Ad Code

Responsive Advertisement

TET : 2012க்கு முன்பு பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும் - உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து விலக்களிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் அரசு பதில் தருமாறு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணிபுரிந்து வரும் திருவேற்காடு சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் கடந்த 2010 முதல் குழந்தைகளுக்கான கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வைக் கொண்டு வந்தது.

இதன்படி தமிழக அரசு  ஆசிரியர் தகுதித்தேர்வை தமிழகத்தில் அமல்படுத்த உத்தரவிட்டது. தமிழகத்தில் இதற்கான 28.3.2012-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தமிழகத்தில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. ஆனால் இந்த அறிவிப்பாணை வெளிவரும் முன்பாகவே பணிக்குச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு விதிலக்கு அளிக்கப்படவில்லை. 

தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் விதிமுறைகள் மற்றும் அறிவிப்பாணைப்படி, தமிழகத்தில் கடந்த 2012 முதல் தற்போது வரை ஆண்டுக்கு 2 முறை என மொத்தம் 10 ஆசிரியர் தகுதித்தேர்வுகளை தமிழக அரசு நடத்தியிருக்க வேண்டும்.  ஆனால் தமிழகத்தில் இதுவரை கடந்த 2012 ஜூலை, 2012 அக்டோபர் (துணைத் தேர்வு), 2013 ஜூலையில் மட்டுமே இத்தேர்வு நடத்தப்பட்டுள்ளது. 

அதன்பிறகு நீண்ட இடைவெளிக்குப்பிறகு தற்போது 2017 ஏப்ரலில் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இத்தேர்வு நடத்தப்பட்டுள்ளது. கடந்த 2014, 2015 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் நடத்தப்பட வேண்டிய ஆசிரியர் தகுதித்தேர்வுகள் நடத்தப்படவில்லை.  ஆனால் ஏற்கெனவே பணியில் உள்ள நாங்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற இதுதான் கடைசி வாய்ப்பு என அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். சிறுபான்மையினர் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இத்தேர்வில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதுபோல 2012க்கு முன்பாக பணியில் சேர்ந்த அனைத்து ஆசிரியர்களுக்கும் விதிவிலக்கு அளிக்க வேண்டும்.

மேலும் தற்போது தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில், நாடு முழுவதும் உள்ள 11 லட்சம் ஆசிரியர்களின் நலன் கருதி ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறும் காலக்கெடுவை வரும் 31.3.2019 வரை நீட்டித்துள்ளது. எனவே அதுவரை ஏற்கெனவே பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு இந்தாண்டு நடந்த தேர்வு தான் கடைசி வாய்ப்பு எனவும், தேர்ச்சி பெறாதவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவர் எனவும் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். 

அதுபோல இந்த மனு நிலுவையில் இருக்கும் வரை நாங்கள் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என நிர்பந்தம் செய்யக்கூடாது என உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கோரியிருந்தனர்.  

இந்த மனுக்கள் நீதிபதி டி.ராஜா முன்னிலையில் விசாரணைக்கு வந்தன.  மனுவை விசாரித்த நீதிபதி, பள்ளிக்கல்வித்துறை இயக்குநரக அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் ஜூன் 3வது வாரத்திற்கு தள்ளி வைத்தார். அதுவரை மனுதாரர்களை இந்தாண்டே ஆசிரியர் கல்வித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என நிர்பந்திக்கக்கூடாது எனவும் உத்தரவிட்டார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement