Ad Code

Responsive Advertisement

தயாராகிறது புதிய திட்டம் : சந்தாதாரர்கள் வீடு வாங்க பிஎப் நிறுவனம் உதவ முடிவு

சந்தாதாரர்கள் வீடு வாங்க உதவுவதற்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பான திட்டம் வரையறை செய்ய நிபுணர் குழு பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ளது. வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இபிஎப்ஓ) சார்பில் 2 நாள் முன்பு டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில், தொழிலாளர் நிதியை பங்குகளில் முதலீடு செய்வது மற்றும் வீட்டுக்கடன் வழங்குவதற்கான நிதி நிறுவனங்களில் முதலீடு செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது. இதுகுறித்து ஆராய நிபுணர் குழுவுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா கூறுகையில், ‘‘பிஎப் நிதியை முதலீடு செய்வதற்கு உள்ள வழிமுறைகளையும், சாத்தியக்கூறுகளையும் விரிவு படுத்துவதற்கு முடிவு செய்துள் ளோம். இதற்காக நிபுணர் குழு அமைப்பதற்கும் திட்டமிட்டுள்ளோம் என்றார்.

இந்த கூட்டத்தில் வருங்கால வைப்பு நிதி நிறுவன சந்தாதாரர்களுக்கு குறைந்த விலை பிரிவிலான வீடுகள் வாங்குவதற்கு உதவுவது குறித்தும் முடிவு செய்யப்பட்டது. பிஎப் நிதியின் ஒரு பகுதியை பங்குச்சந்தையில் முதலீடு செய்லாம் அல்லது வீட்டுக்கடன் வழங்கும் நிறுவனங்களில் முதலீடு செய்து, அதன் சந்தாதாரர்கள் வீடு வாங்குவதற்கு உதவ முடியும் என்று தொழிலாளர் நலத்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். 
பிஎப் உறுப்பினர்களுக்கு வீடு வாங்குவதற்கு வகை செய்வதற்கான திட்டத்தை வடிவமைப்பது குறித்து தொழிலாளர் பணியாற்றும் நிறுவனங்களின் பிரதிநிதிகள், வீட்டு வசதி மேம்படுத்துதல் தொடர்பான நிபுணர்கள் கொண்ட சிறப்பு குழுவிடம் ஒப்படைக்க வருங்கால வைப்பு நிதி வாரியத்தின் அறக்கட்டளை குழு முடிவு செய்துள்ளது.

இந்த புதிய திட்டத்தின் மூலம் ரூ.15,000க்கு கீழ் சம்பளம் வாங்கும் பிஎப் உறுப்பினர்கள் வீடு வாங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உருவாகும் என மத்திய பிஎப் ஆணையர் கே.கே.ஜலான் தெரிவித்துள்ளார். நிபுணர் குழுவினர் திட்டத்தை வடிவமைத்தல் மற்றும் சாத்தியக்கூறுகள் குறித்து தங்கள் அறிக்கையை இன்னும் 4 மாதங்களில் தர உள்ளனர். இதற்கிடையே, பிஎப் நிறுவனத்தி டம் உள்ள நிதி மூலதனத்தில் 15 சதவீதத்தை குறைந்த விலை வீட்டுக்கடனுக்காக முதலீடு செய்ய பிரதமர் அலுவலம் பரிந்துரைத்துள்ளது.  சொந்த வீடு என்பது சமூக பாதுகாப்பின் ஓர் அம்சமாக இருக்கிறது. அதுமட்டுமின்றி, தற்போதைய மத்திய அரசு அனைவருக்கும் வீடு என்பதை இலக்காக கொண்டுள்ளது. 

பிஎப் நிறுவனம் சந்தாதாரர்களுக்கு வீட்டுக்கடன் வழங்குவது சாத்தியமில்லை. ஏனெனில், பிஎப் நிறுவனம் இந்த விஷயத்தில் நிபுணத்துவம் கொண்டிருக்கவில்லை. அதற்கு பதிலாக எந்த திட்டத்தின் மூலம் சந்தாதாரர்களுக்கு சிறந்த பலன் கிடைக்குமோ அதை செயல்படுத்தலாம் என்று பிஎப் நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே, பிஎப் நிறுவனம் இறுதி முடிவு எடுப்பதற்கு முன்பாக இந்த புதிய திட்டம் நிபுணர் குழுவால் வரையறுக்கப்படும். இதன்மூலம் பிஎப் நிறுவனம் வீட்டுக்கடன் வழங்கும் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படலாம். அல்லது வீட்டுக்கடன் வழங்கும் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்வது என்ற முடிவும் எடுக்கப்படலாம் என தெரிகிறது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement