Ad Code

Responsive Advertisement

விஜயதசமியையொட்டி குழந்தைகளுக்கு ஏடு தொடக்கம்

விஜயதசமியை முன்னிட்டு சென்னையில் உள்ள மகாலிங்கபுரம் அய்யப்பன் கோவில் உள்பட பெரும்பாலான கோவில்களிலும் குழந்தைகளுக்கு அரிசியில் அட்சரம் எழுதியும், நாக்கில் தங்கமோதிரத்தால் ‘‘ஓம்’’ என்று எழுதியும் ஏடு தொடங்கப்பட்டது.

குழந்தைகளுக்கு ஏடு தொடக்கம்

நவராத்திரியின் 10-வது நாளான விஜயதசமி வெற்றி நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் எந்த செயல் தொடங்கினாலும் அது வெற்றியில் தான் முடியும் என்பது நம்பிக்கையாகும். குழந்தைகளை பள்ளிக்கூடத்தில் சேர்க்க உகந்த நாள் என்பதால், பள்ளியில் புதிதாக சேர்க்க இருக்கும் குழந்தைகளுக்கு விஜயதசமியை முன்னிட்டு நேற்று சென்னையில் உள்ள கோவில்களில் ஏடு தொடங்கும் நிகழ்ச்சி நடந்தது.

சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள அய்யப்பன் கோவிலில் நேற்று காலையிலேயே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஏடு தொடங்குவதற்காக திரண்டனர். காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு அபிஷேகமும், கணபதி ஹோமமும், காலை 6 மணிக்கு சரஸ்வதி பூஜையும் நடந்தது. நேற்று காலை 10.30 மணி முதல் பகல் 12 மணி வரை எமகண்டமாக இருந்ததால் காலை 6 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் ஏடு தொடங்கப்பட்டது.

கோவிலில் சுவாமி முன்னிலையில் குழந்தைகளை சிலர் பெற்றோர்கள் மடியிலும், சிலர் குழந்தையின் தாத்தா, பாட்டி ஆகியோரின் மடியிலும் அமரவைத்து இருந்தனர். எதிரில் தாம்பாளத்தட்டில் அரிசியை பரப்பி வைத்திருந்தனர்.

ஒவ்வொரு குழந்தையின் கையை பிடித்து முதலில் கோவில் குருக்கள் அரிசியில் ‘‘ஓம்’’, ‘‘அம்மா’’, ‘‘அப்பா’’ என்று எழுத கற்றுத்தந்ததுடன், குழந்தையின் நாக்கில் தங்க மோதிரத்தால் ‘‘ஓம்’’ என்றும் எழுதி ஏடு தொடங்கிவைத்தார்.

தொடர்ந்து பெற்றோர்கள் அரிசி பரப்பிவைத்திருந்த தட்டில் 1,030 குழந்தைக்கு அட்சரம் எழுதி கற்றுத்தந்தனர். கோவில் சார்பில் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் சிலேட், குச்சி மற்றும் அ, ஆ எழுத்துகள் அடங்கிய நோட்டு புத்தகமும் வழங்கப்பட்டது.

கங்காதீஸ்வரர் கோவிலில் பாரிவேட்டை

சென்னை புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோவிலில் கடந்த 10 நாட்கள் நவராத்திரி விழா நடந்தது. நவராத்திரியையொட்டி முதல் ஒன்பது நாட்களும் ஒன்பது விதமான அலங்காரம் செய்யப்பட்டு விழா நடந்தது. விழா நாட்களில் குழந்தைகளின் இன்னிசை நிகழ்ச்சிகளும் நடந்தது. நவராத்திரியின் 10-ம் நாளான நேற்று விஜயதசமியையொட்டி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு உற்சவர் சந்திரசேகரரின் பாரிவேட்டை நிகழ்ச்சி நடந்தது.

இதற்காக சுவாமி கோவிலில் இருந்து நேற்று இரவு 7.30 மணியளவில் மேளதாளம் முழுங்க குதிரை வாகனத்தில் கங்காதீஸ்வரர் கோவில் ரோடு, ஆரியப்பன் தெரு, வெள்ளாளர் தெரு, புரசைவாக்கம் நெடுஞ்சாலையை அடைந்தார். அங்கு வாழைமரத்தை சுவாமி வெட்டி பாரிவேட்டை உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் பாரிவேட்டை உற்சவத்தில் கலந்து கொண்டு வழிபட்டனர்.

கோவில்களில் சுவாமி அம்புபோடும் நிகழ்ச்சி முடிந்த உடன், துர்க்கை அம்மனின் அம்சமாக விளங்கும் வன்னிமரத்தை பெண்கள் வலம் வந்து நவராத்திரி பூஜையை நிறைவு செய்தனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement