Ad Code

Responsive Advertisement

'தனியார் பள்ளிகள் நாளை மூடப்படும்'

ஜெயலலிதாவை விடுதலை செய்யக் கோரி, சுயநிதி தனியார் பள்ளி நிர்வாகிகள், முதல்வர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம், நாளை, சென்னையில் உள்ள, கல்வி துறை இயக்குனர் அலுவலகத்தில் நடக்கிறது.

இதையொட்டி, 'அன்று ஒரு நாள், சுயநிதி தனியார் பள்ளிகள் அனைத்தும் செயல்படாது' என, தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு செயலர் இளங்கோவன் தெரிவித்தார்.சங்க நிர்வாகிகளின், அவசர ஆலோசனை கூட்டம், சென்னையில் நடந்தது. இதில், சங்க உறுப்பினர்களாக உள்ள, பள்ளி நிர்வாகிகள், அதிகளவில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து, இளங்கோவன் கூறியதாவது:கல்வி துறைக்காக, ஜெயலலிதா, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதற்கு ஆதரவு தெரிவித்தும், அவரை விடுதலை செய்ய கோரியும், சுயநிதி பள்ளிகளின் நிர்வாகிகள், முதல்வர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள், உணர்வை வெளிப்படுத்தும் வகையில், நாளை காலை, பள்ளி கல்வி துறை இயக்குனர் அலுவலகத்தில் கூட்டம் நடக்கும்.இதையொட்டி அன்றைய தினம், தமிழகம் முழுவதும் அனைத்து சுயநிதி தனியார் பள்ளிகள் இயங்காது.தமிழகத்தில், 4,000 மெட்ரிகுலேஷன் பள்ளிகள் உள்ளன. இதில், 3,500 பள்ளிகள் வரை இயங்காது. எங்களின், இந்த முயற்சிக்கு, பெற்றோர், மாணவர்கள் ஒத்துழைப்பு தருவர். ஒருநாள் பள்ளி மூடுவதால், பெரிய பாதிப்பு ஏற்படாது.இவ்வாறு, அவர் கூறினார்.

இந்த பிரச்னை குறித்து, மெட்ரிக் பள்ளிகளின் இயக்குனர் பிச்சையின் கருத்தை அறிய முயன்றபோது, அவர் தொடர்பில் வரவில்லை. 

இதற்கிடையில், கோவை மண்டல தனியார் மற்றும் சுயநிதி இன்ஜி., கல்லூரிகள் நிர்வாகிகள் கூட்டமைப்பின் செயலர் நடேசன் கூறுகையில், ''ஜெ.,வை விடுவிக்கக் கோரி, கோவை மண்ட லத்தில் செயல்படும் தனியார் மற்றும் சுயநிதி இன்ஜி., கல்லூரிகளை, நாளை மூட முடிவு செய்துள்ளோம். அன்றைய தினம் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

கல்வியியல் கல்லூரிகள் நாளை ஒருநாள் 'ஸ்டிரைக்':

அ.தி.மு.க., பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை விடுதலை செய்யக்கோரி, தனியார் கல்வியியல் கல்லூரிகள் அனைத்தும், நாளை (7ம் தேதி) ஒரு நாள் இயங்காது என, கல்வியியல் கல்லூரி கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, தமிழ்நாடு கல்வியியல் கல்லூரிகள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளரும், தர்மபுரி லட்சுமி அம்மாள் கல்வி அறக்கட்டளை தலைவர் வருவான் வடிவேலன் மற்றும் கூட்டமைப்பு நிர்வாகிகள் நடராஜன், ரூபன், சூரஜ்மல் ஜெயின், கருப்பண்ணன், அசோக்குமார் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை:அ.தி.மு.க., பொதுச் செயலாளர் ஜெயலலிதா, முதல்வராக இருந்தபோது, தமிழகத்தில் உயர்கல்வியை மேம்படுத்தி, இந்தியாவில் தமிழகத்தை உயர்கல்வியில் முதலிடத்தை பெறச் செய்ததுடன், பல்லாயிரக்கணக்கான ஆசிரிய, ஆசிரியைகளை உருவாக்கி, அவர்கள் குடும்பத்தை வளமையடைய செய்துள்ளார்.அவரை கைது செய்ததை கண்டிப்பதுடன், உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி, தமிழகத்திலுள்ள, 645 கல்வியியல் கல்லூரிகள், நாளை (7ம் தேதி) செயல்படாது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement