Ad Code

Responsive Advertisement

மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்க 5 இடங்களில் தொழில்நுட்ப திறன் வளர்ச்சி மையம்: முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து

மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்க தொழில்நுட்ப திறன் வளர்ச்சி மையம் அமைக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: 

தமிழ்நாடு மாணவர்களுக்கு உலகளவில் சிறந்த நவீன தொழில்நுட்ப பயிற்சி வழங்கும் வகையில் முன்னோடித் திட்டமாக தமிழ்நாடு அரசும் மற்றும் தனியார்துறை கூட்டமைப்பு திட்டத்தின்கீழ் திறன் மையம் மற்றும் அதனுடன் ஐந்து தொழில்நுட்ப திறன் வளர்ச்சி மையங்கள் ₹548 கோடியே 84 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்க தமிழ்நாடு அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, அண்ணா பல்கலைக்கழகம், சீமென்ஸ் மற்றும் டிசைன்டெக் லிமிடெட் நிறுவனங்களுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இத்திறன் மையமானது அண்ணா பல்கலைக்கழகத்தின் சென்னை, குரோம்பேட்டையில் உள்ள எம்ஐடி வளாகத்தில் ஏற்படுத்தப்படும். தொழில்நுட்ப திறன் வளர்ச்சி மையங்கள் சென்னை, தரமணியில் உள்ள மத்திய தொழில்நுட்பக் கல்லூரி, காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரத்திலுள்ள அண்ணா பல்கலைக் கழக கல்லூரிகள், ஆவடியில் உள்ள முருகப்பா தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் வேலூரில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி ஆகிய இடங்களில் அமைக்கப்படும். இந்த கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ,மாணவியர் நவீன தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ளவும், பயிற்சி பெறவும், சிறந்த வேலைவாய்ப்பு பெற்றிடவும் இத்திட்டம் வழி வகுக்கும்.

இத்திட்டத்தில், முதல் மூன்று வருடங்களுக்கான செயல்முறை செலவை சீமென்ஸ் மற்றும் டிசைன்டெக் நிறுவனங்கள் ஏற்பதோடு, இம்மையங்களில் சிறப்பு பயிற்சி அளிக்க பயிற்றுநர்களையும் ஏற்பாடு செய்யும். மூன்று வருடங்களில் ஏற்படுத்தப்படும் வசதிகள் அக்கல்வி நிலையங்களுக்கு மூன்றாவது வருட முடிவில் ஒப்படைக்கப்படும். 
மூன்றாம் ஆண்டு இறுதியில் அந்தந்த கல்வி நிறுவனங்கள் இம்மையங்களை ஏற்று இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தும். அதற்கு சீமென்ஸ் மற்றும் டிசைன்டெக் நிறுவனங்கள் தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்புகளை வழங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement