Ad Code

Responsive Advertisement

காலாண்டு தேர்வு வினாத்தாள் 'அவுட்'டாக வாய்ப்பு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கைது செய்யப்பட்டதை கண்டித்து, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் நடப்பதற்கு ஆதரவு தெரிவித்து, தனியார் பள்ளிகள் கூட்டமைப்பினர், நாளை (அக்., 7) பள்ளிகள் மூடப்படும் என அறிவித்துள்ளதால், அன்றைய தினம் நடக்கும் காலாண்டு தேர்வுக்கான வினாத்தாள், 'அவுட்' ஆவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.
பள்ளிக்கல்வி இயக்குனரகம் சார்பில், கடந்த ஆகஸ்ட் மாதம், பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி., உள்ளிட்ட வகுப்புக்களுக்கு, காலாண்டு தேர்வு நடத்துவதற்கான தேர்வு அட்டவனை வெளியிடப்பட்டது. அரசு பள்ளிகள் மட்டுமல்லாது, அரசு உதவிபெறும் பள்ளி, மெட்ரிக், சுயநிதி பள்ளிகளும், அறிவிக்கப்பட்ட நாட்களில், தேர்வை நடத்த வேண்டும்.
குறிப்பாக, பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி., வகுப்புக்கான தேர்வை கண்காணிக்க, அந்தந்த மாவட்ட சி.இ.ஓ., தலைமையில், குழுவும் அமைக்கப்பட்டது. அதன்படி, பிளஸ் 2 தேர்வு அட்டவனையில், கடந்த, செப்., 15ம் தேதி மொழிப்பாடம் முதல் தாள் துவங்கி, 17 ல் ஆங்கிலம் முதல்தாள், 18 ல், ஆங்கிலம் இரண்டாம் தாள் என, 26 ல், உயிரியல், வரலாறு, தாவரவியல் ஆகியவற்றுடன் முடிகிறது.அதேபோல், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு அட்டவனையில், கடந்த, செப்., 17ம் தேதி மொழிப்பாடம் முதல்தாள், 18 ல், மொழிப்பாடம் இரண்டாம் தாள் என துவங்கி, 26 ல் சமூக அறிவியல் பாடத்துடன் முடிகிறது.ஆனால், கடந்த செப்., 18 ல் உள்ளாட்சி இடைத்தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டதால், அன்றைய தேதியில் நடக்க வேண்டிய காலாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதற்கு மாற்று தேதியாக, பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி., வகுப்புக்கு 17ம் தேதி தேர்வு, அக்., 7ம் தேதியும், 18ம் தேதி தேர்வு அக்., 8ம் தேதியும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து, வரும் 7ம் தேதி பள்ளிகள் திறக்க உள்ள நிலையில், அதே தேதியில், தள்ளிபோன காலாண்டு தேர்வுகள், பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி., வகுப்புக்கு நடக்கிறது. ஆனால், நேற்று தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கைது செய்யப்பட்டதற்கு ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்டவை நடப்பதற்கு ஆதரவு தெரிவித்து, தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு செயலாளர் இளங்கோ, நாளை (அக்., 7), தனியார் பள்ளிகள் மூடப்படும் என அறிவித்துள்ளார்.அதனால், 7ம் தேதி நடக்க வேண்டிய,விடுப்பட்ட பாடங்களுக்கான காலாண்டு தேர்வு,தனியார் பள்ளிகளில் நடத்தப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால், அரசு பள்ளிகளில் அறிவிக்கப்பட்ட தேதியில் காலாண்டு தேர்வு நடத்தப்படும் என, அறிவித்துள்ளது. இதனால், 7ம் தேதி வினாத்தாள், 'அவுட்' ஆவதற்கான வாய்ப்பு அதிகமாகியுள்ளது.கல்வி அதிகாரிகள் கூறியதாவது: பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி., வகுப்புக்கான காலாண்டு தேர்வை அரசு மற்றும் தனியார் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை கால அட்டவனைபடி தான் நடத்த வேண்டும். இப்போது, தனியார் பள்ளி கூட்டமைப்பு தள்ளிப்போன பாடங்களுக்கான தேர்வு நாளில், பள்ளிகள் மூடப்படும் என அறிவித்துள்ளன. அரசுப்பள்ளியில் அறிவிக்கப்பட்ட தேதியில் தேர்வு நடக்கும் என்பதால், தனியார் பள்ளிக்கு 7ம் தேதி வினாத்தாள் 'அவுட்' ஆக வாய்ப்புள்ளது.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement