Ad Code

Responsive Advertisement

ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வில் வெளிப்படை தன்மை வேண்டும்: கல்வித்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

 ஆசிரியர்கள் பணியிட மாற்றத்துக்கான கலந்தாய்வை (கவுன்சிலிங்) வெளிப்படைத் தன்மையுடன் நடத்த வேண்டும் என்று கல்வித் துறையினருக்கு உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்டம் டி.எம்.கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் உயிரியல் பாடத்துக்கான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியராகப் பணி யாற்றும் வி.வையனன் மனு தாக்கல் செய்திருந்தார்.
கடந்த 2012-2013-ம் ஆண்டில் 100 அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. அவ்வாறு திருநெல்வேலி மாவட்டத்தில் 4 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டன. அந்தப் பள்ளிகளில் இருந்த உயிரியல் முதுநிலைப் பட்டதாரி ஆசியருக்கான 3 காலியிடங்கள் ஆசிரியர் பணியிட மாற்றத் துக்கான கலந்தாய்வின் போது காட்டப்பட வில்லை. இதனால் நான் ராமநாதபுரம் மாவட்ட பள்ளியை தேர்வு செய்தேன்.
திருநெல்வேலி மாவட்டத்தில் 3 காலியிடங்கள் இருந்தது பற்றி கலந்தாய்வின்போது தெரிவிக்கப்பட்டிருந்தால், நான் திருநெல் வேலி மாவட்டத்திலேயே ஏதேனும் ஒரு பள்ளியில் சேர்ந்திருப்பேன். இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் நான் தாக்கல் செய்தி ருந்த மனுவை தனி நீதிபதி தள்ளுபடி செய்துவிட்டார். அதனை எதிர்த்து நான் மேல் முறையீடு செய்தேன்.
அந்த வழக்கில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தீர்ப்பளித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், இனி வரும் காலங்களில் கலந்தாய்வை வெளிப்படைத்தன்மையுடன் நடத்தும்படியும், விதிமுறைகளின்படி எனது பணியிட மாற்றம் கோரும் விண்ணப்பத்தை பரிசீலிக் கும் படியும் உத்தரவிட்டனர்.
எனினும் அதன் பிறகு கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த கலந்தாய்விலும் காலி யிடங்களை முழுமையாகக் காட்டாமல் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு அதிகாரி கள் பணியிட மாறுதல்வழங்கினர். குறிப்பாக கலந்தாய் வின்போது காலியிடப் பட்டியலில் காட்டப் படாத தூத்துக்குடி மாவட்டம் ராமானுஜம் புதூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ஒரு ஆசிரியருக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. அந்த ஆசிரியருக்கு வழங்கப் பட்ட பணியிட மாறுதல் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். மீண்டும் புதிதாக பணியிட மாறுதல் நடத்த உத்தரவிட வேண்டும் என்று வையனன் தனது மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி டி.ஹரி பரந்தாமன் இம்மாதம் 23-ம் தேதி பிறப்பித்த தீர்ப்பில் கூறியுள்ளதாவது:
பணி அனுபவ அடிப்படையில் சீனியர் ஆசிரியர்கள் இருக்கும்போது அவர்களை விட்டுவிட்டு ஜூனியர் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வோ அல்லது பணியிட மாறுதலோ வழங்கக் கூடாது என்பதே வெளிப்படைத்தன்மையுடன் கூடிய கலந்தாய்வின் நோக்கமாகும்.
எனினும் நிலைமை மாறவில்லை. இந்த வழக்கில் மனுதாரருக்கு ஆதரவாக உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் கூட அவருக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. பணியிட மாறுதல் நடவடிக்கை கள் யாவும் வெளிப்படைத் தன்மை இல்லாமல் ரகசியமாக நடந்துள்ளன.
இதற்கிடையே நடப்பாண் டுக்கான பணியிட மாறுதல் ஜூன் 24-ம் தேதி முதல் நடக்கவுள்ளதாகவும், வெளிப் படைத்தன்மையுடன் அந்த கலந்தாய்வை நடத்திடவும், விதிமுறைகளுக்குட்பட்டு மனுதாரரின் கலந்தாய்வு விண்ணப்பத்தை பரிசீலிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார்.
ஆகவே, ஆசிரியர் பணியிட மாற்றத்துக்கான கலந்தாய்வை வெளிப்படைத்தன்மையுடன் நடத்தும்படி பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் இணை இயக்குநருக்கு இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement