Ad Code

Responsive Advertisement

தில்லி தேசிய அறிவியல் கண்காட்சியில் தமிழக மாணவர்களின் அசத்தல் படைப்புகள்!

தில்லியின் மையப் பகுதியில் அமைந்துள்ள அந்த வளாகம் மிகவும் பிரசித்தி பெற்றது. உள்நாடு மட்டுமன்றி, வெளிநாடுகளும் அவ்வப்போது கண்காட்சிகளை நடத்தும் முக்கியப் பகுதி அது. அதன் வளாகத்தில் பள்ளி மாணவியின் கணீர் குரல் பார்வையாளர்களை ஈர்க்கிறது.

"வெளியூர்களுக்குச் செல்லும் போது ரயில் நிலையங்களிலோ, பேருந்து நிலையங்களிலோ, பொது இடங்களிலோ சிறுநீர் கழிக்கச் செல்லும் பலர் அவசர கதியில் தண்ணீரைப் பயன்படுத்தி சுத்தப்படுத்தாமல் சென்று விடுவதுண்டு. இதனால், தேவையில்லாத சுற்றுச்சூழல் பாதிப்பும், சுகாதாரக் கேடும் ஏற்படுகிறது.

இப்பிரச்னைக்குத் தீர்வாக குறைந்த செலவில் "கழிப்பறை கோப்பையை' தூய்மையாக்கும் தானியங்கி இயந்திரத்தை உருவாக்கியுள்ளேன். கழிப்பறையின் தரைத் தளத்தில் ஏறி நின்றவுடனேயே தானியங்கி இயந்திரம் தானாகவே நீரைப் பாய்ச்சி சுத்தம் செய்யும் வகையில் இந்த இயந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு மின்சாரம் தேவையில்லை. பராமரிப்புச் செலவும் தேவையில்லை. வெறும் ரூ. 800-இல் இதை உருவாக்கிவிடலாம். இதோ பாருங்கள்..! உங்களுக்கே புரியும்..!' என்று கூறுகிறார்  கிருஷ்ணகிரி மாவட்டம், அந்தேரிப்பட்டி ஊராட்சி ஒன்றியப் பள்ளியின் 8-ஆம் வகுப்பு மாணவி ஆர். வாசுகி.

மற்றொரு புறம், "பட்டம் எதற்குப் பயன்படும்?' என்ற கேள்வியைப் பார்வையாளரிடம் எழுப்பும் மற்றொரு மாணவி, அதற்கான பதிலையும் தானே கூறுகிறார். "பறக்க விட மட்டுமே "பட்டம்' பயன்படும் என்று நினைக்காதீர்கள். குறைந்த செலவில் மின்சாரம் தயாரிக்கவும் பயன்படும்' என்று கூறியவாறு, பட்டம் விட்டு மின்சாரம் தயாரிக்கும் கருவி கொண்டு செயல்முறை விளக்கமும் அளிக்கிறார் காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம், கருவேப்பம் பூண்டி ஊராட்சி ஒன்றியப் பள்ளி 8-ஆம் வகுப்பு மாணவி வி. காவியா.

சென்னை பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியின் 11-ஆம் வகுப்பு மாணவர் ஸ்ரீனிவாச ராகவன், சைக்கிளை பேட்டரியில் இயங்கும் வாகனமாகவும், சூரியத் தகடு மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் வாகனமாகவும் பயன்படுத்தும் அறிவியல் உத்தியைப் பார்வையாளர்களுக்கு எடுத்துரைக்கிறார்.

தேனி மாவட்டம், போடியைச் சேர்ந்த சிசம் மெட்ரிக் பள்ளி 11-ஆம் வகுப்பு மாணவி ஆர். கௌரி கார்த்திகா, "கல்யாணம் பண்ணிப் பார்! வீட்டைக் கட்டிப் பார்! என்பார்கள்.

இவை இரண்டுமே செலவு அதிகம் பிடிக்கும் என்பதால்தான் அப்படிக் கூறுகின்றனர். ஆனால், நான் தெரிவிக்கும் புதிய வீடு கட்டும் முறையானது நிச்சயமாக கட்டுமானச் செலவைக் குறைக்கும். மேலும், குளிர்காலத்தில் வீட்டின் உள்புறம் கதகதப்பாகவும், வெயில் காலத்தில் குளிர்ச்சியாகவும் இருக்கும்' என்று கூறிக் கொண்டே மளமளவென தனது மாதிரி வீட்டை கட்டுவதற்கான செயல்முறையை விளக்குகிறார். மேலும், மழைநீர் சேகரிப்பு, தொங்கும் தோட்டம், வீட்டுமாடித் தோட்டம், சூரிய மின்சக்தி தயாரிப்பு ஆகியவற்றையும் திறம்பட விளக்குகிறார்.

ஆக்கப்பூர்வ ஆய்வுக்காக அறிவியல் புத்தாக்கத்தின் (இன்ஸ்பைர்) கீழ், தில்லி பிரகதி மைதானத்தின் அரங்கில் திங்கள்கிழமை தொடங்கிய நான்காவது தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சி "2014', திட்டப் போட்டியில் பங்கேற்று தமிழக மாணவ, மாணவிகள் நிகழ்த்தியவைதான் இந்தப் படைப்புகள். ஆக்கப்பூர்வ ஆய்வுக்காக அறிவியல் புத்தாக்கத்தின் (இன்ஸ்பைர்) கீழ், மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில் இக்கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இதில், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் அறிவியல் படைப்புகள் தனித்தனியே சிறு அரங்குகள் மூலம் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

 தமிழகத்தின் சார்பில் அரங்கு எண் 352-இல் இருந்து 393 வரை 41 திட்டங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கிராமப்புற மாணவர்கள், நகர்ப்புற மாணவர்கள் பலரும் தத்தமது படைப்புகளை காட்சிப்படுத்தி பார்வையாளர்களுக்கு செயல்விளக்கம் அளித்து வருகின்றனர்.

மின்சாரம் உற்பத்தி, கழிவுநீர் மேலாண்மை, நீர் மேலாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சூரிய சக்தியில் மின்சாரம் தயாரிப்பு, செயற்கை உரம் பயன்படுத்தும் முறை, மண்பானை குளிர்சாதனப்பெட்டி, காதுகேளாதோர் பயன்படுத்தும் நவீனக் கேட்புக் கருவி என சமூகத்திற்குப் பயன்படும் பல்வேறு பயனுள்ள தலைப்புகளில் தங்களது திட்டங்களை மாணவ, மாணவிகள் காட்சிப்படுத்தியுள்ளனர்.

 இக்கண்காட்சி வரும் 8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அன்றைய தினம் மத்திய அறிவியல், தொழில்நுட்பம், புவி அறிவியல் அமைச்சர் ஜிதேந்திர சிங் தேசிய விருதுகளை மாணவ, மாணவிகளுக்கு வழங்க உள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement