Ad Code

Responsive Advertisement

கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் திறப்பு : கல்வித்துறையில் 41 புதிய அறிவிப்புகள்

சட்டப் பேரவையில் வருகிற 15ம் தேதி கல்வி மானியக்கோரிக்கையின்போது 41 வகையான அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் மாதம் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை ஏப்ரல் மாதம் அறிவித்தது. 

ஆனால் மே மாதம் முடிந்தும் வெயில் கடுமையாக இருந்ததால் பள்ளிகள் திறக்கும் தேதி ஜூன் 7ம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து நேற்று அனைத்து வகைப் பள்ளிகளும் திறக்கப்பட்டன. காலை 9.30 மணிக்கு பள்ளிகள் தொடங்கம் என்பதால் நேற்று காலை 8.30 மணிக்கே மகிழ்ச்சியுடன் மாணவ- மாணவியர் பள்ளிக்கு வரத் தொடங்கிவிட்டனர். கல்வித்துறையின் உத்தரவுபடி 9 மணிக்கே ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்துவிட்டனர்.

இந்த கல்வி ஆண்டின் பள்ளி திறப்பு விழாவையொட்டி  பள்ளிகள் தூய்மை செய்யப்பட்டு, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.  பெரும்பாலான பள்ளிகளில் நேற்று அலங்காரம் செய்திருந்தனர். சில பள்ளிகளில் வாழை மரம், மாந்தோரணம் உள்ளிட்டவை கட்டி கொண்டாடினர். 

நேற்று பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகம், நோட்டுகள், புத்தகப்பை, கிரையான்கள், பென்சில்கள், வரைபடப்புத்தகம், சீருடைகள் (இரண்டு செட்) என 14 இலவச பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த கல்வி ஆண்டுக்காக புதிய மாணவர்கள் சேர்க்கையும் நேற்றே தொடங்கியது. முதல் வகுப்பு, 6ம் வகுப்புகளில் மாணவ- மாணவியர் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கும் புதிய சீருடை, இலவச புத்தகம் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்நிலையில் பள்ளிகள் திறப்பை முன்னிட்டு சென்னையில் விருகம்பாக்கம் அரசுப் பள்ளியில் இலவச பொருட்கள் வழங்கும் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக் கல்வித்துறை செயலாளர் உதய சந்திரன், மற்றும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் இந்த விழாவில் பங்கேற்றனர். 

இலவசப் பொருட்களை வழங்கியபின் அமைச்சர் அளித்த பேட்டி: வரும் 15ம் தேதி சட்டப் பேரவையில் 41 வகையான அறிவிப்புகள் வெளியிடப்படும். பிளஸ் 1 தேர்வு வைத்துள்ளதால் அதற்கான விடைத்தாள் மற்றும் வினாத் தாள் எப்படி இருக்கும் என்ற அச்சம் மாணவர்களுக்கு இருக்கும் அது தொடர்பான மாடல்கள் ஒரு வாரத்தில் வெளியிடப்படும். நீட் தேர்வு தமிழகத்தில் விலக்கு பெறுவதற்கான முயற்சிகள் நடக்கிறது. அரசுப் பள்ளிகளில் ஆண்டுதோறும் மாணவர்கள் குறைந்து வருவதாக கூறப்படுவது உண்மையில்லை. இந்த ஆண்டு ஒரு லட்சத்துக்கும் மேல் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement