Ad Code

Responsive Advertisement

``பெரியாரின் பகுத்தறிவு சித்தாந்தங்களைக் கேட்டும், படித்தும் வளர்ந்தவள் நான் - சாதிய அடையாளங்களோடு என்னைப் பார்க்காதீர்கள்!" - மாவட்ட ஆட்சியர் அதிரடி

 


``பெரியாரின் பகுத்தறிவு மற்றும் சீர்திருத்தச் சித்தாந்தங்களைக் கேட்டும், படித்தும் வளர்ந்தவள் நான். பெரியார் அறிவுறுத்திய சில கொள்கைகளை என் வாழ்க்கையில் செயல்படுத்துபவள். அதில் முக்கியமானது, சாதி எதிர்ப்பு."





தமிழகம் முழுவதும் உயர் அதிகாரிகள் பலரும் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக கவிதா ராமு ஐ.ஏ.எஸ் நியமிக்கப் பட்டுள்ளார்.


மாநில ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட இயக்குநராகப் பணிபுரிந்த கவிதா ராமு, புதுக்கோட்டை மாவட்டத்தின் 41வது ஆட்சியராக ஜூன் 17-ம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். பொறுப்பேற்ற பின் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,


``பெண்ணுரிமைப் போராளி, மாமேதை, சமூகப் போராளி, முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி பிறந்த ஊரில் ஆட்சியராகப் பணிபுரிவதைப் பெருமையாகக் கருதுகிறேன். தமிழக முதல்வர், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ஆட்சித் தலைவர்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து தேவையான அறிவுரைகளை வழங்கியுள்ளார். அதன்படி செயல்பட உள்ளேன்.



புதுக்கோட்டை மாவட்டத்தில் சுற்றுலாத்தலங்கள் அதிகம் இருக்கின்றன. எனவே, அவற்றை மேம்படுத்துதல், மகளிர் கல்வி, வேலைவாய்ப்புகள், வேளாண்மைத்துறை ஆகியற்றின் மீது கூடுதல் கவனம் செலுத்தப்படும். அருங்காட்சியக இயக்குநராக நான் பணியாற்றியபோது, புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்தின் மேம்பாட்டுப் பணிகளுக்காக இந்திய அரசின் நிதி ஒதுக்கப்பட்டது. அப்பணிகளின் தற்போதைய நிலை குறித்து விரைவில் ஆய்வு செய்வேன்.


தொல்லியலில் முக்கியத்துவம் வாய்ந்த புதுக்கோட்டையில் சுற்றுலா வளர்ச்சி குறித்து கவனம் செலுத்துவேன். குறிப்பாக, மக்கள் நலத்திட்டங்களை விரைவாகக் கொண்டு சேர்த்து, பொதுமக்கள் தெரிவிக்கும் நியாயமான கோரிக்கைகள் மீது உடனுக்குடன் உரிய நடவடிக்கை மேற்கொள்ள உள்ளேன்" என்றார்.



இந்நிலையில், கவிதா ராமுவின் புதிய பொறுப்பு குறித்து, சமூக வலைதளங்களில் அவருக்குப் பலரும் வாழ்த்துகளைப் பரிமாறினர். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், கவிதா ராமு, தன் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்


அதில், ``என்னுடைய புதிய பொறுப்புக்கு பலரும் வாழ்த்துகள் தெரிவித்து இருக்கின்றனர். அனைவரின் வாழ்த்துகளுக்கும் அன்புக்கும் நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.





அதே நேரம், குறிப்பிட்ட சாதி அடையாளம் கொண்ட சில பதிவுகளிலும் நான் டேக் செய்யப்பட்டு இருப்பது வருத்தமளிக்கிறது. என்னைப் பற்றி முழுமையாகத் தெரியாதவர்களுக்கு நான் இதைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். சமூக மறுமலர்ச்சி இயக்கங்களுக்குப் பெயர் போன மாநிலத்தைச் சேர்ந்தவள் நான். சமூக நீதி என் கருத்தாக்கங்களில் ஆழப் பதிந்துள்ளது.  




பெரியாரின் பகுத்தறிவு மற்றும் சீர்திருத்தச் சித்தாந்தங்களைக் கேட்டும், படித்தும் வளர்ந்தவள் நான். பெரியார் அறிவுறுத்திய சில கொள்கைகளை என் வாழ்க்கையில் செயல்படுத்துபவள். அதில் முக்கியமானது, சாதி எதிர்ப்பு. எனவே, எந்த ஓர் அடையாத்திலிருந்தும் விடுபட்டு இருக்கும் என்னை, நீங்களும் அப்படியே பார்க்கக் கேட்டுக்கொள்கிறேன்.




அடையாளங்கள் சுமையாகிவிடுகின்றன. சில அடையாளங்கள் மனித இனத்துக்கு எதிராக அமையும் வண்ணம் உருவாக்கப் பட்டிருக்கின்றன. எனவே, நடனம் ஒன்றை மட்டுமே என் தனித்த அடையாளமாகச் சொல்லிக்கொள்ள நினைக்கிறேன். சக மனுஷியாக, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சமூக நீதிக்கான பாதையில் என் சிறப்பான செயல்பாட்டைக் கொடுப்பேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.


இது குறித்து கவிதா ராமுவிடம் பேசினோம். ``நான் தனிப்பட்ட நபர்களின் திறமை மற்றும் சமூகச் செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவர்களை மதிக்கிறேன். சாதிகள் இல்லாத உலகம் உருவாக வேண்டும் என்பதே எனது கருத்து மற்றும் ஆசை'' என்றார்.



Post a Comment

3 Comments

  1. மிக்க அருமை ஆட்சியர் அவர்களே

    ReplyDelete
  2. வாழ்த்துகள் சகோதரி மேடம் 🎉🎉🎉🎉🎉 தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்

    ReplyDelete

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..

நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை

Ad Code

Responsive Advertisement