Ad Code

Responsive Advertisement

ஓட்டல்களில் பார்சல் கட்ட கேரி பேக்குகளை எச்சில் தொட்டு பிரிக்க கூடாது: உயர் நீதிமன்றம் அறிவுரை

 




உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் உணவுப்பொருட்களை பார்சல் செய்யும் போது எச்சிலை தொடவும், வாயால் ஊதவும் கூடாது என்று சுற்றறிக்கை வெளியிட வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுரை வழங்கி உள்ளது.  சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல வழக்கில் கூறியிருப்பதாவது: 


தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகம் ஏற்பட்டதால் முழு ஊரடங்கு 2 வாரங்களுக்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பிறகு தொற்று குறைவு காரணமாக சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், தொற்று பரவுவதற்கு மேலும் பல காரணங்கள் தொடர்ந்து உள்ளன. 


அதாவது, உணவகங்கள், மளிகை கடைகள், பேக்கரிகளின் மூலம் தொற்று பரவும் அபாயம் உள்ளது. உணவகங்கள், ஓட்டல்கள், மளிகை கடைகள், பேக்கரிகளில் பார்சல் உணவுகள் சப்ளை செய்யப்படும்போதும் அவற்றை பேக்கிங் செய்யும்போதும் அந்த கேரி பேக்குகளை பிரிக்கும் ஊழியர்கள் நாக்கில் எச்சிலை தொட்டு பிரிக்கும் பழக்கம் அதிகம் உள்ளது.


இந்த உணவு பாக்கெட்டுகளை வாங்கி செல்லும் வாடிக்கையாளர்கள் அந்த ஊழியரின் எச்சில் மூலம் நோய் தொற்று பரவ அதிக வாய்ப்புள்ளது. பெரும்பாலான உணவு பொருட்கள் அலுமினிய தாளில் பேக்கிங் செய்யப்படுவதால் அவற்றை பிரிப்பதற்கு எச்சிலை பயன்படுத்துகிறார்கள்.  


எனவே, இதை தடுக்கும் வகையில் உணவு பண்டங்களை வாங்கி செல்லும் வாடிக்கையாளர்கள், ஓட்டல்கள், கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் இடையே கொரோனா தொற்று விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.   இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.


வழக்கை விசாரித்த நீதிபதி, இது ஒரு நல்ல ஆலோசனையாகும். இதை கருத்தில்கொண்டு அனைத்து உணவகங்கள், ஓட்டல்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்பவர்கள் ஆகியோருக்கு உரிய அறிவுறுத்தல்களை தமிழக அரசு வழங்கும் வகையில் அறிவிப்பு வெளியிட வேண்டும். உணவகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். எச்சிலை பயன்படுத்தி பேக்கிங் கவர்களை பிரிக்கவோ ஊதவோ கூடாது என்று அறிவுறுத்த வேண்டும். இந்த நடைமுறைகளை அமல்படுத்தி அடுத்த வாரம் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.





Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement