Ad Code

Responsive Advertisement

தருமபுரி, கன்னியாகுமரியில் விரைவில் அறிவியல் மையம்

தமிழகத்தில் தருமபுரி, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் விரைவில் அறிவியல் தொழில்நுட்ப மையம் அமைக்கப்படவுள்ளது என தமிழக அரசின் அறிவியல், தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குநர் பி.அய்யம்பெருமாள் தெரிவித்தார்.

தில்லி பிரகதி மைதானத்தில் திங்கள்கிழமை தொடங்கிய நான்காவது தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சியில் தமிழக மாணவ, மாணவிகளுடன் பங்கேற்றுள்ள அவர், நமது நிருபருக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியதாவது:

சென்னை, வேலூர், கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் தமிழ்நாடு அறிவியல், தொழில்நுட்ப மையங்கள் உள்ளன. தருமபுரி, கன்னியாகுமரி ஆகிய இடங்களிலும் விரைவில் அறிவியல் தொழில்நுட்ப மையம் அமைக்கப்பட உள்ளன.

பள்ளிக் குழந்தைகளிடம் அறிவியல் ஆர்வத்தை வளர்க்க "ஆக்கப்பூர்வ ஆய்வுக்கான அறிவியல் புத்தாக்கம்' (இன்ஸ்பையர்) மூலம் அறிவியல் திட்டத்தை உருவாக்குவதற்காக மாணவர்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது. அதன் மூலம் மாணவர்கள் தங்களது அறிவியல் மாதிரியை உருவாக்கி, கல்வி மாவட்ட அளவில் நடைபெறும் கண்காட்சியில் படைப்புகளை காட்சிக்கு வைக்கின்றனர்.

அதில் தேர்வு செய்யப்படும் சிறந்த மாதிரிகள், மாநில அளவில் நடைபெறும் அறிவியல் படைப்புக் கண்காட்சியில் வைக்கப்படுகின்றன. அதில் தேர்வான படைப்புகள் தற்போது தில்லியில் நடைபெறும் தேசியக் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, கடந்த 2013-14-ஆம் ஆண்டுக்கான திட்டப் போட்டியில் மாவட்ட அளவில் பங்கேற்க 8,950 மாணவர்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது. பிறகு நடைபெற்ற கல்வி மாவட்ட அளவிலான கண்காட்சியில் மாணவர்களின் அறிவியல் திட்டங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இவற்றில் 680 படைப்புகள் மாநில அளவிலான கண்காட்சிக்குத் தேர்வாகின.

அதில், 41 படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு தேசிய அளவிலான கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. முதல் முறையாக நடைபெற்ற தேசிய அளவிலான திட்டப் போட்டியில் தமிழகத்திற்கு மூன்று பரிசுகள் கிடைத்தன. கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் 2 பரிசுகள் கிடைத்தன. இந்த ஆண்டும் பரிசு கிடைக்கும் என்று நம்புகிறோம்.

மாணவர்கள் தங்களது உள்ளூர்ப் பகுதியில் நிலவும் பிரச்னகளை மையமாகக் கொண்டு படைப்புகளை உருவாக்கி காட்சிப்படுத்தியுள்ளனர். இது அவர்களது சமூக அக்கறையையும், அதே சமயத்தில் அறிவியல் ஆர்வத்தையும் எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

குழந்தைகளிடம் அறிவியல் சிந்தனை வளரவும், அறிவியல் படிப்பை ஊக்குவிக்கவும், அறிவியல் ஆய்வுடன்கூடிய பணிகளை மேற்கொள்ளும் வகையிலும் இக்கண்காட்சி நடத்தப்படுகிறது. அறிவியல் தொழில்நுட்பம் இருந்தால் தொழில்கள் வளர்ச்சி அடைய முடியும். மேலும், நீர் மாசு, காற்று மாசு ஆகியவற்றைக் குறைக்க அறிவியல் தொழில்நுட்பம் உதவுகிறது என்றார் அவர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement