Ad Code

Responsive Advertisement

கொரோனா 3வது அலை குழந்தைகளை அதிகமாகப் பாதிக்குமா? நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல் என்ன?

 




நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில், அடுத்த அலை வரக்கூடும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் பரவியிருக்கிறது. உண்மை என்ன?


மூன்றாவது அலை குழந்தைகளை அதிகமாகப் பாதிக்கும், உயிரிழப்புகள் அதிகமாக இருக்கும், முன்பை விட மிக வேகமாகப் பரவும் என்றெல்லாம் அச்சம் ஏற்பட்டிருக்கிறது.


ஆந்திர பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட பல முக்கிய மாநிலங்கள் மூன்றாவது அலையைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடங்கியிருக்கின்றன.


தமிழ்நாட்டில் கடந்த 3-ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநிலத்தில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டிருக்கிறது. ஆக, நாடு முழுவதும் மூன்றாவது அலையை எதிர்கொள்ளும் ஏற்பாடுகள் தொடங்கி விட்டன.


தவிர்க்க முடியாததா மூன்றாவது அலை?


"தனி நபர் கட்டுப்பாடுகள் பின்பற்றப்படா விட்டாலும், தடுப்பூசியை போதிய அளவில் வழங்க முடியாவிட்டாலும் மூன்றாவது அலையைத் தவிர்க்க முடியாது" என்கிறார் தமிழக அரசின் மருத்துவ ஆலோசனைக் குழுவில் அங்கம் வகிக்கும் தொற்றுநோய் சிறப்பு மருத்துவர் குகானந்தம்.


"மூன்றாவது அலை வருவதற்கான வாய்ப்பில்லை என்று ஒதுக்கிவிட முடியாது. ஒவ்வொரு அலையிலும் அதிக பாதிப்புகள் ஏற்படுவதற்கு புதிதாக உருவாகும் வைரஸ் திரிபுகளே முக்கியமான காரணமாக அமைந்திருக்கின்றன. இரண்டாவது அலையின்போதும் புதிய திரிபுகள்தான் அதிகம் பேரைப் பாதித்தன. அந்த வகையில் பிரேசில் நாட்டில் இருந்து B.1.1.28.2 என்ற புதிய திரிபு கண்டறியப்பட்டிருக்கிறது. இதுபோன்ற திரிபுகள் அடுத்த அலையைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன " என்கிறார் சென்னை மருத்துவக் கல்லூரியின் சமூக நோயியல் பேராசிரியர் சித்ரா.


கொரோனா

பட மூலாதாரம்,GETTY IMAGES

"உலகின் பல்வேறு நாடுகளிலும் மூன்றாவது அலை தாக்கியிருக்கிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் மூன்றாவது அலையைப் பார்த்திருக்கிறோம். நூறு ஆண்டுகளுக்கு முன்பு உலகைத் தாக்கிய ஸ்பேனிஷ் ஃப்ளூ பெருந்தொற்றுக் காலத்திலும் பெரிய அளவில் மூன்று அலைகள் உலக நாடுகளைத் தாக்கியிருக்கிறது. இந்த அனுபவங்களின் அடிப்படையில் கொரோனா பெருந்தொற்றிலும் மூன்றாவது அலையை எதிர்பார்த்திருக்க வேண்டியது அவசியமாகிறது" என்கிறார் விஞ்ஞான் பிரசார் அமைப்பின் டி.வி.வெங்கடேஸ்வரன்.


பிரேசில் மற்றும் பிரிட்டனில் கண்டறியப்பட்ட கொரோனாவின் புதிய திரிபை வெள்ளெலிகளில் பரிசோதனை செய்ததில் அவை உடல் எடையைக் குறைப்பதுடன், மூச்சுக் குழாயில் பல்கிப் பெருகும் என்றும் நிபுணர்கள் கண்டுபிடித்திருப்பதாகவும் வெங்கடேஸ்வரன் குறிப்பிட்டார்.


"இந்தியாவில் அதிகமாகப் பரவி வரும் டெல்டா வகையைத் தவிர பிற திரிபுகள் வருவதன் காரணமாக மூன்றாவது அலை வருவது நிச்சயம். இந்த ஆண்டுக்குள் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆயினும் உறுதியாகக் கணிக்க முடியாது" என்கிறார் தொற்றுநோய் நிபுணர் ராம்கோபால்


மூன்றாவது அலையைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்?


தடுப்பூசி

பட மூலாதாரம்,GETTY IMAGES

"குறைந்தபட்சம் 50 சதவிகிதம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டால் மட்டுமே கொரோனாவின் மூன்றாவது அலையைத் தடுக்க முடியும்" என்று கூறுகிறார் குகானந்தம். அரசிடம் இது வலியுறுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


தமிழ்நாட்டில் கடந்த 7-ஆம் தேதி வரை சுமார் ஒரு கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருப்பதாக அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இரண்டு டோஸ்களும் போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 21 லட்சம் மட்டுமே. இது மொத்த மக்கள் தொகையில் 3 சதவிகிதத்துக்கும் குறைவு.


ஒட்டுமொத்தமாக இந்தியாவை எடுத்துக் கொண்டால் 23 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டிருக்கின்றன. ஆனால் 4.66 கோடி பேருக்கு மட்டுமே இரண்டு டோஸ் தடுப்பூசி கிடைத்திருக்கிறது. நாட்டின் எந்தப் பெரிய மாநிலத்திலும் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 10 சதவிகிதத்தைத் தாண்டவில்லை.


"மருத்துவ கட்டமைப்பில் முன்னிலையில் இருக்கும் தமிழ்நாடு, தடுப்பூசி போடுவதில் பின்தங்கியிருப்பது துரதிருஷ்டவசமானது. மூன்றாவது அலை வராமல் தடுப்பதில் இது மிகப்பெரிய சவாலாக இருக்கும்" என்கிறார் மருத்துவர் ராம்கோபால்


தடுப்பூசி

பட மூலாதாரம்,GETTY IMAGES

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்கா 63 சதவிகிதம் பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டிருக்கிறது. அங்கு பாதிப்பு குறைவதற்கும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதற்கும் இதுவே முக்கியமான காரணம்.


ஆனால் இந்தியாவில் பொதுமுடக்கங்கள் மூலமாகவே பரவல் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. அதனால் தளர்வுகள் அளிக்கும்போது தன்னிச்சையாகவே தொற்றும் அதிகரிக்கத் தொடங்கிவிடும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். ஏற்கெனவே பிரேசில் போன்ற நாடுகளில் இதுபோன்ற நிலை ஏற்பட்டதையும் சுட்டிக்காட்டுகிறார்கள்.


மூன்றாவது அலை எப்படியிருக்கும்?


அண்மையில் கேரள சட்டப்பேரவையில் பேசிய அந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், "மூன்றாவது அலையில் மிக வேகமாகப் பரவும் புதிய கொரோனா திரிபு அதிகம் பேருக்கு பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது" என்று பேசினார். யாரெல்லாம் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் இருக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் அதிகப் பாதிப்பையும் உயிரிழப்பையும் ஏற்படுத்தும் என்றும் வீணா ஜார்ஜ் கூறினார்.


"மூன்றாவது அலையில் தடுப்பூசி போடாதவர்கள் இணைநோய் இருப்பவர்கள், வயதானவர்கள் ஆகியோரே அதிகமாகப் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது" என்கிறார் பேராசிரியர் சித்ரா.


மூன்றாவது அலையில் குழந்தைகள் அதிகமாகப் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக பெற்றோர் மத்தியில் அச்சம் ஏற்பட்டிருக்கிறது. குழந்தைகளுக்கு இதுவரை தடுப்பூசிகள் வழங்கப்படவில்லை. கடந்த ஆண்டில் இருந்து பெரும்பாலான குழந்தைகள் இதுவரை வீட்டை விட்டு வெளியே சென்றிருக்க மாட்டார்கள். அவர்களிடம் கொரோனாவுக்கான எதிர்ப்பு ஆற்றல் உருவாகியிருக்க வாய்ப்பில்லை என்ற கருத்தும் பரவியிருக்கிறது.


கொரோனா

பட மூலாதாரம்,GETTY IMAGES

முதல் அலையில் வயதானவர்களும் இரண்டாவது அலையில் இளம் வயதினரும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அடுத்த அலையில் குழந்தைகள் அதிகமாகப் பாதிக்கப்படுவார்கள் என்றும் மக்கள் பரவலாக அஞ்சுகிறார்கள்.


ஆனால் இது முற்றிலுமாக உண்மையில்லை என்று மறுக்கிறார் வெங்கடேஸ்வரன்.


"கொரானாவின் இரு அலைகளிலும் வயது வாரியாகப் பாதிக்கப்பட்டோரின் புள்ளிவிவரங்களை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டிருக்கிறது. இவற்றைக் கொண்டு பார்க்கும்போது வயது ரீதியாகப் பாதிக்கப்பட்டோரின் விகிதங்களில் பெரிய மாற்றம் ஏதும் இல்லை" என்கிறார் அவர்.


முதல் அலை, இரண்டாவது அலையில் பாதிக்கப்பட்டோரின் சராசரி வயதில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் தெரியவில்லை என்றும் வெங்கடெஸ்வரன் தெரிவித்தார்.


"முதல் அலையைக் காட்டிலும் இரண்டாவது அலையில் உயிரிழப்பு எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது. இதில் அனைத்து வயதுடையோரும் அடங்குவர். இளைஞர்களின் உயிரிழப்பு அதிகமாகத் தெரியவந்ததால், அவர்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டது போன்ற தோற்றம் ஏற்பட்டிருக்கிறது" என்கிறார் மருத்துவர் ராம்கோபால்







Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement