Ad Code

Responsive Advertisement

அரசு பள்ளிகளில் சூட்டப்பட்ட ஜாதி பெயரை நீக்க கோரி வழக்கு

அரசு பள்ளிகளுக்கு ஜாதி பெயர் சூட்டப்பட்டிருந்தால், அதுபற்றி அரசு துறையிடம் மனு அளிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.சரவணன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில்,  சாதிகள் இல்லாத சமத்துவ சமுதாயம் படைக்க வேண்டும் என்பது எல்லோருடைய விருப்பம்.


அதைத்தான் பாரதியார் முதல் பல்வேறு தமிழ் அறிஞர்களும் சுட்டிக் காட்டியுள்ளனர். ஆனால் பள்ளிகள், கல்வி நிலையங்களில் மாணவ, மாணவியருக்கு சாதி, சமுதாயத்தைக் குறிப்பிடச் சொல்லித்தான் சேர்க்கை வழங்கப்படுகிறது.இதை ஒதுக்க முடியவில்லை என்றாலும் கூட, அரசுப் பள்ளிகள், கல்லூரிகளின் பெயர்கள் ஒரு குறிப்பிட்ட சாதி அல்லது சமுதாயத்தின் பெயர்களைக் குறிக்கும் வகையில் உள்ளது.இந்த கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்கள் அந்த கல்வி நிலையங்களைக் குறிப்பிடும் போது அதிலும் சாதியம் பூசப்படுகிறது. எனவே சாதி அல்லது சமுதாயங்களின் பெயர்களில் உள்ள கல்வி நிலையங்களின் பெயர்களை உடனடியாக நீக்கி உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது அரசு தரப்பு வழக்குரைஞர் ஆஜராகி, சிறுபான்மையின கல்லூரிகளில் தான் சாதி அல்லது சமுதாயப் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அந்தக் கல்லூரிகளின் பெயர்கள் மற்றும் நிர்வாகத்தில் தேவையின்றி, தமிழக அரசு தலையிட முடியாது. 

ஏனெனில் அவை தனியார் கல்லூரிகள் நிர்வாகச் சட்டம் 1976-ன் கீழ் செயல்படுபவை.மனுதாரர் குறிப்பிடுவது போல அரசு கல்லூரிகள், பள்ளிகளில் எதுவும் அதுபோன்ற சாதிப் பெயர்களில் இல்லை என்றார்.அப்போது குறுக்கிட்ட மனுதாரர் தரப்பு வழக்குரைஞர், சாதி, சமுதாயப் பெயர்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் பட்டியலை தாக்கல் செய்தார்.இரு தரப்பு வாதங்களுக்கு பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இதுதொடர்பாக மனுதாரர் தன்னிடம் உள்ள சாதி அல்லது சமுதாயத்தை குறிப்பிடும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களின் பட்டியலை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தாக்கல் செய்ய வேண்டும். ஒருவேளை மனுதாரர் குறிப்பிடுவது போல அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களின் பெயர்கள் இருந்தால் அதுகுறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என்று கூறி மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement