தனியார் கல்லூரிகளில் உள்ளதுபோல, பேராசிரியரை மாணவர்கள் மதிப்பிடும் முறையை அரசுக் கல்லூரிகளில் நடைமுறைப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக மாநில உயர் கல்வித் துறைச் செயலர் ஹேமந்த் குமார் சின்ஹா கூறினார்.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் மேம்பாட்டு பயிலரங்கம் முதல் முறையாக வியாழக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டத்தைத் தொடக்கிவைத்து ஹேமந்த் குமார் சின்ஹா பேசியது:
மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்கள் காரணமாக உயர் கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதம் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. ஆனால் கல்வியின் தரம் தொடர்ந்து கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.
நாட்டில் 751 பல்கலைக்கழகங்கள் இருக்கின்றபோதும், அவற்றில் ஒன்றுகூட உலக அளவில் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களின் பட்டியலில் இடம்பெற முடியவில்லை. இந்த நிலையை மாற்றுவதற்காக மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழக அரசைப் பொருத்தவரை, கல்லூரிகளில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய -ஸ்மார்ட்- வகுப்பறைகள், கல்வி நிறுவனம் - தொழில் நிறுனங்கள் கூட்டு முயற்சி, வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுடன் ஆசிரியர் - மாணவர் பரிமாற்றும் திட்டம், மொழி மேம்பாட்டு திட்டம் என பல்வேறு திட்டங்களை தமிழக அரசு நடைமுறைக்குக் கொண்டுவந்துள்ளது. இன்றைய மாணவர்களும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியை உடனுக்குடன் கற்று தேர்ச்சியுடன் விளங்குகின்றனர். இதன் காரணமாக ஆசிரியர்களைவிட, அதிகத் தகவல்களை மாணவர்கள் தெரிந்து வைத்துக்கொண்டுள்ளனர்.
ஆனால், பேராசிரியர்களோ 10 ஆண்டுகளாக ஒரே பாடக் குறிப்பை வைத்துக்கொண்டு வகுப்புகள் நடத்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். கல்வியின் தரம் கேள்விக்குறியாகி வருவதற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம். இந்த நிலை மாற நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப ஆசிரியர்கள் தங்களை அவ்வப்போது மேம்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும்.
வளர்ந்த நாடுகளில் கல்வியின் தரத்தை உறுதிப்படுத்த ஆசிரியரை மாணவர் மதிப்பிடும் முறை பின்பற்றப்படுகிறது. இது இங்குள்ள தனியார் கல்லூரிகள் சிலவற்றில் நடைமுறையில் உள்ளது.
இந்த நடைமுறையை அனைத்து அரசு கல்லூரிகளிலும் நடைமுறைப்படுத்துவது குறித்து அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்பட உள்ளது. அவ்வாறு அறிமுகப்படுத்தும் பட்சத்தில் அதனடிப்படையிலேயே, பதவி உயர்வு, ஊக்க ஊதியம் ஆகியவை வழங்கப்படும் என்றார் அவர்.
தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி. விஸ்வநாதன்: புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 30 உதவிப் பேராசிரியர்களுக்கு டிசம்பர் 3-ஆம் தேதி வரை 21 நாள்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.
மைக்ரோ சாஃப்ட் நிறுவன அதிகாரிகள் மூலம் ஆறு நாள்கள் கம்ப்யூட்டர் பயிற்சிகள் அளிக்கப்படுவதோடு, வரும் 20-ஆம் தேதி முதல் இந்தியா முழுவதுமுள்ள தலைசிறந்த கல்வி நிறுவனங்களின் பேராசிரியர்களைக் கொண்டு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.
இந்தத் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட பின்னர், இணைப்பு கல்லூரிகளுக்கு விரிவுபடுத்தப்படும். இதற்காக தமிழகம் முழுவதும் 10 முதல் 15 மையங்கள் அமைக்கப்பட்டு, இப்போது பயிற்சி பெறும் 30 பேராசிரியர்கள் மூலம் இணைப்புக் கல்லூரி பேராசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றார் ஜி. விஸ்வநாதன்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை