு மாடி கட்டடங்களின் கட்டுமானப் பணி நடந்தது. இந்தப்பணிகள் முடிந்து, செயல்படத் தேவையான கட்டமைப்பு வசதிகளுடன், மருத்துவக்கல்லூரி தயாராக உள்ளது. மூன்று பேர் கொண்ட, எம்.சி.ஐ., குழு, ஆய்வுக்கு வந்தது. புதிய மருத்துவ கல்லூரியில் உள்ள வசதிகள்; இதற்காக உருவாக்கப்பட்ட, கஸ்தூரி பா அரசு பொது மருத்துவமனையில், நோயாளிகள் வருகை, சிகிச்சை வசதிகள், பணியாளர் செயல்பாடு குறித்து ஆய்வு நடத்தியது. மருத்துவ கல்வி இயக்குனர் கீதாலட்சுமி, கல்லூரி முதல்வர் சாந்திமலர் உள்ளிட்டோர், பணிகள் குறித்து விளக்கம் அளித்தனர். ஆய்வுப்பணி முடிந்தது. இந்த குழுவினர் தரும் அறிக்கை அடிப்படையில், எம்.சி.ஐ., முறையான அனுமதி அளிக்கும் என தெரிகிறது. மருத்துவக்கல்வி இயக்குனர் கீதாலட்சுமி கூறுகையில், ''கல்லூரி, செயல்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ளது. எம்.சி.ஐ., ஆய்வு முடிந்துள்ளது. திருப்திகரமாக அனைத்து பணிகளும் முடிந்துள்ளதால், நிச்சயம் செயல்பாட்டுக்கு அனுமதி கிடைக்கும். வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடத்த, அனைத்து முயற்சிகளையும், அரசு எடுத்து வருகிறது,'' என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement