Ad Code

Responsive Advertisement

பொறியியல் கல்லூரிகளுக்கும் 'நீட்' : மத்திய அரசு ஆலோசனை

மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லுாரிகளுக்கு, நாடு முழுவதும் ஒரே பொது நுழைவுத் தேர்வான, 'நீட்' கொண்டு வரப்பட்டதைபோல், பொறியியல் கல்லுாரிகளுக்கும் கொண்டு வர, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.


நாடு முழுவதும் உள்ள மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை, 'நீட்' எனப்படும் பொது நுழைவுத் தேர்வு மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆண்டு இந்த நுழைவுத் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது.

தற்போது நாடு முழுவதும், 3,300க்கும் மேற்பட்ட அங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்லுாரிகள் உள்ளன. இவற்றில் ஒவ்வொரு ஆண்டும், 16 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். 

நீட் பாணியில், பொறியியல் கல்லுாரிகளுக்கும், பொது நுழைவுத் தேர்வு நடத்த, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஏற்கனவே ஒப்புதல் அளித்துஉள்ளது. இதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன.இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, மூன்றாண்டுகளை நிறைவு செய்வது குறித்து, மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது:

நீட் தேர்வு என்பது, நுழைவுத் தேர்வை வெற்றிகரமாக நடத்தி, அதன் முடிவுகளை வெளியிடுவதுடன் முடிவடையாது. கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை எவ்வாறு நடக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். மாணவர்களின் திறமை வெல்கிறதா, பணம் வெல்கிறதா என்பதை, இந்த நுழைவுத் தேர்வு முடிவு செய்யும்.இதுபோலவே, பொறியியல் கல்லுாரிகளிலும், திறமையுள்ள மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில், பொது நுழைவுத் தேர்வு கொண்டு வர, ஏற்கனவே கொள்கை அளவில் தீர்மானித்து, அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இருப்பினும், மருத்துவக் கல்வியில் மாணவர் சேர்க்கை முடிவடையும் வரை காத்திருக்க உள்ளோம். வரும், ஜூலைக்கு பிறகு, பொறியியல் கல்விக்கான நுழைவுத் தேர்வு குறித்து முடிவு எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement