Ad Code

Responsive Advertisement

மருத்துவ, பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான கட் ஆஃப் மதிப்பெண்களைக் கணக்கிடுவது எப்படி?

பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் உள்ள இடங்களுக்கு ஒற்றைச்சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்த மாணவர் சேர்க்கைக்கான ரேங்க் பட்டியல், பிளஸ் டூ தேர்வில் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடப்பிரிவுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தயாரிக்கப்படுகிறது. அதாவது கணிதப்பாடத்தில் 100 மதிப்பெண்களுக்கு மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள் எவ்வளவு என்று பார்க்கப்படும்.
இயற்பியல், வேதியியல் ஆகிய இரு பாடப்பிரிவுகளையும்  சேர்த்து 100 மதிப்பெண்களுக்கு எவ்வளவு மதிப்பெண்கள் என்று கணக்கிடப்படும். இந்த இரண்டையும் சேர்த்து 200 மதிப்பெண்களுக்கு மாணவர்கள் எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றுள்ளார்களோ அதுதான் கட் ஆஃப் மதிப்பெண்கள் என்று சொல்லப்படும் தகுதி மதிப்பெண்களாகும். இதன் அடிப்படையில்தான் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு மாணவர் கணக்கில் 180 மதிப்பெண்களும் வேதியியலில் 180 மதிப்பெண்களும் இயற்பியலில்  190 மதிப்பெண்களும் பெற்றிருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவரது கட் ஆஃப் மதிப்பெண்கள் 182.5 தொழிற்பயிற்சிப் பாடப்பிரிவு மாணவர்களைப் பொருத்தவரை தொடர்புடைய பாடத்திற்கு நூறு மதிப்பெண்களும் தொழிற்பயிற்சிப் பாடத்திற்கு (தியரி மற்றும் பிராக்டிக்கலைச் சேர்த்து) நூறு மதிப்பெண்களும் சேர்த்து 200-க்கு எவ்வளவு என்பதன் அடிப்படையில் கட் ஆஃப் மதிப்பெண்கள் கணக்கிடப்படுகிறது. பொதுப் பிரிவு மாணவர்களுக்கு கவுன்சலிங் நடைபெறுவதற்கு முன்னதாகவே தொழிற்பயிற்சிப் பிரிவு (வொகேஷனல்) மாணவர்களுக்கான கவுன்சலிங் தனியே நடத்தப்படும்.

பி.ஆர்க். படிப்புகளுக்குத் தனியே ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டு கவுன்சலிங் நடத்தப்படும். நேட்டா நுழைவுத் தேர்வில் மாணவர்கள் 200-க்கு எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள் என்பதுடன், பிளஸ் டூ தேர்வில் மாணவர்கள் பெற்றுள்ள மொத்த மதிப்பெண்களில் 200-க்கு எவ்வளவு எடுத்துள்ளார்கள் என்பதும் கணக்கிடப்பட்டு பி.ஆர்க். ரேங்க் பட்டியல் தயாரிக்கப்படும்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளைப் பொருத்தவரை உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடத்துக்கு நூறு மதிப்பெண்களுக்கு எவ்வளவு மதிப்பெண்கள் என்றும் வேதியியல் மற்றும் இயற்பியல் பாடங்களுக்கு நூறு மதிப்பெண்களுக்கு எவ்வளவு மதிப்பெண்கள் என்றும் கணக்கிடப்பட்டு மாணவர்கள் 200-க்கு எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றுள்ளார்கள் என்பதன் அடிப்படையில் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்படும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement