Ad Code

Responsive Advertisement

தடையை மீறி பதிவான பத்திரங்களுக்கு ரூ.5,000 அபராதம்'

தடையை மீறி பதிவு செய்யப்பட்ட, அங்கீகாரமில்லா மனை பத்திரங்களுக்கு,
தலா, 5,000 ரூபாய் அபராதம் விதிக்கும் ஆலோசனையை, நீதிமன்றத்தில் தெரிவிக்க, தமிழக அரசு, சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருகிறது. அங்கீகாரமில்லா மனைகள் பத்திரப்பதிவு செய்ய, சென்னை உயர் நீதிமன்றம், 2016 செப்., 9ல், தடை விதித்தது.

தமிழக அரசின் அரசாணைகளை ஏற்று, இந்த தடையை, மே, 4ல் நீக்கியது. 'தடைக்காலத்தில் பதிவான, 9,760 பத்திரங்கள் செல்லாது' என, நீதிமன்றம் அறிவித்தது. மேலும், இதன் உண்மை நிலவரத்தை தாக்கல் செய்ய, நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, பத்திரப்பதிவுத் துறை தலைமையகத்திற்கு, மண்டல, டி.ஐ.ஜி.,க்கள் அனுப்பிய அறிக்கைகள் தொகுக்கப்பட்டு வருகின்றன. இதில், தடையை மீறி, 90 ஆயிரம் பத்திரங்கள் பதிவானதாக தெரிய வந்துள்ளது.


அபராதம் : இது குறித்து, பதிவுத் துறை தலைமையக உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:

இந்த அறிக்கைகளை முழுமையாக ஆய்வு செய்யும் போது, தடையை மீறி பதிவான பத்திரங்களின் எண்ணிக்கை, 1.50 லட்சத்தை தாண்டலாம். இதன் உண்மை நிலவரத்தை மீண்டும் ஆய்வு செய்ய, ரகசிய குழுவை அனுப்ப, பதிவுத் துறை, ஐ.ஜி., ஆலோசித்து வருகிறார்.

இவ்வளவு பத்திரங்களையும் ரத்து செய்தால், பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்படும்.

எனவே, தடையை மீறி பதிவான ஒவ்வொரு பத்திரத்துக்கும், 5,000 ரூபாய் அபராதம் விதிக்கவும், அதை, சொத்தின் தற்போதைய உரிமையாளரிடம் இருந்து வசூலிக்கவும், ஆலோசித்து

வருகிறோம். சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து, இது தொடர்பான மனு, வழக்கின் அடுத்த விசாரணையின் போது, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். தவறு செய்த அதிகாரிகள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement