Ad Code

Responsive Advertisement

விளையாட்டு போட்டிகளுக்கு 3 மாதம் கெடு : ஆசிரியர்கள், மாணவர்கள் அதிர்ச்சி.

பள்ளி அளவிலான விளையாட்டு போட்டிகளை, மூன்று மாதத்தில் முடிக்க, கல்வித்துறை கெடு விதித்துள்ளதால், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


தமிழக அரசு, விளையாட்டு மேம்பாட்டிற்காக, ஆண்டுக்கு, 90 கோடி ரூபாய்க்கும் மேல், நிதி ஒதுக்குகிறது. பள்ளி மாணவர்களின் விளையாட்டுக்கு மட்டும், 20 கோடி கிடைக்கிறது. பள்ளி மாணவர்களுக்கு, ஜூன் துவங்கி, டிசம்பர் வரை, விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும்.

வரும் கல்வியாண்டில், விளையாட்டு போட்டிகளை, ஆக., மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என, உடற்கல்வி இயக்குனர்களுக்கு, தமிழக பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து, உடற்கல்வி ஆசிரியர்கள் கூறியதாவது: அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், போதிய உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லை. இருக்கும் ஆசிரியர்களை,'டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்'களாகவும், அலுவலக பணிகளை செய்வோராகவும், தலைமை ஆசிரியர்கள் மாற்றி விடுகின்றனர்.

இந்த நெருக்கடிக்கு மத்தியில், கூடுதல்நேரம் ஒதுக்கி, பயிற்சி அளித்து, அவர்களை போட்டிக்கு தயார் செய்கிறோம். பல நேரங்களில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானங்கள், பள்ளி மாணவர்களின் பயிற்சிக்கு கிடைப்பது இல்லை. அப்படியும், மண்டலம் முதல், மாநிலம் வரையில், பல கட்ட விளையாட்டு போட்டிகளை நடத்திவருகிறோம். பள்ளி துவங்கிய, மூன்று மாதத்திற்குள் அனைத்து போட்டிகளை முடிக்க, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மூன்று மாதங்களுக்குள், மாநில போட்டிகளுக்கு பயிற்சி அளிப்பது எப்படி; ஆசிரியர் காலியாக உள்ள இடங்களில் பயிற்சி கொடுப்பது யார்; மைதானங்கள் கிடைக்காத பிரச்னைக்கு முடிவு என்ன என்றெல்லாம், கல்வி அதிகாரிகள் யோசிக்கவில்லை.

போட்டிகளுக்கு பின், பரிசு கொடுக்கும் விழாவுக்கு, 'பந்தாவாக' வரும் அதிகாரிகள், மைதானத்தில் பயிற்சி அளிக்கும் போது வந்தால், மாணவர்கள், ஆசிரியர்களின் நடைமுறை சிக்கல்கள் தெரியும். இதை மனதில் கொண்டு, போட்டிக்களுக்கான காலத்தை நீட்டிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement