கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ள மாட்டூல் என்ற இடத்தை சேர்ந்தவர் ரபீக். இவரது மனைவி மரியும்மா. இவர்களுக்கு 15 வயதான அப்ரா என்ற மகளும், ஒன்றரை வயதான முகம்மது என்ற ஆண் குழந்தையும் உள்ளது. அப்ராவுக்கு பிறக்கும் போதே முதுகெலும்பு தசைநார் சிதைவு என்ற நோய் இருந்தது. இந்த அபூர்வ நோய் பாதித்தால் எழுந்து நடக்க முடியாது. 


இந்த நோயை குணப்படுத்தும் சோல்ஜென்ஸ்மா என்ற மருந்தின் விலை 18 கோடி. ரபீக்கால் இந்த மருந்தை வாங்க முடியாததால் அவருடைய மகள் அப்ரா இப்போதும் வீட்டில் தான் முடங்கிக் கிடக்கிறார். இந்நிலையில் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன் ரபீக்கிற்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.  துரதிர்ஷ்டவசமாக அந்தக் குழந்தைக்கும் அபூர்வ முதுகெலும்பு தசை நார் சிதைவு நோய் பாதித்தது.


தன்னுடைய 2 குழந்தைகளுக்கும் அபூர்வ நோய் பாதிப்பு ஏற்பட்டதால் ரபீக்கின் குடும்பம் நிலைகுலைந்து போனது. இந்நிலையில் அவரது மகள் அப்ரா, தன்னுடைய தம்பியின் சிகிச்சைக்கு 18 கோடி  விலையுள்ள மருந்தை வாங்க அனைவரும் உதவ வேண்டும் என்று கூறி சமூக இணையதளங்களில் ஒரு வீடியோவை பகிர்ந்தார். இந்த வீடியோ ஒரு சில நிமிடங்களிலேயே வைரலாக பரவியது. 


வீடியோவில் குறிப்பிட்டிருந்த வங்கிக் கணக்கில் பணம் குவியத் தொடங்கியது. கேரளா மட்டுமில்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், துபாய், குவைத் நாடுகளில் இருந்தும் பணம் வரத் தொடங்கியது. இரண்டே நாளில் அந்த மருந்துக்கு தேவையான 18 கோடி கிடைத்தது.  இதைடுத்து இனி யாரும் பணம் அனுப்ப வேண்டாம் என்று ரபீக் தெரிவித்துள்ளார்.