Ad Code

Responsive Advertisement

ஆசிரியரின் பாதுகாப்பிற்கு எதிரான உத்தரவுகள்: நீக்க கோரி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்

ஆசிரியரின் பாதுகாப்பிற்கு எதிரான உத்தரவுகளை நீக்க கோரியும், ஆசிரியர்களுக்கும் பாதுகாப்பு வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்க கோரியும், மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு, மாநிலம் முழுவதும், நாளை ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.

கூட்டமைப்பின் நிர்வாகிகள் கூறியதாவது: குழந்தைகள் உரிமை மற்றும் நலனை முதன்மைப்படுத்தி, அரசு உருவாக்கியுள்ள விதிகளால், மாணவர்களிடம், ஆசிரியர்கள் மீதான பய உணர்வு குறைந்து விட்டது. பல மாணவர்கள், போதை பாக்கு போட்டும், மது அருந்தி விட்டும், பள்ளிக்கு வருகின்றனர். மாணவர்கள், சரியாக படிக்காததைக் கூட, கண்டிக்காமல் இருந்து விடலாம். ஆனால், ஒழுங்காக, பள்ளிக்கு வராமல் இருப்பதைக் கூட கண்டிக்க முடியவில்லை. ஆசிரியை களை, மாணவர்கள் கேலி செய்தாலும், தட்டி கேட்க முடியவில்லை. எனவே, மாணவர்கள் உரிமையை காரணம் காட்டி, ஆசிரியர்களுக்கு பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியுள்ள அரசு உத்தரவுகளை, உடனே நீக்க வேண்டும். அனைத்து ஆசிரியர்கள் பாதுகாப்பையும், அரசு உறுதிபடுத்தும் வகையில், தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி, மாநிலம் முழுவதும், வரும் 10ம் தேதி (நாளை), அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், பள்ளி களில் கருப்பு பட்டை அணிந்தும், பள்ளி முடிந்தவுடன், பள்ளி நுழைவாயில் முன், கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபடுவர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

ஒன்றா... இரண்டா...: நிர்வாகிகள் போட்ட பட்டியல்

* சில ஆண்டுக்கு முன், ஏழாயிரம் பண்ணை அரசு நிதி பெறும் பள்ளி ஆசிரியர், செல்வராஜ், அதே பள்ளி மாணவரால் கொலை செய்யப்பட்டார்.

* சென்னை பாரிமுனையில், பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி, அதே பள்ளி மாணவரால் கொலை செய்யப்பட்டார்.

* சென்னையில், தனியார் பள்ளி உடற்கல்வி ஆசிரியர், ரவுடி கும்பலால் கடுமையாக தாக்கப்பட்டார்.

* சென்னை மதுரவாயல், பள்ளி கணினி ஆசிரியை, லட்சுமியை, பள்ளி மாணவரே தாக்கியதில், அவரின் காது கிழிந்தது.

* திண்டுக்கல் மாவட்டம், கள்ளர் மேல்நிலைப் பள்ளி மாணவர், அதே பள்ளியை சேர்ந்த, சக மாணவரால் கொலை செய்யப்பட்டார். இப்படி, பட்டியல் தொடர்கிறது. மாணவர்களின் அராஜகத்தால், சக மாணவர்களும், ஆசிரியர்களும் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு, ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இவ்வாறு, நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement