Ad Code

Responsive Advertisement

இலவசக் காலணிகள், புத்தகப் பைகளுக்கு கடுமையான தரப் பரிசோதனை அறிமுகம்

அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவசக் காலணிகள், புத்தகப் பைகள் ஆகியவை இந்த ஆண்டு முதல் கடுமையான தரப் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட உள்ளன.இவற்றின் தரத்தை தனியார் ஆய்வகங்கள் பரிசோதித்து வந்த நிலையில், முதல் முறையாக இலவசப் பொருள்களின் தரத்தைப் பரிசோதிக்கும் பொறுப்பு மத்திய அரசு நிறுவனங்களிடம் வழங்கப்பட்டுள்ளது.


மத்திய பிளாஸ்டிக் பொறியியல், தொழில்நுட்ப நிறுவனம் (சிப்பெட்), காலணிகள் வடிவமைப்பு, மேம்பாட்டு நிறுவனம் (எஃப்.டி.டி.ஐ.) ஆகிய மத்திய அரசு நிறுவனங்கள் ஒவ்வொரு நிலையிலும் இந்தப் பொருள்களின் தரத்தை உறுதிசெய்யும் என தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் கழக வட்டாரங்கள் தெரிவித்தன.

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை படிக்கும் 77 லட்சம் மாணவர்களுக்கு ஒரு ஜோடி இலவசக் காலணிகள் வழங்கப்பட உள்ளன. இந்தத் திட்டம் ரூ.120 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது.

அதேபோல், ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் சுமார் ஒரு கோடி மாணவர்களுக்கு இலவசப் புத்தகப் பைகள் ரூ.150 கோடியில் வழங்கப்பட உள்ளன. கடந்த ஆண்டு வரை இலவசக் காலணிகள், புத்தகப் பைகளைப் பரிசோதனை செய்யும் பொறுப்பு தனியார் ஆய்வகங்களிடம் வழங்கப்பட்டிருந்தது. இந்தப் பொருள்களின் தரத்தை உறுதிசெய்ய வேண்டும் என்பதற்காக மத்திய அரசு நிறுவனங்களிடம் தரத்தைப் பரிசோதிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் கழக வட்டாரங்கள் கூறியது:

இலவசக் காலணிகளை உற்பத்தி செய்து வழங்குவதற்கான ஆணைகள் 6 நிறுவனங்களிடம் வழங்கப்பட்டுள்ளன. இந்தக் காலணிகளின் தரத்தைப் பரிசோதிக்கும் பொறுப்பு காலணி வடிவமைப்பு, மேம்பாட்டு நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனத்தில் பணிபுரிபவர்கள், காலணிகள் உற்பத்தி செய்யப்படும் தொழிற்சாலைகளுக்குச் சென்று ஒவ்வொரு லட்சம் காலணிகளிலும் சில ஜோடி காலணிகளை எடுத்துப் பரிசோதிப்பார்கள். இதில் ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் குறிப்பிட்ட அந்தக் காலணியின் பிரிவில் (பேட்ச்) உற்பத்தி செய்யப்பட்ட அனைத்துக் காலணிகளும் நிராகரிக்கப்படும்.

ஒவ்வொரு பெட்டியிலும் அந்தக் காலணி விநியோகிக்கப்பட வேண்டிய மாவட்டம், பேட்ச் எண் உள்ளிட்டவை அச்சிடப்பட்டிருக்கும். பரிசோதனைக்குப் பிறகு நிராகரிக்கப்பட்ட காலணிகள் போக மீதமுள்ள காலணிகள் உள்ள பெட்டிகளில் எஃப்.டி.டி.ஐ. பரிசோதித்ததற்கான ஹாலோகிராம் குறியீடு பொறிக்கப்படும். இந்தக் குறியீடு இடப்பட்ட பெட்டிகள் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்கள், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகங்களில்தான் பிரிக்கப்பட வேண்டும் என்கிற உத்தரவும் வழங்கப்பட்டுள்ளது.

காலணி விநியோகத்துக்குப் பிறகும் பரிசோதனை: மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகம், உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் உள்ள அதிகாரிகளுக்கு சிறிய, நடுத்தர, பெரிய வகை காலணிகளில் வகை வாரியாக 5 ஆயிரம் காலணிகளுக்கு ஒரு ஜோடி காலணியை எடுத்து சென்னைக்கு அனுப்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்தக் காலணிகள் மீண்டும் எஃப்.டி.டி.ஐ. நிறுவனத்துக்கு அனுப்பப்படும். காலணிகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், அந்தப் பிரிவில் உள்ள அனைத்துக் காலணிகளையும் தயாரிப்பாளரே மீண்டும் எடுத்துக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தகப் பைகள்: அதேபோல், புத்தகப் பைகளின் தரத்தை மத்திய பிளாஸ்டிக் பொறியியல், தொழில்நுட்ப நிறுவனத்தின் அதிகாரிகள் பரிசோதிப்பார்கள். இந்தப் பைகளில் உள்ள இழைகளின் தரத்தை அறிய, அவற்றை அழுத்தத்துக்கு உள்படுத்துதல், எரித்தல் என பல்வேறு வகைகளில் சோதிக்கப்படும்.

பைகளில் ஏதேனும் குறை இருந்தால் அந்தப் பிரிவில் உள்ள புத்தகப் பைகள் அனைத்தும் நிராகரிக்கப்படும். காலணிகளில் இருக்கும் அனைத்துப் பரிசோதனைகளும் புத்தகப் பைகளுக்கும் பொருந்தும். கலர் பென்சில்கள், கிரேயான்கள் உள்ளிட்டவற்றுக்கும் இதேபோன்ற சோதனை நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இலவசக் காலணிகள் விநியோகம் ஆகஸ்ட் 2-ஆவது வாரத்தில் தொடங்குகிறது. செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் விநியோகம் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், புத்தகப் பைகள் விநியோகமும் அக்டோபருக்குள் முடிவடையும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement