Ad Code

Responsive Advertisement

திட்டமிட்டு படித்தால் வி.ஏ.ஓ. தேர்வில் எளிதில் வெற்றி பெறலாம்

"மன தைரியத்துடன் திட்டமிட்டு படித்தால், வி.ஏ.ஓ. தேர்வில் எளிதில் வெற்றி பெறலாம்" என, தினமலர் நாளிதழ் சார்பில் திண்டுக்கல்லில் நடத்திய வி.ஏ.ஓ. தேர்வு ஆலோசனை முகாமில் தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் ஜூன் 14 ல் நடக்கும் வி.ஏ.ஓ. தேர்வில் விண்ணப்பித்தவர்கள் எளிதில் வெற்றி கொள்ள வழிகாட்டுதல் நிகழ்ச்சி, திண்டுக்கல் நாயுடு மகாஜன நல அறக்கட்டளை கல்யாண மண்டபத்தில் நடந்தது.
பொதுஅறிவு மற்றும் கூர்மைப்பகுதி குறித்து மதுரை "நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பாங்கிங்" நிர்வாக இயக்குனர் பி.வெங்கடாச்சலம் பேசியதாவது: இரண்டாயிரம் பணியிடத்திற்கு 9 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று மனம் தளரக்கூடாது. மன தைரியத்துடன் எந்த பகுதியை படிக்க வேண்டும் என்று திட்டமிட்டு படித்தால் வி.ஏ.ஓ. தேர்வில் எளிதில் வெற்றி பெறலாம்.
நுண்ணறிவுக்கு கேள்வி 20 கேட்கப்படும். இது உங்களின் புத்தி கூர்மையை சோதிக்கக்கூடியது. இந்த கேள்விகளுக்கு விடையளிக்க 5 ஆண்டு, கேள்வி மாதிரிகளை தெரிந்து கொள்ளவேண்டும். கணிதத்தில் "ரிஷனிங்க்" "கோவேர்டு" வட்ட விளக்கப்படங்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். ஐந்து முதல் 10 ம் வகுப்பு வரை உள்ள பள்ளி பாடங்களை முழுவதுமாக படித்தால், நீங்கள் கேள்விகளுக்கு திணறாமல் பதிலளிக்கலாம். கணித பாடத்தில் மி.பொ.வா. மி.சீ.மா. தெரியவேண்டும்.
அறிவியல் பாடத்தில் இயந்திரவியல், வேதியியல், உரியியல் பாடங்களை நன்றாக படித்து வைத்திருக்கவேண்டும். அணுக்கருவியல் தொடர்பாக நிறைய கேள்விகள் கேட்கப்படும். நடப்பு செய்திகளை கண்டிப்பாக தெரிய வேண்டும். இதற்கு செய்திதாள்கள் படிக்கவேண்டும்.
பொருளாதாரம், அரசியலும் தெரிந்திருக்க வேண்டும். தனிம அட்டவணைகள், விதிகள், உலகங்கள், கலவைகள், தாதுக்கள், அமிலம், வாயு, வேதிபெயர்கள் தெரிய வேண்டும். மாசுகள், கார்பன்,சமுதாய நலன் சம்பந்தமான கேள்விகள் அதிகம் கேட்கப்படும்.
தாவரவியலில் வைரஸ், பாக்டீரியா, நீராவி போக்கு, நரம்பு மண்டலம், கழிவு மண்டலம், ரத்த மண்டலம், பரவும் நோய்கள், முத்தடுப்பு மருந்து குறித்தும் கேட்கப்படும். வரலாற்றில் சம்பவங்கள், தலைவர்கள், போர்கள் என பலதகவல்களை படிக்க வேண்டும். உலக புவியியல், இந்திய புவியியல் என பிரித்து வைத்து படிக்க வேண்டும்.
இயற்கை சீற்றங்கள், நாம் படிக்கும் போது தேர்வு நோக்கில், தேர்வில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளை தேர்வு செய்து படிக்க வேண்டும். வரலாறு எளிதாக புரியும், ஆனால் எளிதில் நமது மனதை விட்டு விலகி விடும், அறிவியல் புரியாது, படித்து விட்டால் நமது மனதை விட்டு அகலாது, என்றார்.
கிராம நிர்வாக அலுவல் தொடர்பாக மதுரை காளிகாப்பான் கிராம நிர்வாக அலுவலர் ஏ.அன்பரசன் பேசியதாவது: முன்பெல்லாம் வேலைக்கு சென்ற பின்புதான் வி.ஏ.ஓ. வேலையை பற்றி தெரிந்து கொள்ளவேண்டும். தற்போது வேலைக்கு வருவதற்கு முன்பே வி.ஏ.ஓ. வேலையை தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக வி.ஏ.ஓ. வேலை சம்பந்தமான கேள்வி கேட்கப்படுகிறது. 1980 க்கு முன்பு பகுதி நேர வேலையாக இருந்த கிராம நிர்வாக அலுவலர் தொழில், தற்போது முழு நேர பணியாக மாறி விட்டது. கிராம நிர்வாக கணக்கில் 24 ஆவணங்கள் கையாளப்படுகிறது.
வி.ஏ.ஓ.,வுக்கு கணக்கு எண்-2 தான் முக்கியமானது. நிலத்தை நஞ்சை, புஞ்சை, புறம்போக்கு நிலங்கள், தீர்வைகள், பதிவேடுகள் தெரிந்து கொள்ளவேண்டும். கிராமத்தில் உள்ள கண்மாய், குளங்களை வரைப்படம் மூலம் தெரிந்து கொள்ளவேண்டும்.
தேர்தல் பணி, ஆக்கிரமிப்பு அகற்றம், அரசின் திட்டங்கள் நன்றாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். உழவர் பாதுகாப்பு திட்டம் தொடர்பாக பல கேள்விகள் கேட்கப்படும். கிராம நிர்வாக அலுவலகம் தொடர்பான அனைத்து பணிகளும் தெரிந்து வைத்திருந்தால், எளிதில் விடையளிக்கலாம், என்றார்.
தமிழ் பகுதி குறித்து திருமங்கலம் அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரி உதவியாளர் டி.கணேசன் பேசியதாவது: தமிழில் 75 வினாக்களுக்கும் முழு மதிப்பெண் பெறலாம். இதற்கு நீங்கள் தமிழ் கேள்வி தொடர்பான 50 தலைப்புகளை தெரிந்து கொள்ள வேண்டும். தமிழில் இலக்கணத்தில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணிகளை தெரிந்திருக்க வேண்டும். இதற்கு பள்ளி பாட புத்தகத்தை பின்பகுதிகளை படித்தால் போதுமானது.
தொகைகள், எச்சம், பொருள் எச்சம், பொருந்தா சொல், அக, புறநானாறுகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும். புணர்ச்சி விதிகள் குறித்து கட்டாயம் கேள்வி வரும். மரபு பிழைகள், பிற மொழி சொல்கள், தன் வினை, பிற வினை, செய்வினை, செயப்பாட்டு வினைகளையும் அறிந்து கொள்ள வேண்டும்.
இலக்கியத்தில் திருக்குறள், கம்பராமாயணம், அறநூல்கள், சிற்று இலக்கியங்கள் உட்பட பல நூல்களை இயற்றியவர்கள், அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பெயர்கள், அவர்களின் வாழ்க்கை குறிப்புகள், பிறந்த இடங்களையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். ஞானபீட விருது, சாகித்ய அகாடமி விருது, சிறுகதைகள் எழுதியவர்களை தெரிந்து வைத்திருந்தால் எளிதில் வெற்றி பெறலாம் என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement