Ad Code

Responsive Advertisement

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு "அக்னி பரீட்சை'; வீரியம் பெறுமா விடுமுறை நாள் சிறப்பு வகுப்பு

அரசுப்பள்ளி மாணவ, மாணவியரின் நலன் மீது, ஆசிரியர்களுக்கு உள்ள அக்கறையை அளவிடும் ஆயுதமாக, ஞாயிறு சிறப்பு வகுப்பு அறிவிப்பு மாறியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில், ஏராளமான அரசு, உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் செயல்படுகின்றன.

ஆண்டு தோறும் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில், 100 சதவீத தேர்ச்சியை காண்பிக்க பள்ளிகள் ஆர்வம் காட்டும் நிலையில், மாநில மற்றும் மாவட்ட அளவிலான ரேங்க் பெற, பள்ளிகள் முனைப்பு காட்டுகின்றன. இந்த 100 சதவீத தேர்ச்சி விகிதம் மற்றும் ரேங்க் பட்டியலில், அரசுப் பள்ளிகள் பின்னுக்கு தள்ளப்படுகின்றன.
சிறப்பு வகுப்பு : உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில், 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் மீது சிறப்பு கவனம் செலுத்தும் ஆசிரியர்கள், சனி, ஞாயிறு உட்பட விடுமுறை நாட்களில், 2 அல்லது 3 மணி நேரம், அவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தி, கல்வி போதிக்கின்றனர்.
ஆனால், அரசு மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகளில், அத்தகைய கல்வி போதிப்பு முறை இல்லை; பள்ளி நாட்கள் தவிர, விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு கல்வி போதிக்கப்படுவது இல்லை. இந்நிலையில், அரசு பள்ளிகளும் தேர்ச்சி விகிதம் மற்றும் மாவட்ட, மாநில ரேங்க் பட்டியலில் முன்னுக்கு வர, சனி, ஞாயிறு உட்பட விடுமுறை நாட்களில், சிறப்பு வகுப்புகளை நடத்த, மாவட்ட கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது; கடந்த 2 வாரமாக, பல பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டும் வருகின்றன.
திடீர் ஞானோதயம் : கல்வியாண்டின் துவக்கம் முதல், விடுமுறை நாள் சிறப்பு வகுப்புகளை நடத்தி வரும் தனியார் பள்ளிகளின் செயல்பாடுகளை கண்டுக் கொள்ளாமல், அவர்களை தட்டிக் கேட்காமல், வாய் மூடி கிடந்த, சில பொது நல ஆர்வலர்கள், அரசுப் பள்ளிகளில் ஞாயிறு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் போது மட்டும் எதிர்ப்பு குரல் கொடுக்க துவங்கியுள்ளனர்."வாரத்துக்கு ஒரு நாள் தான் விடுமுறை; அதிலும் குழந்தைகளை கஷ்டப்படுத்த வேண்டுமா; குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுவர்; இதனால், பெற்றோர்களுக்கும் கஷ்டம்' என்பன, போன்ற காரணங்களை அவர்கள் கூறி வருகின்றனர்.
ஒருமித்த கருத்து : விடுமுறை நாள் சிறப்பு வகுப்பு விவகாரத்தில் மாவட்ட நிர்வாகமும், மாவட்ட கல்வித் துறையும் ஒருமித்த கருத்துடன் உள்ளன. இதுகுறித்து, கலெக்டர் சங்கரிடம் கருத்து கேட்ட போது,""சமவெளி பிரதேசங்களில், இரவு வரை சிறப்பு வகுப்பு நடத்தப்படுகிறது; ஆனால், நீலகிரியில் அவ்வாறு இல்லை. பத்து மற்றும் 12ம் வகுப்பு என்பது, மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையை நிர்ணயம் செய்யும் வகுப்புகள். எனவே, விடுமுறை நாட்களில், சில மணி நேரம் சிறப்பு வகுப்பு நடத்தி, மாணவர்களை தயார்படுத்துவதில் தவறு இல்லை; இதை பெற்றோரும் ஊக்குவிக்கின்றனர். சிறப்பு வகுப்புகளை நடத்தக் கூறி, பெற்றோர் பலரே யோசனை தெரிவிக்கின்றனர்; ஆசிரியர்கள் மனது வைத்தால், மாணவர்களின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்,'' என்றார்.பொதுத் தேர்வு நெருங்க இன்னும் சில வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், விடுமுறை நாள் சிறப்பு வகுப்பு என்பது, மாணவர்கள் மீதான ஆசிரியர்களின் பற்றுதலை தெரிந்து கொள்ளும் ஒரு "அக்னி பரீட்சையாக' மாறி உள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement