Ad Code

Responsive Advertisement

14 இடங்கள் பரிந்துரை ! : புதிதாக தொடக்க பள்ளிகள் துவங்க... : வரும் கல்வியாண்டு முதல் செயல்படும்

காஞ்சிபுரம் மாவட்டத்தில், புதிதாக 14 இடங்களில் தொடக்கப் பள்ளிகள் துவக்குவதற்கு அனைவருக்கும் கல்வி இயக்கம் பரிந்துரை செய்துள்ளது. வரும் கல்வி ஆண்டில் இந்த பகுதிகளில் வரும் கல்வி ஆண்டு முதல் தொடக்கப் பள்ளிகள் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில், ஆண்டுதோறும் தொடக்கப் பள்ளிகள் இல்லாத குடியிருப்பு பகுதிகளை கண்டறிந்து, அந்த பகுதிகளில், புதிய தொடக்கப் பள்ளிகளை, தொடக்கக் கல்வி இயக்குனரகம் துவக்கி வருகிறது. மாநிலத்தில், ஒரு கி.மீ., தொலைவுக்குள் ஒரு அரசு தொடக்கப் பள்ளி இருக்க வேண்டும் என்பது விதி.
ஒரு கி.மீ., ஒரு பள்ளி அந்த வகையில், ஒரு கி.மீ., தொலைவுக்குள் தொடக்கப் பள்ளி இல்லாத பகுதிகளை கண்டறிந்து, அப்பகுதிகளில், பள்ளி துவங்க போதுமான முகாந்திரம் உள்ளதா என, அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டம் மூலம், தொடக்கக் கல்வி இயக்குனரகம் ஆய்வு செய்வது வழக்கம். அவ்வாறு தொடக்கப் பள்ளிகள் துவக்க, போதுமான முகாந்திரம் உள்ள பகுதிகளில், புதிய தொடக்கப் பள்ளிகள் ஆண்டுதோறும் துவக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, 2015 - 16ம் கல்வி ஆண்டில், புதிய துவக்கப் பள்ளிகளை துவக்குவது தொடர்பான பணிகளை, தற்போது அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம், தொடக்கக் கல்வி இயக்குனரகம் துவக்கி உள்ளது.

பட்டியல் தயாரிப்பு
அதன்படி, ஏற்கனவே மாவட்டத்தில் தொடக்கப் பள்ளி இல்லாத பகுதிகளை, அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார மேற்பார்வையாளர்கள் கண்டறிந்து, பட்டியல் தயாரித்துள்ளனர்.

அந்த பட்டியலை கொண்டு, அவர்களே மீண்டும் மறு ஆய்வு செய்தனர். அதனை தொடர்ந்து, தொடக்கப் பள்ளி துவக்குவதற்கு முகாந்திரம் உள்ள 14 குடியிருப்பு பகுதிகளை கொண்ட பட்டியலை, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்திடம் சமர்ப்பித்து விட்டனர். அந்த பட்டியலில் உள்ள பகுதிகளை ஆய்வுசெய்து கருத்துரு அனுப்ப, உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம், கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்தது. இந்த 14 குடியிருப்பு பகுதிகளில் ஆய்வு நடத்தி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலருக்கு கருத்துரு அனுப்பும் பணியில், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த கருத்துருவில், சம்பந்தப்பட்ட பகுதியின் சட்டமன்ற தொகுதி, ஒன்றியத்தின் பெயர், ஊராட்சியின் பெயர், பள்ளி துவக்க கோரும் கிராமத்தின் பெயர், மொத்த மக்கள் தொகை, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர், அப்பகுதியில் குழந்தைகளின் எண்ணிக்கை, பள்ளிகளில் சேர உள்ள குழந்தைகளின் உத்தேச எண்ணிக்கை, அருகில் உள்ள தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி மற்றும் தொலைவு, அப்பகுதியில் உள்ள குழந்தைகள் தற்போது பயின்று வரும் பள்ளியின் பெயர், பள்ளி துவக்குவதற்கு இடவசதி உள்ளதா, கட்டட வசதி உள்ளதா என்ற பல்வேறு விவரங்களை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் சேகரித்து, பட்டியல் தயாரித்து வருகின்றனர்.

விரைவில் கருத்துரு
இதுகுறித்து, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி கூறுகையில், ''தொடக்கப் பள்ளி துவங்குவதற்கான பகுதிகளுக்கு, கருத்துரு அனுப்பும்படி உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களை கேட்டிருக்கிறோம். விரைவில் கருத்துரு அனுப்புவார்கள்,'' என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement