Ad Code

Responsive Advertisement

மனைவிக்கு பாலியல் தொந்தரவு தந்த அதிகாரியை தாக்கிய கணவன் மீதான துறை ரீதியான நடவடிக்கை ரத்து - சென்னை உயர் நீதிமன்றம்

மனைவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அதிகாரியைத் தாக்கிய கணவன் மீது நடத்தப்பட்ட துறைரீதியான நடவடிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் தொழில்நுட்ப பணியாளராக பணியாற்றி வருபவர் முருகன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது மனைவியும் அதே நிலையத்தில் அணு உலைப்பிரிவில் தொழில்நுட்ப பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், அணு உலை பிரிவின் அதிகாரி குமார் என்பவர் முருகனின் மனைவிக்கு 2013 ஜனவரி 4ம் தேதி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்பட்டது. இந்த விஷயத்தை முருகனிடம் அவரது மனைவி கூறியுள்ளார். இதையடுத்து, கடந்த 2013 ஜனவரி 7ம் தேதி குமாரைச் சந்தித்து முருகன் விசாரித்துள்ளார். அப்போது ஏற்பட்ட வாய்தகராறில் குமாரை பிடித்து முருகன் கீழே தள்ளியுள் ளார். கீழே விழுந்த குமார் தன்னை முருகன் தாக்கியதாக துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தார்.

புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய அதிகாரிகள் முருகனுக்கு 2013 மே 17ம் தேதி மெமோ கொடுத்தனர். இதை எதிர்த்து முருகன் மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த தீர்ப்பாயம் முருகன் மீது தொடரப்பட்ட விசாரணை சரிதான் என்று 2013 செப்டம்பர் 18ல் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து முருகன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் பால்வசந்தகுமார், பி.ஆர்.சிவகுமார் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அளித்த உத்தரவு வருமாறு:
மனுதாரர் முருகனின் மனைவிக்கு குமார் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது தொடர்பாக முருகனின் மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் குமார் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு அவர் 2013 ஜனவரி 22ல் சஸ்பென்ட் செய்யப்பட்டார். 

பின்னர் அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டு 2013 ஜூலையில் குமார் மும்பை டிராம்பேயில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்துக்கு மாற்றப்பட்டார். முருகன் தாக்கியதால் குமாருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. தாக்குதல் தொடர்பாக குமார் எந்த போலீசிலும் புகார் கொடுக்கவில்லை. முருகனின் மனைவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததை குமார் ஒப்புக்கொண்டு அதற்காக மன்னிப்பும் கேட்டார் என்று முருகன் கூறியுள்ளார். ஆனால், பேச்சுவார்த்தை முற்றியுள்ளது. அதனால், குமாரை முருகன் தள்ளியுள்ளார். விசாரணை நடந்தபோது குமார் ஆஜராகி இந்த குற்றச்சாட்டை நிரூபிக்கவில்லை. எனவே, முருகன் மீது நடவடிக்கை எடுப்பது சரியான நடைமுறை இல்லை. இதன் அடிப்படையில் முருகன் மீது எடுக்கப்பட்ட துறைரீதியான நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement