Ad Code

Responsive Advertisement

ரூ.600ல் நவீன சிறுநீர் கழிப்பிடம்: அரசு பள்ளி மாணவர்களுக்கு விருது


திருச்சி:பள்ளி வளாகத்தில், 600 ரூபாய் செலவில், நவீன சிறுநீர் கழிப்பிடத்தை ஏற்படுத்தி, அரசு பள்ளி மாணவர்கள் விருது பெற்றுள்ளனர்.


திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே, ஏ.குரும்பப்பட்டியில் உள்ள யூனியன் நடுநிலைப்
பள்ளியில், 97 மாணவர்கள் படித்து வருகின்றனர்; ஏழு ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இங்குள்ள சிறுநீர் கழிக்கும் இடம், சிறுநீர் வெளியேற வடிகால் இன்றி, சுகாதாரமற்ற முறையில் இருந்தது.


இந்நிலையில், அகில இந்திய அளவில், பள்ளிகளின் அடிப்படை தேவைகள் தொடர்பான புதிய கண்டுபிடிப்பு போட்டியை, 'டிசைன் பார் சேஞ்ச்' என்ற நிறுவனம் நடத்தியது.இந்த போட்டிக்காக, 'பாதுகாப்பான சிறுநீர் கழிப்பிடம்' என்ற தலைப்பில், பள்ளி ஆசிரியர் கேசவன் மற்றும் ஐந்து மாணவர்கள் இணைந்து களத்தில் இறங்கினர்.


இதன்படி, சுகாதாரமற்ற முறையில் இருந்த சிறுநீர் கழிப்பிடத்தை சுத்தம் செய்து, பெயின்ட் அடித்துள்ளனர். நவீன சிறுநீர் பேசின்கள் அமைக்க அதிக செலவாகும் என்பதால், பழைய, 20 லிட்டர் குடிநீர் கேன்களை வாங்கி, அதை பேசின்கள் போல் வெட்டி, அவற்றில் தண்ணீர் உள்ளே செல்லும் அளவுக்கும், சிறுநீர் வெளியே செல்லும் அளவுக்கும் குழாய்களை பதித்து, பள்ளியின் சிறுநீர் கழிப்பிடத்தில் பொருத்தியுள்ளனர்.

பார்ப்பதற்கு நவீன கழிப்பிடம் போலவே அமைக்கப்பட்ட இது, தற்போது பள்ளி மாணவர்களின் சுகாதார சிறுநீர் கழிப்பிடமாக மாறியுள்ளது. இதற்கு, 600 ரூபாய் மட்டுமே செலவாகியுள்ளது.
ஆசிரியர் கேசவன் கூறியதாவது: கடந்த, 3, 4ம் தேதிகளில் குஜராத் மாநிலம், ஆமதாபாத் நகரில் நடந்த டி.எப்.சி., விழாவில், நாட்டின் சிறந்த, ஐந்து படைப்புகளில், இந்த சிறுநீர் கழிப்பிடமும்
ஒன்றாக தேர்வு செய்யப்பட்டு, 50 ஆயிரம் ரூபாயுடன், விருதும் வழங்கப்பட்டது.

மாணவர்களிடம் சிந்தித்து செயல்படும் திறன் அதிகம் உண்டு. அவற்றை துாண்டுவிடும் பணியை ஆசிரியர்கள் செய்தால் போதும்; அவர்கள் ஜொலிப்பர். இந்த சிறுநீர் கழிப்பிடம் அமைக்க குறைந்த செலவே ஆகும் என்பதால், எந்த இடத்திலும் இதை அமைக்கலாம்.
இதற்காக, எஸ்.எஸ்.ஏ., மூலம் மாணவர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது, என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement