Ad Code

Responsive Advertisement

பள்ளிகளுக்கான தேசிய விளையாட்டுப் போட்டியில் செஸ் இல்லை: ஆர்வலர்கள் ஏமாற்றம்

பள்ளிகள் அளவில் நடத்தப்படும் தேசிய விளையாட்டுப் போட்டியில் இந்த ஆண்டு செஸ் விளையாட்டு இடம்பெறவில்லை. இதனால், செஸ் போட்டியில் ஆர்வமுள்ள மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இந்திய பள்ளிகள் விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் ஆண்டு தோறும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

நிகழாண்டுக்கான விளையாட்டுப் போட்டிகள் கடந்த மாதம் (செப்டம்பர்) கடைசி வாரம் தொடங்கியது. இந்த விளையாட்டுப் போட்டிகள் 2015 ஜனவரி மாதம் வரை 14 வயது, 17 வயது, 19 வயதுக்குட்பட்டோர் பிரிவுகளில் நடைபெற உள்ளன.

இதில், 90-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள் இடம்பெற்றுள்ளன. ஆனால், செஸ் போட்டி இடம்பெறவில்லை.

இதுதொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியது:

இந்திய பள்ளிகள் விளையாட்டு கூட்டமைப்பில் மொத்தம் 40 உறுப்பினர்கள் (மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள்) இடம்பெற்றுள்ளனர்.

தேசிய அளவிலான ஒவ்வொரு விளையாட்டுப் போட்டியையும் இவர்களில் யாரேனும் நடத்துவதற்கு முன்வர வேண்டும். இந்த ஆண்டு இந்த 40 உறுப்பினர்களில் செஸ் விளையாட்டுப் போட்டியை நடத்துவதற்கு ஒருவர் கூட முன்வரவில்லை.

எனவே, பள்ளிகள் அளவிலான தேசிய விளையாட்டுப் போட்டியில் செஸ் விளையாட்டு இடம்பெறவில்லை. ஆனால், அடுத்த ஆண்டு தேசிய விளையாட்டுப் போட்டிகளில் செஸ் விளையாட்டு இடம்பெற வாய்ப்புள்ளது என அவர்கள் தெரிவித்தனர்.

தேசிய அளவில் திறமையை நிரூபிக்க ஆர்வத்துடன் காத்திருக்கும் மாணவர்கள், போட்டிக்கான வாய்ப்பு பறிபோனதால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

கல்வியில் முன்னுரிமை: தமிழகத்தில் பி.இ. கலந்தாய்வில் விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்காக 500 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. அத்துடன், 2 எம்.பி.பி.எஸ்., 1 பி.டி.எஸ். இடங்களும் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.

நடப்பு ஆண்டு விளையாட்டுப் பிரிவு தரவரிசையில் முதலிடம் பெற்ற சென்னை மாணவி மிச்செல் கேத்ரினா, செஸ் வீராங்கனை. இவர், தேசிய அளவிலான செஸ் போட்டிகளிலும், சர்வதேச செஸ் போட்டிகளிலும் பதக்கங்களை வென்றிருந்தார்.

அதன் காரணமாக, இவருக்கு கிண்டி பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் பிரிவில் இடம் கிடைத்தது. அதேபோல், பட்டியலில் இரண்டாமிடம் பிடித்திருந்த மற்றொரு செஸ் விளையாட்டு வீரர் ஆகாஷுக்கு, அதே கல்லூரியில் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் என்ஜீனியரிங் பிரிவில் இடம் கிடைத்தது.

சிறந்த வீரர்களை உருவாக்க...

""பள்ளிகள் அளவிலான தேசிய விளையாட்டுப் போட்டிகளில் செஸ் விளையாட்டு இடம்பெற்றால்தான் எதிர்காலத்தில் சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்க முடியும்.

மேலும், இந்த விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கிடைக்கும் சான்றிதழ்களின் மூலம் அவர்கள் பொறியியல், மருத்துவம் உள்ளிட்டப் படிப்புகளில் முன்னுரிமை இட ஒதுக்கீட்டுப் பிரிவில் சேர முடியும். எனவே, தேசிய விளையாட்டுப் போட்டிகளில் செஸ் விளையாட்டை மீண்டும் இடம்பெறச் செய்ய வேண்டும்'' என உடற்கல்வி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement