Ad Code

Responsive Advertisement

அரசு பள்ளிகளில் அடிப்படை வசதி... : கலெக்டர் ஆய்வுக்கு பொதுமக்கள் கோரிக்கை

தர்மபுரி மாவட்டத்தில், அடிப்படை வசதிகள் இல்லாமல் இயங்கும், அரசு பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு, அப்பள்ளிகளில், அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்தில், அரசு துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம், 1,137 பள்ளிகள் உள்ளன. இதில், பெரும்பாலான பள்ளிகளில், போதிய கழிப்பறை மற்றும் தண்ணீர் வசதி இல்லாமல் உள்ளது. இதனால், பல துவக்க பள்ளிகளில் படிக்கும், மாணவ, மாணவிகள், பள்ளி வளாகத்தின் அருகே உள்ள திறந்த வெளிகளில், இயற்கை உபாதைகளை கழித்து வருகின்றனர்.
பல நடுநிலைப்பள்ளி, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி, மாணவ, மாணவிகள் இயற்கை உபாதைகளை கழிக்க, மறைவான பகுதிகளை தேடி செல்லும் நிலை உள்ளது. குறிப்பாக, தர்மபுரியை அடுத்த அதியமான்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி, நல்லம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள கழிப்பறைகள் தண்ணீர் வசதியின்றி, போதிய பராமரிப்பு இன்றி உள்ளது.
இக்கழிப்பறைகளை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், அருகில் உள்ள ரயில்வே லைன் ஓரங்களிலும், ஏரிக்கரையில் உள்ள புதர்கள் மறைவிலும், இயற்கை உபாதைகளை கழிக்க வேண்டிய அவல நிலையில், மாணவ, மாணவிகள் தள்ளப்பட்டுள்ளனர். புதர் மறைவில் இயற்கை உபாதைகளை கழிக்கும், மாணவ, மாணவிகளுக்கு, விஷஜந்துக்கள் தாக்கும் அபாயமும், மாணவிகளுக்கு, பாலியல் தொல்லைகள் அதிகரிக்கும் அபாயமும் உள்ளது.
மாநிலம் முழுவதும், திறந்த வெளியில் இயற்கை உபாதைகளை கழிக்கக்கூடாதென, அரசு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் விளம்பரங்களை அரசு செய்து வரும் வேளையில், தர்மபுரி மாவட்டத்தில், திறந்த வெளியில் இயற்கை உபாதையை கழிக்கும் நிலையில், மாணவ, மாணவிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
மாவட்டம் முழுவதும், அடிப்படை வசதிகள் இல்லாத அரசுப்பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு, வசதிகள் இல்லாத பள்ளிகளுக்கு, அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டுமென, கலெக்டருக்கு, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement