Ad Code

Responsive Advertisement

கொரோனா உதவி - தம் மாணவர்களின் குடும்பங்களை நெகிழவைத்த அரசுப்பள்ளி ஆசிரியர்கள்!

 


``எங்களால் முடிந்த தொகையை ஒதுக்கி எங்க பள்ளி மாணவர்கள் 126 பேர், பள்ளி தூய்மைப்பணியாளர், சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையலர்களுக்கு 10 கிலோ அரிசிப்பைகளை வழங்கினோம். பிள்ளைகளின் பெற்றோர்கள் அனைவரும் மிகவும் மகிழ்ந்தார்கள்".





புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே கவரப்பட்டியில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. ஊரடங்கு நேரத்திலும் இப்பள்ளி ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களை வாட்ஸ் அப் மூலம் படிக்க வைப்பதுடன், வாசிப்பு, ஓவியம், நடனம் என அவர்களின் தனித்திறன்களையும் ஊக்குவித்து வருகின்றனர். 


இங்கு பணிபுரியும் ஆசிரியை மீனா, மெய்யெழுத்துகளைத் தன் மாணவர்கள் எளிதாகக் கற்றுக்கொள்ளும் வகையில் பாடி, ஆடி வெளியிட்ட வீடியோ சில மாதங்களுக்கு முன் சமூக வலைதளங்களில் செம வைரல்.






இந்நிலையில், இந்தக் கொரோனா சூழலிலும் பொதுமுடக்கத்திலும் தங்கள் மாணவர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரத்துக்கே சிரமப்படுவதை அறிந்த இந்தப் பள்ளி ஆசிரியர்கள், அது குறித்து மிகவும் வருந்தினர். 


அதோடு நிற்காமல் அதற்குத் தங்களால் ஆன உதவியைச் செய்ய முடிவெடுத்தனர். பள்ளி மாணவர்கள் மற்றும் தூய்மைப்பணியாளர், சமையலர்கள், பள்ளியில் பணிபுரியும் ஊழியர்கள் என 130-க்கும் மேற்பட்டோருக்கு, ஒவ்வொருவருக்கும் தலா 10 கிலோ வீதம் ரூ.50,000 மதிப்பிலான அரிசிப்பைகளை வழங்கி அனைவரையும் நெகிழ வைத்திருக்கின்றனர்.






இதுபற்றிப் பேசிய இடைநிலை ஆசிரியை மீனா, ``எங்கள் பள்ளிக்கு அருகில் இருக்கும் பாட்னாபட்டி அரசு தொடக்கப் பள்ளியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அங்குள்ள ஆசிரியர்கள் மூன்று பேர் சேர்ந்து தங்கள் மாணவர்களுக்குத் தங்களால் முடிந்த நிவாரண உதவிகளைச் செய்தனர். 


அதைப் பார்த்ததும்தான், இத்தனை நாளாக எங்கள் பிள்ளைகளின் குடும்பங்கள் படும் கஷ்டம் பற்றி நாங்கள் அறியாமல் போய்விட்டோமே என்று வருத்தமாக இருந்தது. உடனே, எங்கள் மாணவர்களின் பெற்றோர்களிடம் பேசினோம். அப்போதுதான் அவர்களின் கஷ்டங்கள் புரிந்தது. குறிப்பாக, உணவுப் பொருள்கள்தான் அவர்களின் முதன்மையான தேவை என்று புரிந்தது.


எங்கள் பள்ளி தலைமையாசிரியர் விசாலாட்சி தாமாக முன்வந்து, ``உடனடியாக நாமும் ஒவ்வொரு வீட்டுக்கும் அரிசிப்பைகளைக் கொடுக்கலாம்" என்றார்.



தலைமையாசிரியை, ஆசிரியைகள் காவேரியம்மாள், பெஞ்சமின், நான் என அனைவரும் ஒன்று சேர்ந்து எங்களால் முடிந்த தொகையை ஒதுக்கி எங்க பள்ளி மாணவர்கள் 126 பேர், பள்ளி தூய்மைப்பணியாளர், சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையலர்களுக்கு 10 கிலோ அரிசிப்பைகளை வழங்கினோம். பிள்ளைகளின் பெற்றோர்கள் அனைவரும் மிகவும் மகிழ்ந்தார்கள். எங்களாலான உதவிகளைத் தொடர்ந்து அவர்களுக்குச் செய்ய வேண்டும்.


பாட்னாப்பட்டி தொடக்கப்பள்ளி ஆசிரியர்களைப் பார்த்துத்தான் எங்கள் பிள்ளைகளுக்கு உதவும் யோசனை எங்களுக்குத் தோன்றியது. எங்களைப் பார்த்து பிற அரசுப் பள்ளி ஆசிரியர்களும் இந்த முயற்சியைத் தொடர்ந்தால் சிறப்பாக இருக்கும்'' என்றார்.








Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement