Ad Code

Responsive Advertisement

"தனியார் பள்ளிகள், கல்லூரிகள் இன்று வழக்கம்போல செயல்படும்"

தனியார் பள்ளிகளும், கல்லூரிகளும் செவ்வாய்க்கிழமை (அக்.7) வழக்கம்போல செயல்படும் என தமிழ்நாடு தனியார் பள்ளிகள், கல்லூரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையிலிருக்கும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை  விடுதலை செய்யக் கோரி,  தமிழகத்தில் 4,500-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் செவ்வாய்க்கிழமை மூடப்படும் என அந்தக் கூட்டமைப்பின் நிர்வாகிகள் சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தனர்.

 இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து, தனியார் பள்ளிகள் செவ்வாய்க்கிழமை வழக்கம்போலச் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம், அதிகாரிகளுக்கு திங்கள்கிழமை அறிவுறுத்தியது.

இதனால், பள்ளிகள் செவ்வாய்க்கிழமை மூடப்படும் என்ற அறிவிப்பை தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு திரும்பப் பெற்றது.

 இது தொடர்பாக இந்தக் கூட்டமைப்பின் செயலாளர் டி.சி.இளங்கோவன் திங்கள்கிழமை கூறியது:

ஜெயலலிதாவை விடுதலை செய்ய வலியுறுத்தி, தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதம் இருப்பதால், தனியார் பள்ளிகள் புதன்கிழமை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வுகள் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளதால், இந்த முடிவை மாற்றி செவ்வாய்க்கிழமையே அனைத்து தனியார் பள்ளிகளையும் திறப்பது என இப்போது முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 எனினும், தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் பங்கேற்கும் உண்ணாவிரதம் சென்னையில் செவ்வாய்க்கிழமை திட்டமிட்டபடி நடைபெறும் என்றார் அவர்.

காலாண்டுத் தேர்வு: உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு காரணமாக செப்டம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான காலாண்டுத் தேர்வுகள் அக்டோபர் 7, 8 ஆகிய தேதிகளுக்கு தள்ளிவைக்கப்பட்டன.

மாநிலம் முழுவதும் பொதுவான தேர்வுகளாக இவை நடைபெற உள்ளன.

அரசுப் பள்ளிகள் இன்று திறப்பு: காலாண்டுத் தேர்வு விடுமுறைக்குப் பிறகு அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் செவ்வாய்க்கிழமை திறக்கப்படுகின்றன. இந்தப் பள்ளிகளில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இரண்டாம் பருவத்துக்காக சுமார் 3 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டு பள்ளிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.

கல்லூரிகள் செயல்படும்:  தனியார் கல்லூரி சங்கங்களின் சார்பில் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டிருந்த விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சங்க நிர்வாகிகள் கூறியது:

மாணவர்கள் நலன் கருதியும், மாணவர்களைப் போராட்டத்தில் ஈடுபடுத்த வேண்டாம் என்பதைக் கருத்தில் கொண்டும் செவ்வாய்க்கிழமை கல்லூரிகளுக்கு அறிவிக்கப்பட்ட விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

அனைத்து தனியார் பொறியியல் கல்லூரிகளும், கலை அறிவியல் கல்லூரிகளும் வழக்கம் போல செயல்படும் எனத் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement