Ad Code

Responsive Advertisement

அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் சாதனை: பெண்களின் பாதுகாப்புக்கான மின்னணு கையுறை தயாரித்தனர்: கிரண்பேடி வெளியிட்டார்

பெண்களின் பாதுகாப்புக்கான மின்னணு கையுறையை அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் தயாரித்து சாதனை படைத்தனர். இந்த கையுறையை கிரண்பேடி வெளியிட்டார்.


தொட்டால் ‘ஷாக்’

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மின்னணு மற்றும் தகவல் தொடர்பு 3-ம் ஆண்டு மாணவர்களான நூர்அப்துல், ஜே.கே.கவுசிகா ஜனனி, எஸ்.வினோதா ஆகியோர் பெண்களின் பாதுகாப்புக்கான மின்னணு கையுறை (இ-கிளவ்) ஒன்றை தயாரித்துள்ளனர்.

இந்த கையுறையை பெண்கள் அணிந்து கொண்டு ஆள் நடமாட்டம் குறைவான பகுதிகளில் செல்லும்போது, ஏதேனும் நபர்களால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானால் இந்த கையுறையால் அவர்களை பிடிக்க வேண்டும். அப்போது அவர்கள் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்படுவார்கள். ஆனால், இந்த கையுறை அணிந்திருப்பவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

கிரண்பேடி வெளியிட்டார்

இந்த மின்னணு கையுறையை கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் சமுக ஆர்வலரும், முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரியுமான கிரண்பேடி வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

பணவீக்கம் வீழ்ச்சி அடையும்

மாணவர்கள் தான் வருங்காலத்தில் சிறந்த தொழில்முனைவோராகவும், பொருட்களை உற்பத்தி செய்பவர்களாகவும் மாறுகின்றனர். உற்பத்தி அதிகரிப்பால் கூடுதலான பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் வருமானம் அதிகரிக்கும். இதன்மூலம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும், பணவீக்கம் வீழ்ச்சி அடையும்.

தற்போது, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மிகவும் குறைவாக உள்ளது. மாணவர்கள் தங்களுக்கான 24 மணி நேரத்தை முறையாக பயன்படுத்தி சுயஒழுக்கத்துடன், தங்கள் திறமைகளை நாட்டுக்கு அர்ப்பணிப்பார்களேயானால் நாடு வளர்ச்சி அடையும். இதற்கு கூட்டு குடும்ப வாழ்க்கை முறை, குழந்தைகள் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை பார்வையிடுதல், யோகா கற்றல் இந்த மூன்றும் தான் அடிப்படை தேவையாகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதே பெயருடன் மாணவி

பின்னர் நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது, தூத்துக்குடியை சேர்ந்த கிரண்பேடி என்ற மாணவி எழுந்து, “உங்கள் மீது எனது தந்தை கொண்ட ஈர்ப்பின் காரணமாக எனக்கு கிரண்பேடி என பெயர் வைத்துள்ளார். நீங்கள் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரியாவதற்கு என்ன செய்தீர்கள்?” என்று கேட்டார்.

உடனே கிரண்பேடி அந்த மாணவியை மேடைக்கு அழைத்து, தனது வாழ்க்கை வரலாறு குறித்த புத்தகத்தை பரிசாக அளித்து அனைத்து தகவல்களும் இந்த புத்தகத்தில் இருப்பதாக கூறினார். இது அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சி அடையச் செய்தது.

இந்த நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் பேராசிரியர் நாராயணசாமி, தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கண்ணன், பேராசிரியர் சுவாமிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement