Ad Code

Responsive Advertisement

60 மதிப்பெண்ணை 'அபேஸ்' செய்த கல்வி துறை : ஆசிரியர்கள் தப்பு கணக்கால் மாணவன் கதறல்!!



தேர்வுத் துறையின் தப்புக் கணக்கால், பிளஸ் 2 தேர்வில், 60 மதிப்பெண்களை இழந்து, மாணவன் தவிக்கிறான். உயர்கல்விக்கு வேட்டு வைக்கும் வகையில் செயல்பட்ட அதிகாரிகள், ஆசிரியர்கள் மீது, யார் நடவடிக்கை எடுப்பது என, கேள்வி எழுந்துள்ளது.


சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, பி.ஏ.கே.பழனிசாமி மேல்நிலைப் பள்ளி மாணவன், சரத்குமார். கணக்கு பதிவியல் பாடத்தில், மதிப்பெண் குறைந்ததால், விடைத்தாள் நகல் பெற்றார்.

அதை ஆய்வு செய்த போது, கூட்டல் பிழையால், 60 மதிப்பெண்கள் விடுபட்டிருப்பது தெரிய வந்தது.



  மாணவனின் விடைத் தாள், பாரதி என்ற ஆசிரியையால் திருத்தப்பட்டு உள்ளது. இவர், விடைத்தாளின் முன்பக்கத்தில், மதிப்பெண்ணை பக்க வாரியாகவும், வினா வாரியாகவும் குறிப்பிட்டு கூட்டியதில், 60 மதிப்பெண்களை தவற விட்டுள்ளார். கூட்டல் பிரச்னை வந்ததால் தான், வினா மற்றும் பக்க வாரியாக தனித்தனி பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இரு பட்டியலிலும் கூட்டலில் வேறுபாடு இருந்தால், மறு ஆய்வு செய்து, மதிப்பெண் இறுதி செய்யப்படும்.

சரத்குமாரின் விடைத்தாளில், இரு வகை மதிப்பெண் கூட்டு தொகையும், 200 வருகிறது. ஆனால், 140 என, குறிப்பிடப்பட்டு உள்ளது. அதிலும், 30 பக்கங்களில் உள்ள மதிப்பெண்களை கூட்டாமல், 12 பக்கங்களில் உள்ளவற்றை மட்டுமே குறிப்பிட்டு, 140 என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. பக்க மதிப்பெண்களை கூட்டினால், 200 மதிப்பெண் வருகிறது. கூட்டு தொகையை ஆய்வு செய்த துறை அதிகாரியும், தலைமை திருத்துனரும், மதிப்பெண் ஆய்வு அதிகாரியும், பிழையை கண்டு கொள்ளாமல், கையெழுத்து போட்டுள்ளனர். பொதுத் தேர்வில் ஒரு மதிப்பெண் குறைந்தாலே, எத்தனையோ உயர்கல்வி வாய்ப்புகள் பறிபோகும். 60 மதிப்பெண்களை, 'அபேஸ்' செய்த தேர்வுத் துறையையும், கல்வித் துறை அதிகாரிகளையும், ஆசிரியரையும் என்ன செய்வது என, மாணவர்களும், பெற்றோரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.


கல்லுாரி 'சீட்' கிடைக்குமா? : தற்போதைய நிலையில், 1,098 மதிப்பெண் எடுத்துள்ள மாணவன் சரத்குமார், முக்கிய கல்லுாரிகளில், பி.காம்., இடம் கிடைக்காமல் தவித்து வருகிறான். விடுபட்ட, ௬௦ மதிப்பெண்கள் கிடைத்தால், மிக எளிதாக இடம் கிடைக்கும். ஆனால், மறுகூட்டல் முடிந்து, திருத்திய மதிப்பெண் வரும் போது, மாணவன் விரும்பிய கல்லுாரியில் இடம் காலியாக இருக்குமா என, கேள்வி எழுந்துள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement